உக்ரைன் – அமெரிக்காவின் மிக அபாயகரமான சூதாட்டம் | தமிழில் : ஜெயந்திரன்

413 Views

அமெரிக்காவின் சூதாட்டம்

அபாயகரமான அமெரிக்காவின் சூதாட்டம்

மேலும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல், என்ற பைடனின் அமெரிக்க நிகழ்ச்சி நிரல், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாரிய சவால்களை எதிர்கொள்வதன் காரணத்தால், பூகோள ரீதியிலான கூட்டுறவுகளை மேலும் சிறப்பாகக் கட்டியெழுப்பும் முயற்சியில் தனது திட்டத்தை பன்னாட்டு அரங்குக்கு பைடன் தற்போது நகர்த்தியிருக்கிறார்.

தனக்கு முதல் ஆட்சியில் இருந்த அதிபரால் அரசியல் ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் திருத்தப்பட வேண்டும் என்று தேர்தல் காலத்தில் பரப்புரை செய்த பைடனுக்கு, தேசிய ரீதியாகச் செயற்படும் போது, நாடாளுமன்றம், மாநில ஆளுநர்கள் போன்றவர்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்கின்ற காரணத்தால், ‘படைகளின் அதிகாரி’ என்ற வகையில் பன்னாட்டு ரீதியில் செயற்படுவதற்கு அவருக்கு அதிக சுதந்திரம் இருக்கின்றது என்பது நோக்கப்பட வேண்டும்.

போர்க்குணத்தோடு இருக்கின்ற ரஷ்யாவுக்கும் துணிவோடு காய்களை நகர்த்துகின்ற சீனாவுக்கும் எதிராக பூகோள ரீதியிலான தலைமைத்துவத்தை மீளவும் உருவாக்க வேண்டும் என்ற பைடனின் இலக்கு அமெரிக்காவுக்கு உள்ளே ஆழமாகப் பிளவுபட்டிருக்கின்ற சனநாய, குடியரசு தலைமைத்துவங்களை இணைக்கவும் ஒருவகையில் உதவிசெய்கிறது.

யூரேசியாப் பிரதேசத்தில் தனது இராணுவ பலத்தைக்கொண்டு அச்சுறுத்துவதோடு, யூக்ரேனையும் ஆக்கிரமிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்ற ரஷ்யாவுக்கு எதிராக, அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அப்பால் தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை அணிதிரட்டி, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க துருப்புகளை பணிக்கமர்த்துவதற்கு இதைவிட சிறப்பான வழிவகை எதுவும் பைடனுக்கு இருக்க முடியாது.

தனது ஆசிய நட்பு நாடுகளை சீனா தொடர்பான ஒரு கொதிநிலையில் வைத்துக் கொள்வது மட்டுமன்றி, ‘தாய்வானை ஆக்கிரமிக்க சீனா தயாராகிக் கொண்டிருக்கிறது’ என்ற எச்சரிக்கைச் செய்தியையும் சொல்லி, அதன் மூலம் பசிபிக் சமுத்திரத்துக்கு அப்பால் உள்ள அந்த நாடுகளையும் அமெரிக்கா உசார்நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

அமெரிக்காவின் சூதாட்டம்தற்போதைய சூழல் தொடர்பாக கிரெம்ளின் சற்று அடக்கி வாசித்த போதிலும் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக உள் நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் ‘போர் மொழியை’ பைடன் பேசிக் கொண்டிருக் கிறார். அப்படிப் பார்த்தால் பைடன் போரைத் தவிர்க்க முயல்வதாகத் தெரியவில்லை.

பைடனுடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது அவர் ரஷ்யா யூக்ரேனை ஆக்கிரமிக்க வேண்டும் என்றே விரும்புவதாகவே தெரிகிறது.

இப்படிப்பட்ட அணுகுமுறை ஒருவேளை ஈரான் அல்லது வெனிசுவேலா போன்ற நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டால் அது வெற்றியளிக்கக்கூடும். ஆனால் அணுசக்தியைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற நாடுகளான ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக இந்த அணுகுமுறை பிரயோகிக்கப்பட்டால் அது அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துவிடும்.

தமது செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்காக மொஸ்கோவும் பேஜிங்கும் தமது அயல்நாடுகளுக்கு எதிராக கடும் நகர்வுகளை எடுத்து வந்திருக்கின்றன. இராஜீக உறவுகளை கொதிநிலையில் வைத்திருப்பது, புதிய கூட்டணிகளை உருவாக்குவது, தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான இது நியாயப்பாடாக அமைவதாக மேற்குலகம் கருதுகிறது.

ஆனால் அதே வேளையில் ரஷ்யாவையும் சீனாவையும் ஒரு மூலைக்குள் தள்ளுவது உருப்படியான ராஜீக நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை கணிசமான அளவு குறைக்கிறது. இரு நாடுகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவது போன்ற நகர்வுகள் 1990 களில் மிகப் பலவீனமான அணுசக்தி நாடுகளான ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டு தோல்வியடைந்த நகர்வுகளாகும். அதைத் தொடர்ந்து வந்து பத்து ஆண்டுகளில்  ‘தீமையின் அச்சாணி’ என்ற மூலோபாயத்துக்கு அது இட்டுச்சென்றது. இது பின்னர் மோசமான அழிவுகளுக்கும் இட்டுச் சென்றது.

அமெரிக்காவின் தற்போதைய இராஜாங்கச் செயலராக இருக்கின்ற அன்ரனி பிளின்டன் ரஷ்யாவில் அதே பதவியை வகிக்கும் சேர்ஜி லவ்ரோவைக் கடந்த மாதம் ஜெனிவாவில் சந்தித்த போது, அது பற்றி அவர் உரையாற்றிய விதம் முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் அதே பதவியை வகித்த ஜேம்ஸ் பேக்கர் ஈராக்கின் அமைச்சரான தாரிக் அசீசை அதே சுவிஸ் நகரில் சந்தித்த போது உரையாற்றியது போலவே இருந்தது.

பேக்கர் கூறியதைப் போன்றே “ ஒரு சுமூகமான விளைவு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளை, அவை பேச்சுவார்த்தைகள் அல்ல. மாறாக, மீண்டும் ஒரு தவறைச் செய்யவேண்டாம் என்ற தொனியில் அவர்களுக்கு தகவல் வழங்கும் ஒரு உரையாடலாக அமைந்திருந்தது என்று பிளிங்கனின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஈராக்குக்கு எதிராக இரண்டு போர்களை அமெரிக்கா முன்னெடுத்தது மட்டுமன்றி, பல ஆண்டுகளாக ஈரானின் மேல் பொருளாதாரத் தடைகஅமெரிக்காவின் சூதாட்டம்ளையும் விதித்திருந்தது. இச்செயற்பாடுகளினால் இம் மூன்று நாடுகளும் அதிக விலை கொடுத்தது மட்டுமன்றி அப்பிரதேசத்தில் நிலையற்ற தன்மையையும் பாதுகாப்பின்மையையும் தோற்றுவித்து, அணுசக்தியைக் கொண்ட ஒரு நாடாக ஈரான் வளர அதனை நிர்ப்பந்தித்தது.

ரஷ்யாவை ஈராக்குடனோ அன்றேல் ஈரானோடோ ஒப்பிட முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். அது மட்டுமன்றி 1991இல் இருந்தது போன்று அமெரிக்கா இன்று பூகோள ரீதியாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு நாடாகவும் இல்லை. இன்னும் குறிப்பாக ஈராக்குக்கு எதிராக 2003 இல் அமெரிக்கா முன்னெடுத்த இரண்டாவது போருக்குப் பின்னரும் ஆப்கானிஸ்தானில் அது சந்தித்த தோல்விக்குப் பின்னரும் அதன் செல்வாக்கு கணிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையிடமிருந்து போரைத் தொடங்குவதற்கான ஒரு அனுமதியை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி, யுக்ரேனையோ அன்றேல் தாய்வானையோ விடுவிப்பதற்கு 500,000 துருப்புகளை அனுப்பவும் அமெரிக்கா தயாரில்லை.

ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் யுக்ரெய்ன் விடயத்தை உள்ளடக்குவதில் அமெரிக்கா ஒருவேளை வெற்றியடைந்திருக்கலாம். ஆனால் அமெரிக்கா கொண்டுவந்த இந்த முன்மொழிவு ரஷ்யாவாலும் சீனாவாலும் மூர்க்கமாக எதிர்க்கப்பட்டது. கடைசியில் அது வெறும் பொதுத்தரப்பு உறவுகளைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு விடயமாகவே அமைந்தது.

அமெரிக்காவின் சூதாட்டம்இவற்றுக்கிடையில் அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த அண்மைக்கால முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோண்சன் ஆர்வம் காட்டியது போன்று வேறு எந்தத் தலைவர்களும் ஆர்வம் காட்டவில்லை. ஜோண்சனைப் பொறுத்த வரையில் அண்மையில் அங்கு கோவிட்கால கிறிஸ்மஸ் விருந்து தொடர்பாக எழுந்த பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி தனது பிரதமர் பதவியைப் பாதுகாப்பதற்காகவே ஜோண்சன் இவ்விடயத்தில் ஆர்வம் காட்டுவதை அவதானிக்க முடிகிறது.

