இலக்கு மின்னிதழ் 170 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 170 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 170 ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் வேகமான முயற்சிகளும், ஈழத்தமிழர்களின் மந்தமான போக்குகளும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு பெப்ருவரி 28ம் நாள் தொடங்குகின்றது. இம்முறை வாய்மொழி மூலம் சிறிலங்காவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையார் சமர்ப்பிக்கவுள்ளார். அதே நேரத்தில் இந்த வாய்மொழி அறிக்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் இவ்வாண்டுக்கான உறுப்பு நாடுகள் 47 உடையதும் பிரதிநிதிகளின் விவாதங்களும் இடம்பெறவுள்ளன.

இதில் சிறிலங்கா, உறுப்பு நாடுகளைத் தனக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்கு பல ராஜதந்திர வழிகளில் பெருமுயற்சி செய்து வருகிறது. இதற்காக நாடுகளின் தூதுவர்களுடனும், பல அமைச்சர்களுடனும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பல மாதங்களாகப் பல தொடர் சந்திப்புகளை நடத்தி, வேகமாக முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் சிறிலங்கா அரச அதிபரின் சட்டத்தரணியுமான அலி சப்ரி அவர்கள், காணாமல் போனவர்களின் உயிரைக் கேட்டால், எப்படிக் கொடுக்க முடியும் என வீரசேகரி தமிழ் நாளிதழுக்கு அளித்த செவ்வியில் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களாட்சியின் அடித்தளமாக உள்ள சட்டத்தின் ஆட்சி என்பதையும், நீதியான நிர்வாகம் என்பதையும், இவற்றுக்கான தடைகளை முறியடிப்பதற்கான சட்ட அமுலாக்கத்தை நெறிப்படுத்தும் நீதிமன்ற முறைமை என்பதையும் செயற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பான நீதி அமைச்சராக உள்ள அவர், எந்த அளவு தூரம் தனது செவ்வியில்  பதவிப்பொறுப்புத் துறப்பு செய்துள்ளார் என்பது அதனைப் படிப்பவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது. அதுமட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் என்ன அறிக்கைகள் வெளிவந்தாலும், அது தங்களை எந்த விதத்திலும் பாதிக்காது என தனது தலைவர் கோட்டாபய ராசபக்சவின் பாணியிலேயே செவ்வியளித்தும் உள்ளார்.

ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசிடம், யுத்தத்தின் விளைவுகளால் தற்செயலாக உயிரிழந்தவர்கள் உயிர்களைக் கேட்கவில்லை. சிறிலங்கா அரச படைகளிடம், அவை சரணடைந்து பாதுகாப்புப் பெறும்படி விடுத்த அறிவிப்பின் பேரில், வெளிப் படையாகச் சரண் அடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளையும், வன்னிப்பகுதியில் வாழ்ந்து, படைகளிடம் சரணடைந்த ஈழத்தமிழ் மக்களையும், வலிந்து காணாமலாக்கிய செயல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்கான தண்டனை நீதியை வழங்குமாறே கேட்கின்றனர்.

இன்றைய சிறிலங்காவின் அரச அதிபர், அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த பொழுது, அவருடைய உத்தரவின் பெயரில் செயற்பட்ட படையினரால், இவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு. அந்த வகையில், தன் மீதான அனைத்துலக விசாரணைகளைத் திசை திருப்புவதற்குச் சிறிலங்காவின் இறைமையுள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக நெறிப்படுத்தல் தலையீடு செய்கின்றது என கோட்டபாயா அன்றும் இன்றும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

அதே நேரத்தில், உள்ளகப் பொறிமுறைகள் மூலம் தாங்களே தீர்வுகளை ஏற்படுத்த, நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று, மனித உரிமைகள் ஆணையகத்தின் வெளியகப் பொறிமுறைகள் மூலமான தீர்வு முயற்சிகளை முறியடித்தல் என்பதாக கோட்டபாயா அரசியல் உள்ளது. முறியடித்தல் என்ற சொல்லை இங்கு கையாள்வதற்கு காரணம், சிறிலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வை ஒரு மனித உரிமைகளைப் பேணுவதற்கான  நெறிப்படுத்தல் அமைப்பாகக் கருதாது, தனக்கான யுத்த களமாக இராணுவச் சிந்தனையுடனேயே நோக்குகின்றது. சிறிலங்கா ஒரு அரசாக உலக நாடுகளால் ஏற்கப்பட்ட நிலையிருப்பதால், நாட்டின் வளத்தை பிறநாடுகளின் நலன்களுக்குப் பயன்படுத்த வாய்ப்பு அளித்தலின் வழி, இதனைச் செய்வதற்குச் சிறிலங்காவுக்கு இலகுவாகவும் உள்ளது.

கூடவே ஐக்கிய நாடுகளின் நேரடித் தலையீட்டைத் தங்களின் நாடுகளுள் அனுமதிக்க மறுக்கும் இந்தியா, சீனா, ரஸ்யா, போன்ற ஆசிய நாடுகளைக் கொண்டும், சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் நெறிப்படுத்தல் களைத் தடுப்பதிலும் சிறிலங்கா ஈடுபட்டு வருகிறது. இதனால் சிறிலங்கா ஒவ்வொரு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வையும் இறுதியில் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறது. நீதியின் இந்த திசை திருப்பல், ஈழத்தமிழர்களுக்கு நீதியைக் கிடைக்காது தடுப்பது மட்டுமல்லாது, சிறிலங்காவுக்கு இன்று வரை ஈழத்தமிழின அழிப்பை தனது அரசியல் கொள்கையாகவே முன்னெடுப்பதற்கான ஊக்கியாகவும் உள்ளது.

இந்த நிலையை உணர்ந்து, கூட்டாக பலம் பொருந்திய நிலையில், எதிர்வினை செய்ய வேண்டிய ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில், அவர்களுக்கான பொது வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் பல கொள்கையாளர்களையும் இணைத்து தனியான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவதில் அவர்களுக்கு உள்ள இயலாமை தொடர்கிறது. தங்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக முன்னிலைப்படுத்தும் தனிப்போக்குகளை வளர்ப்பது, பொதுப்போக்கு ஒன்று உருவாகப் பெரும் தடையாக உள்ளது. இதுவே கடந்த 12 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்களின் மேலான சிறிலங்காவின் இனஅழிப்புக்கான நீதியைப் பெற இயலாது தடுக்கும் உள்காரணியாக அமைகிறது.

எனவே இனியாவது ஈழத்தமிழர்கள் தாயகத்திலும், புலம்பெயர்ந்து, புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் தங்களது விதண்டாவாத மந்தப் போக்குகளை மாற்றித், தங்களது கொள்கைகளை பொது வேலைத்திட்டத்தில் இணைத்து, மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் வேகமான செயற்பாட்டுப் போக்குகளைக், காலத்துக்கு ஏற்ற புதிய வடிவுகளில் வெளிப்படுத்தினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வை ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பிக்க வைக்க முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News