01. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு நாளை (22) மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வழங்கப்பட உள்ளது.
குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதியான நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் நீதிபதி இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நாளைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் 31 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், குறித்த வழக்குகளில் 5 வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு 3 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும் கடமையை அலட்சியப்படுத்தியமை உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவை நிரூபிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு அண்மையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
அத்தோடு மாவனெல்லை பகுதியில் 7 புத்தர் சிலைகளும் ஒரு தெய்வத் திருவுருவச் சிலையும் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 11 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்த மூன்று வழக்குகளைத் தொடர்ந்து விசாரணைகள் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மேலும் 3 வழக்குகளுக்கான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளன.
புத்தளம் பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் மற்றும் வெடிமருந்து களஞ்சியசாலை ஒன்றை பராமரித்து வந்த விவகாரம் தொடர்பில் 6 சந்தேகநபர்களுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் தொடரப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திறம்பட விசாரணை செய்வதற்காக, குறித்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்கு தயாராகியுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் குண்டுதாக்குதல் நடத்தவுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவல்களை அறிந்திருந்தும் அதனை மறைத்தமை உள்ளிட்ட 23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகளின் கீழ், மௌலவிகள் உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னர் 17 ஆவது பிரதிவாதி சிறைச்சாலையில் உயிரிழந்தமையினால் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வழக்கில் இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சமர்ப்பித்து நிறைவு செய்துள்ளனர்.
மேலும், சஹ்ரானின் தற்கொலைக்குண்டுதாரி குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அரச சாட்சியாக மாறியதன் மூலம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலதிக மன்றாடியர் நாயகம் ஹரிப்பிரியா ஜெயசுந்தர, மேலதிக மன்றாடியர் நாயகம் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் அரசத் தரப்பில் முன்னிலையாக வழக்கை நெறிப்படுத்தியிருந்தனர்.
அதற்கமைய நாளை (22) காலை 9.00 மணிக்கு முன்னர் அனைத்துப் பிரதிவாதிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அத்தியட்சகர்களுக்கு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.