யுக்ரேன் நாடு தொடர்பாக ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் போரிஸ் ஜோண்சன் காட்டும் அசாதாரண ஆர்வம் பாரிஸ், பேர்ளின் போன்ற நகரங்களில் உள்ள அவரது ஐரோப்பிய சகாக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மிகவும் அமைதியான ராஜீக நகர்வுகள் மூலமாக இந்நெருக்கடியைக் கையாளவே இந்தத் தலைவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

யுக்ரெயின் தொடர்பான நெருக்கடி மேலும் இறுக்கமடையும் இந்நேரத்தில் 2003ம் ஆண்டில் வளைகுடாப் போர் முன்னெடுக்கப்பட்ட போது, எவ்வாறாக அமெரிக்க – ஐக்கிய இராச்சியக் கூட்டுக்கும் பிரெஞ்சு – ஜேர்மானிய கூட்டுகளுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டனவோ அவ்வாறே தற்போதைய சூழ்நிலையிலும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

இந்த ஐரோப்பிய அரசுகளைப் பொறுத்தவரையில் ஒரு பலமான நேற்றோ அமைப்பை உருவாக்குவதற்கு பைடன் காட்டும் ஆர்வம் அவருக்கு முதல் அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் நட்பு நாடுகள் தொடர்பாக காட்டிய அலட்சிய மனப்பான்மையை விட மோசமானதாகத் தெரிகிறது. பைடனின் ஆர்வம் கழுத்தை நெரிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவின் சூதாட்டம்ரஷ்ய அதிபரான விளாடிமீர் புட்டினைப் பார்த்து ட்ரம்ப் வெளிப்படுத்திய பிரமிப்பு உணர்வு புட்டினுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்தது போன்று, பைடன் தற்போது காட்டும் எதிர்ப்புணர்வு புட்டினை மிகவும் ஆபத்தான ஒரு மூலைக்குத் தள்ளுகிறது. அமெரிக்காவின் போர் பற்றிய பேச்சு, அமைதியைக் காக்கும்படி கேட்கின்ற யுக்ரெயின் அதிபரான வொலொடிமீர் ஸெலென்ஸ்கியைக்கூட ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

போர் தொடர்பான ஒரு விழிப்பு நிலையில் அனைவரையும் வைத்திருப்பது தனக்கு வெற்றியளிக்கும் என்று பைடன் கருதுகின்றார். ரஷ்யா தனது துருப்புகளை மீள அழைக்குமானால் அது அவருக்கு ஒரு மூலோபாய ரீதியான ஒரு வெற்றியைக் கொடுக்கும். மாறாக பைடன் எதிர்வுகூறியது போன்று ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிக்குமானால், பைடன் இவ்விடயத்தில் தூரநோக்குடன் செயற்பட்ட ஒரு தலைவராகப் பார்க்கப்படுவார்.

ஆனால் புட்டீனின் ரஷ்யாவோ நாசி ஜேர்மனி இல்லை என்பதை ஐரோப்பியர்கள் நன்கு அறிவார்கள். ரஷ்யாவை ராஜீக ரீதியான முறையில் அணுகுவதை இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியை அமைதிப்படுத்த எடுத்த முயற்சியுடன் ஒப்பிடுவதை அவர்கள் முற்றுமுழுதாக எதிர்க்கிறார்கள்.

2004ம் ஆண்டில் ரஷ்யா யுக்ரெயின் நாட்டின் மீது படை நடவடிக்கையை மேற்கொண்டு கிரெமியாவை தமது நாட்டுடன் இணைத்த நிகழ்வைப் பார்க்கும் போது, அமைதிப்படுத்துவது வெற்றியளிக்க மாட்டாது என்பது பொருளல்ல. மாறாக முன்னணி நாடுகள் தமது தேசிய நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் போது தடைகள் வெற்றியளிக்க மாட்டாது என்பதையே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதுமட்டுமன்றி பூகோள ரீதியாகப் பார்க்கும் போது புட்டின் ஒரு மிக விவேகமான சதுரங்க ஆட்டக்காரன் என்பதை பைடன் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தடைகள் வெற்றியளிக்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிராகவும் அவை வெற்றியளிக்கப் போவதில்லை. காரணம் என்னவென்றால் புட்டின் காட்டும் எதிர்ப்புக்கு அவருக்கு நிறையவே ஆதரவு கிடைக்கிறது.

