எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைய யார் காரணம்? | பேராசிரியர் சூசை ஆனந்தன்

234 Views

மீனவர்களின் பிரச்சினைபேராசிரியர் சூசை ஆனந்தன்

மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைய யார் காரணம்?

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பது வடபகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. மறுபுறத்தில் இவ்வாறு எல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கைப்பற்றப்படும் அவர்களுடைய படகுகள் ஏலத்தில் விற்கப்படுவதும், தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருக்கின்றது. இந்த நிலையில் மீனவர் பிரச்சினையில் தொடர்ச்சியாக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சூசை ஆனந்தன் லண்டன் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கியமான பகுதிகளை இங்கு வருகிறோம்.

கேள்வி:
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான ஊடுருவல் வடபகுதி மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடான நிலை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்வதற்கு காரணம் என்ன?

பதில்:
யுத்த காலத்தில் தமிழக மீனவர்களுடைய ஊடுருவல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. காரணம் – அந்தக் காலகட்டத்தில் வடபகுதியில் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்த மீன்பிடித் தடை போன்றவற்றால், வடபகுதி மீனவர்களும் கடலுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. இருந்த போதிலும், இந்தக் காலப் பகுதியில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வரும் போது அதிகளவு இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

போருக்குப் பின்னர் மீன்பிடித் தடை நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுமூக நிலை ஏற்படுத்தப் பட்டிருப்பதால் தமிழக மீனவர்களின் ஊடுருவல் அதிகரித்திருப்பதை காணமுடிகின்றது. குறிப்பாக வடக்கில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா மட்டுமன்றி முல்லைத்தீவு வரையில் அவர்களுடைய ஊடுருவல் அதிகரித்திருப்பது ஒரு பிரச்சினையாக உள்ளது.

தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான படகுகள் வடபகுதியில் ஊடுருவுகின்றன. வடக்கு கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் துரம்வரையில் இந்தப் படகுகள் வந்து செல்கின்றன.

மீனவர்களின் பிரச்சினைஇது எல்லையை மீறும் ஒரு செயல். 1976 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய கடல் எல்லை வரையறை செய்யப்பட்டபோது, எந்த நாட்டு மீனவர்களும் தமது கடல் எல்லையைத் தாண்டி வரக்கூடாது என அதில் சொல்லப் பட்டிருக்கின்றது. இந்த எல்லையை அவர்கள் தாண்டி வந்து வடபகுதியில் மீன்பிடிப்பது எமது மீனவர்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ளது.

வடபகுதி மீனவர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறுபகுதி கடல்தான் அவர்களிடம் உள்ளது. தென்பகுதிக்கோ, சிங்களப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்ல முடியாது. அவர்களுடைய எல்லை வரைவறுக்கப்பட்டதாக இருக்கின்றது. அதனை நம்பித்தான் அவர்களுடைய வாழ்க்கை உள்ளது. சுமார் இரண்டு இலட்சம்பேருடைய வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது. போரின்போது தமது சொத்துக்கள் – படகுகள் உபகரணங்களைப் பறிகொடுத்து, இடம்பெயர்ந்தது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அவர்கள் இந்தத் தொழிலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இந்திய மீனவர்களின் வருகை அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. இந்திய மீனவர்கள் வரும் காலங்களில் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடிவதில்லை. வடபகுதி மீனவர்கள் போட்டுவைக்கும் வலைகளை இந்திய இழுவைப் படகுகள் அறுத்துக்கொண்டு சென்று விடுகின்றது. இந்த இழுவைப் படகுகளால் மீன்வளமும் பெருமளவுக்கு அழிக்கப் படுகின்றது. அதனால், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரும் காலங்களில் வடபகுதி மீனவர்களால் கடலுக்குச் செல்ல முடிவதில்லை.

உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப் படகுகளைத்தான் இந்திய மீனவர்கள் பயன்படுத்துகின்றார்கள். இலங்கையில் இதனைத் தடைசெய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. மீன்வளம் அழிக்கப் படுகின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கப் படுகின்றது. எதிர்கால சந்ததிக்கு வளங்கள் இல்லாமல் போகின்றது. அதனைவிட, இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் உருவாகின்றது. கடந்த வாரம் கூட இரண்டு வடபகுதி மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

கேள்வி:
இந்திய அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றீர்கள்?

பதில்:
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதுதான் இந்தப் பிரச்சினைக்கு காரணம். இதற்கு இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம், தமிழக அரசாங்கம் என மூன்று அரசாங்கங்களும் பொறுப்பு. இந்திய மீனவர்களைத்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது. அவர்கள்தான் சட்ட விரோதமாக எல்லைமீறி வருகின்றார்கள். அவர்கள் எமது தொப்புள்கொடி உறவுகள் தான். அவர்கள் எமக்கு நிறைய உதவியுள்ளார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக எல்லை மீறி வந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இவ்விடயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் உறுதியாகச் செயற்டப் போவதில்லை. காரணம் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் தானே? சிங்கள மீனவர்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாக எதனையும் செய்யப்போவதில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எங்களைவிட நிறைய வசதிகள் உள்ளது. தொழில்நுட்பம் இருக்கின்றது. அவர்களை வேறு விதமான மீன்பிடிக்கு பயிற்றுவிக்கலாம். இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கலாம். அப்படியான சில திட்டங்கள் அவர்களிடம் இருந்தாலும் கூட, அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கேள்வி:
இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்வது இந்திய மீனவர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்:
இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் இரும்பு விலைக்குத்தான் விற்கப்பட்டது. இந்தப் படகுகள் பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டவையாக இருப்பதால், இரும்புத் தேவைக்குத்தான் இவற்றைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். ஏலம் நடைபெறும் இடத்துக்கு நானும் போயிருந்தேன். அதன்போது ஒரு படகுக்கு அதன் என்ஜின் இருக்கவில்லை. படகும் பலமாகச் சேதமடைந்திருந்தது. அது உக்கி – பழுதடைந்திருந்தது. அதனை பயன்படுத்த முடியாது. அதனை இரும்பு விலைக்குக் கொடுப்பதைவிட வேறு வழியிருக்கவில்லை.

கேள்வி:
இரு தரப்பு மீனவர்களுக்கு இடையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுக்களில் எவ்வாறான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன?  இதில் தீர்வு காண முடியாமல் போன்மைக்கு காரணம் என்ன?

பதில்:
கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருகின்றது. இவை சுமுகமாகவும் நடைபெற்றது. ஆனால், அவர்களுடைய கோரிக்கை என்னவென்றால், எமது பகுதிகளுக்குள் வந்து மீன்பிடிப்பதற்கு தம்மை அனுமதிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கௌ்ள வில்லை. அதனை நாம் அவர்களிடம் சொன்னோம். எங்களுடைய சுமார் இரண்டு இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் உள்ளது. அத்துடன் எமது கடல் ஒரு சிறிய பகுதிதான். இதற்குள் நீங்களும் வந்து வலையைப் போட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கினோம். ஆனால், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அரசியல் தலைமையும் இதனையிட்டுக் கவலைப் படுவதாக இல்லை.

கேள்வி:
இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் இலங்கை அரச தரப்பு கையாளும் உபாயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வடக்கு கடல்பகுதியில் கடற்படை நிலை கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் அவர்கள் தமது கடமையைச் செய்திருக்கின்றார்கள். இருந்தபோதிலும், அதனையும் தமிழக மீனவர்களின் ஊடுருவல் இடம்பெறுகின்றது. முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். இப்போது அவ்வாறு செய்வதில்லை.

இலங்கை அரசாங்கம்தான் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்த வில்லை. அதனை அவர்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தாமையும் இந்த ஊடுருவல்கள் அதிகரித்தமைக்குக் காரணம்.

Tamil News

2 COMMENTS

  1. […] மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைய யார் காரணம்? தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பது வடபகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பான ஒரு நிலையைமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-169-february-12/ https://www.ilakku.org  […]

Leave a Reply