தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் | ஆர்த்தீகன்

229 Views

உயர் இரகசியங்கள்ஆர்த்தீகன்

மின்னிதழ் உள்ளடக்கம்

தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள்

உளவு என்னும் மூன்று எழுத்தைப் பார்க்கும் போது, எமக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் பாண்ட் இன் திரைப்படங்கள் தான். பிரித்தானியாவின் வெளியகப் புலனாய்வுத் துறையான எம்.ஐ-6 இன் ஒற்றராக ஜேம்ஸ் பாண்ட் இன் படம் கடந்த 50 வருடங்களாக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றது.

அவரின் படங்களில் பல தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படுவதுண்டு. செயற்கைக்கோளின் தொடர்பாடலுடன், புகைப்படக் கருவி பொருத்தப்பட்ட சட்டைப்பையில் வைக்கும் கணினிகளைக் கொண்டு செல்வது கூட தற்போது ஆச்சரியம் தரும் விடயம் அல்ல. தொழில்நுட்பம் அவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.

மனிதர்களின் முகங்களை அடையாளம் காண்பது.

தற்போதைய தொழில்நுட்பத்தில் இது சாதாரணமானது. கையடக்கத் தொலைபேசிகளே  முகங்களை அடையளம் கண்டு திறக்கும் காலமிது. எனினும் தற்போது கூட்டமாகச் செல்லும் மக்களின் முகங்களை அடையளாம் காண்பது, அவர்கள் முகத்தை மறைத்திருந்தாலும் அடையாளம் காண்பது போன்ற தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் புலனாய்வுத்துறை பயன்படுத்தும் Rekognition என்னும் தொழில்நுட்பம் அடையாளம் காணும் மக்களின் மனநிலைகளையும் கூறக்கூடியது. அவர்கள் சந்தோசமாகவோ, கோபமாகவோ, துன்பமாகவோ இருந்தாலும் அது கூறிவிடும்.

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டல்

தொலைபேசிகளில் புதிய Apps களை தரையிறக்கும் போது அவதானம் தேவை. சில மென்பொருட்கள் உங்களின் நடமாட்டங்கள் மற்றும் தொலைபேசியின் புகைப்படக் கருவிகளைத் தானாக இயக்கக்கூடியவை.

உயர் இரகசியங்கள்Gyrophone எனப்படும் மென்பொருளானது, உங்களின் தொலைபேசியில் ஒலி வாங்கிகளாக செயற்பட்டு, உங்கள் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் தகைமை கொண்டது என Stanford University and Israeli defense ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் மூலம் வேறுபட்ட குரல்களை அடையாளம் காண்பதுடன், ஆணா அல்லது பெண்ணா எனவும் அறிய முடியும்.

வெப்பத்தைக் கொண்டு கடவுச் சொற்களைக் கண்டறிவது

வெப்பத்தைக் கொண்டு கடவுச் சொற்களைக் கண்டறியும் தொழில் நுட்பத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. கணினியின் தட்டச்சு பலகையை நாம் பயன்படுத்தும் போது, எமது விரலின் வெப்பம் தட்டச்சுப் பலகையின் எழுத்துக்களில் குறுகிய நேரம் காணப்படும். அதனை மிகவும் உணர்திறன் மிக்க கருவிகள் மூலம் கண்டறிந்து விடலாம். அதாவது கடவுச் சொற்களைத் திருட உங்களின் கணினிகளுக்குள் ஊடுருவ வேண்டும் என்பதில்லை.

புலனாய்வுத்துறையினர் Thermanator என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடவுச் சொற்களையும் ஏனைய தகவல்களையும் பெற்று வருகின்றனர்.

உளவு விமானங்கள்

ஆளில்லாத உளவு விமானங்களில் தொழில்நுட்பம் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது.

RQ-4A Global Hawk எனப்படும் அமெரிக்க உளவு விமானம் 18,000 மீற்றர் உயரத்தில் இருந்தே தரையில் உள்ள மனிதரை இலகுவாக அடையாளம் காணக்கூடியது. மேலும் முகில் கூட்டங்களுக்கு ஊடாகவும் ஊடுருவும் திறன் கொண்டதுடன், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் உலகின் அரைப் பகுதியை வலம்வரக் கூடியது.

உயர் இரகசியங்கள்படைத்துறையினர் பயன்படுத்தும் இந்த விமானங்கள் மிகவும் தூரவீச்சுக் கொண்ட ஒளிப்படக் கருவிகளைக் கொண்டவை. தூரத்தில் இருந்தே அனைத்துலக கடற் பரப்பைக் கண்காணிப்பதுடன், இரவு வேளை களிலும் (Electro-optical and infrared imaging) இலக்குகளை அடையாளம் காணக்கூடியவை. மேலும் தகவல்களை உடனடியாகவே செய்மதிகள் மூலம் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் தகைமை கொண்டவை என்பதால், களநிலைமைகளை உடனுக்குடன் அறிய முடியும்.

