மலையக சிறுவர் மேம்பாடு – துரைசாமி நடராஜா

சிறுவர்கள் முக்கியத்துவம் மிக்கவர்கள். எனவே அவர்களின் உரிமைகள் உரியவாறு பேணப்படுவதோடு, அவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பலவற்றுக்கும் உரிய இடமளிக்கப்படுதலும் வேண்டும். இந்த நிலையில், மலையகச் சிறுவர்கள் தொடர்பாகக் கூறுகையில், அவர்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும். இந்த நெருக்கீடுகளில் இருந்து இவர்கள் மீட்டெடுக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வித்திடப்பட வேண்டிய அவசியப்பாடு காணப்படுகின்றது. சிறுவர்கள் இந்த நிலையினை அடைவதற்கு சகல தரப்பினரும் தமது உச்சகட்டப்  பங்களிப்பினை வழங்குவது மிகவும் இன்றியமையாததாகும்.

சிறுவர் பராயம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு பருவமாகும். இந்தப் பராயத்தின் சில நினைவுகள் என்றும் பசுமையாக உள்ளத்தில் பதிந்திருக்கும் நிலையில், அதனைத் திரும்பத் திரும்ப மீட்டிப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவமாகும். சிறுவர்கள் அவர்களின் பண்புகளோடு வாழ்வதற்கு உரிய வழிவகைகளை மூத்தோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதை விடுத்து அவர்களின் இயல்பான செயற்பாடுகளில் அத்துமீறித் தலையிடுவதோ அல்லது சிறுவர்களை அடக்கி, ஒடுக்கி, மிரட்டி வைக்க முற்படுவதோ சரியான  அணுகு முறையல்ல. நல்லவற்றை அன்பாக எடுத்துக் கூறி, அவர்கள் நல்வழியில் பயணிக்க அனைவரும் வித்திடுதல் வேண்டும். எனினும் சிறுவர்கள் தொடர்பில் இதுவெல்லாம் நிகழ்கின்றதா? என்பது இன்று கேள்விக் குறியான ஒரு விடயமாகி இருக்கின்றது. சிறுவர் பராயத்தின் இன்பச் செயற்பாடுகளை மூத்தோர்கள் பறித்தெடுத்துள்ள நிலையில், அவர்களின் பல்வேறு உரிமைகளுக்கும் ஆப்பு வைத்தும் வருகின்றனர்.

மலையக நிலைமைகள்

சிறுவர்கள் தொடர்பாக பேசுகின்ற நிலையில், மலையக சிறுவர்கள் குறித்து சற்று அதிகமாகவே பேச வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. மலையக சிறுவர்களின் பலதரப்பட்ட நெருக்கீடுகளும் அன்றாடம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் மீதான உரிமை மீறல்களுக்கும் ஒரு போதும் குறைவில்லை. இவை தொடர்பில் சற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

பெருந் தோட்டங்களைப் பொறுத்த வரையில், சில தாய்மார்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் பிள்ளைகள் பெரும்பாலும் தந்தை அல்லது தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில், பிள்ளைகள் சவால்கள் பலவற்றுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவி வெளிநாட்டில் இருந்து உழைத்து அனுப்பும் பணத்தைப் பல கணவன்மார் வீணாக, பொறுப்பின்றி, ஊதாரித் தனமாகச் செலவு செய்து வருகின்ற நிலையில், பிள்ளைகள் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். உரிய பராமரிப்பின்றி இவர்கள் அல்லல்படும் பல சந்தர்ப்பங்களில் தந்தை அல்லது பாதுகாவலர்களின் அசமந்தப் போக்கின் காரணமாக கல்வி உரிமையும் பறிபோகின்றது. பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் இவர்கள் சிரத்தையின்றி காணப்படும் நிலையில், கற்றல் என்பது இவர்களுக்கு ஒரு தேவையற்ற விடயமாகின்றது. கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதனால் மெலெழும்பும் பயன்கள் என்பனவற்றை இவர்கள் அறியாதுள்ளனர். இந்த அறியாமை பிஞ்சு உள்ளங்களின் எதிர் காலத்தையே பாழ்படுத்தி விடுகின்றது.

