பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்-  இந்திய இராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு  

பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில்  பாதுகாப்பு படையினரால் 13 பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினர் மீது அம் மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்னும்  மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இங்குள்ள ஒடிங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை இரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது, பணி முடித்துவிட்டு வாகனத்தில்  வந்துகொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை, கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத்தில் இந்திய இராணுவத்தின் ‘பாரா’ சிறப்புப் படையினர் மீது நாகாலாந்து மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் அமலாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.