உண்மையில் கடந்த மூன்று அமெரிக்க அதிபர்களான புஷ், ஒபாமா, ட்ரம்ப் ஆகியோரை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, தனது அயல் நாடுகள் மீது இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா எடுப்பதை இவர்கள் எவராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை.

புட்டீனைப் பொறுத்தவரை, சோவியத் ஏகாதிபத்தியம் திரும்பி வரவேண்டும் என அவர் விரும்பக்கூடும். உண்மையில் நாசி ஜேர்மனியை வெற்றி கொண்டது சோவியத் ஒன்றியமே தவிர நட்புநாடுகளின் கூட்டு அல்ல.

தமது நாட்டை உடைப்பது தொடர்பாக ரஷ்யர்களைப் பொறுத்தவரை மேற்குலகுடன் அவர்களுக்கு மிகவும் கசப்பான கடந்தகால வரலாறு இருக்கிறது. ஒன்றுபட்ட ஜேர்மனிக்கு அப்பால் நேட்டோவை விரிவுபடுத்தப் போவதில்லை என்று அமெரிக்கா முன்னர் கொடுத்த வாக்குறுதியை அது இப்போ மீறிவிட்டதுடன் ரஷ்யாவின் மேற்கு எல்லைகள் வரை அதன் ஆதிக்கத்தை அவர்கள் விரிவாக்கி விட்டார்கள்.

ஒரு பலமான அதிபரான புட்டின் தொடர்பாக யார் என்ன நினைத்தாலும் அல்லது அமெரிக்காவோ ஊடகங்களோ என்ன சொன்னாலும் இது புட்டின் தொடர்பான விடயமே இல்லை. இந்த இரு நாடுகளின் கடந்த கால வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, மற்றைய மக்களின் சிக்கலான உணர்வுகளையும் வேதனைகளையும்  எகிப்தின் கமால் அப்டல் நாஸர், ஈரானின் மஹ்முட் அஹ்மத்தினெஜாட், ஈராக்கின் சதாம் ஹுசெய்ன், கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோ போன்ற புரிந்துகொள்ளப்பட முடியாத தமது தலைவர்களின் புரிதல்களுக்கு முடக்குவது இந்த இரண்டு நாடுகளினதும் வரலாறாக இருந்து வந்திருக்கிறது.

ஆம். ரஷ்யாவைப் பொறுத்தவரை நேட்டோ தனது விரிவாக்கும் செயற்பாட்டை நிறுத்தும் படி கேட்பதற்கு எந்தவொரு வரலாற்று ரீதியானதோ அன்றேல் நியாயபூர்வமான காரணங்களோ இல்லை. அதுபோலவே தனது பாதுகாப்பு தொடர்பாக நியாயமான முறையில் உறுதிப்படுத்தவும் சுதந்திரமாக எந்தவொரு புற அழுத்தமும் இன்றி இருப்பதற்கும் யுக்ரேனுக்கு முழு உரிமையும் உண்டு.

கியூபாவின் ஏவுகணை நெருக்கடியை ஒரு முடிவுக்கொண்டுவந்து, மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு போர் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அறுபது வருடங்களுக்கு முன்னர் அந்தக் கரிபியன் தீவில் தான் முன்னெடுத்த ஏவுகணைத் திட்டத்திலிருந்து பின்வாங்குவதற்கு மொஸ்கோ தீர்மானித்தது. அதற்குப் பதிலுபகாரமாக கியூபாவின் இறைமையை அமெரிக்கா அங்கீகரித்தது. இவ்வாறான செயற்பாடுகளை மீண்டும் ஒரு தடவை இவர்கள் முன்னெடுக்கலாம்;.

மேலும் ஒரு நெருக்கடி ஏற்படாது தவிர்க்க வேண்டும் என்பதில் இவர்கள் நேர்மையாக இருப்பார்களானால், கிழக்கு நோக்கி நோக்கி நேட்டோ முன்னெடுக்கும் விரிவாக்கத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அதே நேரம் யுக்ரேனின் இறைமையை புட்டின் அங்கீகரித்தாக வேண்டும்.

நன்றி: அல்ஜஸீரா

Tamil News

1 COMMENT

  1. […] அபாயகரமான அமெரிக்காவின் சூதாட்டம் மேலும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல், என்ற பைடனின் அமெரிக்க நிகழ்ச்சி நிரல், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாரிய சவால்களைமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-170-february-19/ https://www.ilakku.org/  […]

Leave a Reply