இதே வேளை சமகால கொரோனா பேரிடருக்கு மத்தியில் பாடசாலைக் கல்வி என்பது கேள்விக் குறியாகி இருக்கின்றது. இந்நிலையில் தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கல்வி முறை தற்போது மேலெழும்பி வருகின்றது. எனினும் பெற்றோரின் வறுமை நிலையால் பல பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியை வாங்கி அதன் ஊடாக கற்கும் நிலை இல்லாதுள்ளது. அத்தோடு வலைப்பின்னல் தொடர்பு இல்லாத பல பகுதிகள் மலையகத்தில் காணப்படுகின்ற நிலையில், வாட்ஸ்அப் அல்லது இணையவழி (zoom) தொழில்நுட்பம் ஊடான கல்வியினைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள சிரமப்படுகின்றனர். இத்தகைய நிலைமைகளும் பிள்ளைகளின் கல்வியில் பெரிதும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த நிலைக்கு ஒப்பானதாகும்.

துஷ்பிரயோகங்கள்

abuse மலையக சிறுவர் மேம்பாடு - துரைசாமி நடராஜா

சிறுவர்கள் பல வழிகளிலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது என்பது புதிய விடயமல்ல. ஆசை வார்த்தைகளைக் கூறியும், அன்பளிப்புக்கள் பலவற்றை வழங்கியும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்ததைப் போன்று சிறுவர்களைப் பராமரித்து வளர்க்க வேண்டியவர்களே அவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வருவது மிகவும் கீழ்தரமானதும், வெட்கப்பட வேண்டியதுமான ஒரு செயலாகும் என்பதனையும் மறுப்பதற்கில்லை. தந்தை, சகோதரன், தாத்தா ,மாமா, சித்தப்பா போன்ற சொந்த உறவுகளால் பல சிறுவர்களின் எதிர் காலம் சூனியமயமாகி இருக்கின்றது. இத்தகைய துஷ்பிரயோக சம்பவங்களின் பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவர்களை சமூகமும், பாடசாலையும் ஏளனக் கண்கொண்டு பரிகாசத்துடன் பார்க்கும் நிலையில், இவர்களின் பல்துறைசார் நெருக்கீடுகளும் உச்சமடைந்திருக்கின்றன.

நான் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போன்று சிறுவர் காலம் என்பது பல சிறுவர்களின் வாழ்வில் மறக்க முடியாத பசுமரத்தாணியாக இருந்த போதும். சிலரின் வாழ்வில் அது சிறைக் கூடமாக அல்லது சித்திரவதைக் கூடமாக மாறியுள்ளது. சிறுவர்களின் அப்பராயத்திற்குரிய கனவுகள் மழுங்கடிக்கப் பட்டிருக்கின்றன. இது சிறுவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் துரோகமாகும்.

சிறுவர்களை பல்வேறு துறைகளிலும் ஈடுபடுத்துகின்ற  விரும்பத்தகாத நிலைமை உலகளாவிய ரீதியில் இருந்து வருகின்றது. இந்தியாவில் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், தீப்பெட்டிச் தொழிற்சாலைகளிலும் சிறுவர்கள் அதிகளவில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக விமர்சனங்கள் பலவும் இருந்து வருகின்றன. இலங்கையிலும் இந்நிலை அதிகமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக மலையக பெருந்தோட்டப் புறங்களில் இத்தகைய நிலைமைகளை காணக் கூடியதாக உள்ளது. நகர்ப் புறங்களில் உள்ள எஜமானர்களின் வீடுகளிலும், விவசாய நடவடிக்கைகளிலும் பல சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். ஒரு சமூகத்தின் கல்வி நிலையே அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. சிறுவர் உழைப்பானது கற்றலுக்கான வாய்ப்பினை மறுக்கின்றது. கல்விக்கான சிறுவர் உரிமை மீறலானது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் போன்றவற்றை வளர விடாது தடுப்பதுடன், மாறாக ஒரு ஆரோக்கியமற்ற சந்ததியினரை உருவாக்குகின்றது. இவ்வகையில் பெருந்தோட்டத் துறை சமூகத்தினரின் கல்விப் பின்னடைவானது அச்சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதுடன் குறிப்பாக அச்சிறுவர்களின் உரிமை மீறல்களுக்கும் வழிவகுப்பதாக விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