சுட்டு வீழ்த்த முடியாதவாறு 18 கி.மீ உயரத்தில் பறக்கும் இந்த விமானங்கள், ஒரு தடவையில் 32 மணி நேரம் தொடர்ந்து பறந்து, 22,780 கி.மீ தூரத்துக்குப் பயணம் செய்யக்கூடியவை.

மரபணுக்களைச் சேகரிக்கும் பேனா

உயர் இரகசியங்கள்மிகவும் நுண்ணிய கூர்முனையைக் கொண்ட புதிய பேனா,  மரபணு மூலக்கூறு ஆய்வுக்குத் தேவையான எதிரியின் மாதிரியை அவருக்கு வலியின்றிச் சேகரிக்கும் தகைமை கொண்டது. அதன் சேமிப்புப் பகுதியில் இருக்கும் மாதிரியை பின்னர் ஆய்வு செய்ய முடியும்.

கண்ணுக்குப் புலப்படாத எழுத்துக்கள்

கண்ணுக்குப் புலப்படாத எழுத்துக்கள் மூலம் தகவல்களை அனுப்புவது பழைய தொழில்நுட்பமாக இருக்கலாம். ஆனால் தற்போதும் அது பாவனையில் உள்ளது.

2010 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரஸ்யாவின் புலனாய்வாளர்களும், 2008 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து அல்கைடா அமைப்பும் தகவல்களை இவ்வாறு அனுப்பியது கண்டறியப்பட்டுள்ளது. எலுமிச்சைச் சாற்றுடன் மையைக் கலந்து எழுதுவதுடன், பின்னர் காகிதத்தை வெப்பமாக்கும் போது, அதனை வாசிக்க முடியும் என்பதால், இது மிகவும் இலகுவான முறையாகும்.

கிழிக்கப்படும் காகிதங்களை மீளப்பொருத்துதல்

நாம் முக்கிய ஆவணங்களை அழிக்கும்போது, அதனை சிறிய துகள்களாகக் கிழித்துப் போடுகிறோம். ஆனால் தற்போது அதனை இலகுவாக கணினியின் மென்பொருட்கள் மூலம் இணைக்க முடியும். நிறங்கள், எழுத்துக்களின் அளவு போன்றவை மூலம் அது மேற்கொள்ளப்படுகின்றது. புலனாய்வுத்துறையினர், அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தப்பியோடும் திருடர்களைக் கண்டறியும் தொழில்நுட்பம்

வாகனங்களில் தப்பியோடும் திருடர்களை அல்லது குற்றவாளிகளைக் கண்டறிவதற்குரிய புதிய லேசர் தொழில்நுட்பம் பாவனைக்கு வந்துள்ளது. StarChase எனப்படும் லேசர் மூலம் வழிநடத்தப்பட்டு, இலக்கில் சென்று துல்லியமாக ஒட்டிக்கொள்ளும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் உடைய மென்பொருளானது, சிறிய துப்பாக்கி மூலம் குற்றவாளியின் வாகனத்தைக் குறிவைத்து ஏவப்படும்.

குற்றவாளியின் காரில் ஒட்டிக்கொள்ளும் இந்த மென்பொருள், அவரின் நடமாட்டம் குறித்த தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கும். எனவே காவல்துறையினர் ஆறுதலாகச் சென்று அவர்களை மடக்கிப் பிடிக்கலாம்.

உளவறியும் தேனீக்கள்

உயர் இரகசியங்கள்தேனீக்களில் சிறிய றேடியோ அலைகளை உள்வாங்கும் கருவிகள் பொருத்தப்படு வதுடன், அதன் கால்களில் சிறிய மின்காந்த உபகரணங்களும் பொருத்தப்படும்.

சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இதனைக் கண்டு பிடித்துள்ளது. இது தேனீக்களின் நடமாட்டங்களை மட்டும் அவதானிக்கப் பயன்படுத்தப் படுவதில்லை. மாறாகப் புலனாய்வுத் தகவல்களை திரட்டுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட தேனீக்களைத் தொலைவில் இருந்தும் இயக்க முடியும்.

இயற்கை அனர்த்தங்களின் போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுண்டு.

Tamil News

1 COMMENT

  1. […] தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் உளவு என்னும் மூன்று எழுத்தைப் பார்க்கும் போது, எமக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் பாண்ட் இன் திரைப்படங்கள் தான்.மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-169-february-12/ https://www.ilakku.org/  […]

Leave a Reply