ஊடகவியலாளர் மீதான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம்- ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்

ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் தனது கண்டனம்

ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் தனது கண்டனம்: ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தனது ஊடக அறிக்கைக்கான செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கொடூரமான தாக்குதலுக்குட்பட்டுள்ளமையிற்கு கண்டனத் தெரிவிக்கின்றோம் என ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் தனது கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“2021 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி காலை முல்லைத்தீவில் ‘முள்ளிவாய்க்கால்’ என பெயர் இடம்பட்டிருந்த பலகையினை புகைப்படம் எடுத்தபோது ஊடகவியலாளர்  வி.விஸ்வச்சந்திரன் முள்ளுக்கம்பியால் சுற்றி பிணைத்து பனைமரத்தடியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ வீரர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக  தெரியவருகின்றது.

WhatsApp Image 2021 11 28 at 11.08.40 PM ஊடகவியலாளர் மீதான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம்- ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்

முல்லைத்தீவு ஊடகக் கழகத்தின்; பொருளாளரும் ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டரியிடம் இது குறித்து வினவிய போது, ​​சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தாக்குதல் தொடர்பான  விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றதுடன், அவ்வப்போது பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது.

ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீதான கொடூரத் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்பான ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குலானது அனைத்து ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செய்தி வெளியிடும் உரிமை மீதான அச்சுறுத்தலாக நாங்கள் கருதுகிறோம். இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர்  உட்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.தர்மினி