child labour india 2 மலையக சிறுவர் மேம்பாடு - துரைசாமி நடராஜா

கலாச்சாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்ளை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி. மனிதரிடையே மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்வது கல்வி என்றெல்லாம் கல்விக்கு வரைவிலக்கணம் கூறுவார்கள். இந்த வகையில் மலையக மாணவர்கள்  பலர் முழுமையாகக் கல்வியினைப் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது என்பதையும் இங்கு கூறியாதல் வேண்டும். கட்டாயக் கல்வி, இவவசக் கல்வி என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு கல்வி அபிவிருத்திக்கு வித்திடப்படுகின்றது. எனினும் இவையெல்லாம் சிறுவர்களின் கல்வி உரிமைகளை எந்தளவுக்குப் பாதுகாத்துள்ளன என்பது குறித்து ஆழமாகவே சிந்திக்க வேண்டி இருக்கின்றது. இதனிடையே மலையகத்தில் கஷ்ட மற்றும் அதிகஷ்டப் பிரதேசங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சீர்கேடு உள்ளிட்ட பல நிலைமைகள் இப்பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்குக் குந்தகமாக இருந்து வருகின்றமையையும் கூறியாதல் வேண்டும்.

school மலையக சிறுவர் மேம்பாடு - துரைசாமி நடராஜா

பெருந் தோட்டத் துறையைப் பொறுத்த வரையில், 06 – 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் 10.3 வீதமான ஆண் பிள்ளைகளும், 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் வலியுறுத்துகின்றன. இத்தகவலின்படி பெருந்தோட்டத் துறையில் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை வேதனைக்குரிய ஒரு விடயமாகுமென்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.ஆர். சோபனாதேவி வலியுறுத்தி இருக்கின்றார். இதனைத் தவிர பாடசாலைக்கு ஒரு தொகை சிறுவர்கள் செல்லும் நிலையில் மேலும் 3.8 வீதமான சிறுவர்கள் எவ்விதமான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித் திரிவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வலியுறுத்துகின்றது. இத்தகைய நிலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

eprayer20141128 மலையக சிறுவர் மேம்பாடு - துரைசாமி நடராஜா

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பார்கள். தந்தை நேரு போன்றவர்கள் சிறுவர்களை மிகவும் நேசித்தவர்களாக விளங்குகின்றனர். இன்றைய சிறுவர்களை நாம் நல்வழியில் பொறுப்புணர்ந்து வழிப்படுத்துவோமாயின், நாளைய பொழுது நல்ல பொழுதாக அமையும். இந்த வகையில் மலையக சிறுவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தி அவர்களின் நல்வாழ்விற்கு வித்திடுதல் முக்கியமானதாகும். கல்வி, சுகாதாரம், சமூக வாழ்க்கை, சிறுவர் பராயம் என்பவற்றைப் பாதுகாத்து நாட்டிற்கு பொருத்தப்பாடுடைய ஒருவனாக சிறுவர்களை மாற்றியமைக்க வேண்டும். அரசியல்வாதிகள், கல்விப் புலம் சார்ந்தவர்கள் உள்ளிட்ட  பலருக்கும் இதில் பெரும் பங்குள்ளது. இதிலிருந்தும்  விலகிச் செல்வோமானால், நாட்டின் தலையெழுத்து நல்ல படியாக அமைவதற்கில்லை என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.