“நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி

470 Views

நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு

நடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாளில்  விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவித்த அவர்,

வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அது எமது பாரம்பரிய கலாசார முறை என்றும் நாட்டில்  அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்றோம்.  மாறாக விடுதலை புலிகளின் தடை செய்யப்பட்ட கொடி போன்ற பொருட்களை எதனையும் நாங்கள் எங்கும் காட்சிப்படுத்தி நினைவு கூரவில்லை. நாட்டின் சட்டத்திட்டங்களை மீறி நாங்கள் எதனையும் செய்யவில்லை . சட்டத்திற்கு உட்பட்டு எமது உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்றோம். இதற்காக நீதிமன்றம் வரையும் சென்றிருக்கின்றோம் .

எமது உறவுகளை நினைவு கூருவதற்கு எமக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு வரையும் சென்று பல்வேறு அரச தரப்பு பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வலியுறுத்தியிருந்தோம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றி எனது சாட்சியத்தை வழங்கியிருந்தேன், அதற்குப் பின்னர் அச்சுறுத்தும் செயற்பாடாக  பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன். இவ்வாறான விசாரணைகள் முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் மீது சுமத்தப்படும் போது நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கும் நிர்ப்பந்தத்திற்கும் நாங்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply