ஒற்றையாட்சி தமிழ் சமூகத்தினுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் : கஜேந்திரகுமார்.

02. ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது என்றும் அது முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சட்டத்தரணி க.சுகாஸின் தமிழன் கனவு எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழன் கனவு என்ற அந்த சொல்லாடலில் கனவு காண்பதற்கு முதலிலே தமிழன் வாழவேண்டும்.

இந்தத் தீவிலே தமிழன் என்ற அடையாளத்தோடு வாழ்வதே இன்றைக்கு ஒரு கடும் போராட்டமாக இருக்கிறது.

எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால், அந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் உரிய மூலக்காரணமாக துரதிஷ்டவசமாக இந்த நாட்டின் ஆட்சிமுறைமையே இருக்கிறது.

இந்த நாட்டிலே வாழுகின்ற பெரும்பான்மை மக்கள், கிட்டத்தட்ட 75 வீதமான சிங்கள பௌத்த மக்கள் தங்களுடைய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை மட்டும் பாதுகாத்து, தங்களுடைய அடையாளத்திற்கு மற்றவர்களுடைய அடையாளத்தை அச்சுறுத்தலாக பார்க்காமல், ஒரு பொது அடையாளத்தை நோக்கி 1948ம் ஆண்டிலிருந்தே பயணித்திருந்தார்களாக இருந்தால், தமிழர்கள் என்ற அந்த அடையாளத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் வந்திருக்காது.

ஆனால், துரதிஷ்டவசமாக, இந்தத் தீவிலே 75 வீதமான சனத்தொகையைக் கொண்ட சிங்கள பௌத்த மக்கள், மிஞ்சிய 25 வீதத்தைக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் இருப்பைக் கண்டு பயந்து, தங்களுடைய இருப்புக்கே அது ஒரு அச்சுறுத்தல் என்று கருதி, 1948ம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு, தங்களுக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்களுடைய அடையாளத்தை அழிப்பதற்குச் செயல்பட்டிருக்கின்றார்கள்.

அந்த ஆட்சி அதிகாரம் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஒற்றையாட்சிதான் இன்றைக்குத் தமிழன் இந்த கனவு காண்பதற்கு இருக்கக்கூடிய மிக ஆபத்தானதும், இருப்பைக் கேள்விக்குட்படுத்துகின்றதுமான ஒரு விடயமாகவும் இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு மிக முக்கியமாக சிங்கள தேசம் அச்சுறுத்தலாக பார்க்கின்ற ஈழத்தமிழர்களுடைய இருப்பை முதல் கேள்விக்குட்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது.

அதற்கு அடுத்தடுத்ததாக முஸ்லிம்களுடைய, மலையகத் தமிழர்களுடைய இருப்பையும் நிச்சயமாக அது கேள்விக்குட்படுத்தும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.