என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது | இந்துகாதேவி

224 Views

சாதிக்க முடியும்இந்துகாதேவி

என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும்

குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இந்துகாதேவி கணேஷ் அவர்களுடனான  நேர்காணல்….

நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ்

“பெண்கள் அதிகம் இத் துறையைத் தெரிவு செய்வதில்லை இருப்பினும் நான் இத் துறையைத் தெரிவு செய்தால், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற ரீதியிலே இத் துறையை தெரிவு செய்திருந்தேன்.”

“என்னை விமர்சிப்பவர்களுக்கு  என்னுடைய அடுத்த போட்டியின் வெற்றி மூலமாகத் தான் நான் அவர்களுக்கு பதில் கூறுவேன்.” -இந்துகாதேவி

கேள்வி :
உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றினை வழங்க முடியுமா?

பதில் :
என்னுடைய பெயர் இந்துகாதேவி கணேஷ். என்னுடைய சொந்த இடம் புதியநகர், கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம். என்னுடைய அப்பா புகையிரத விபத்தில் 1999ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதனால் அம்மாவுடன் தான் வளர்ந்து வருகின்றேன். எனக்கு அண்ணா ஒருவர். அவர் திருமணம் செய்து விட்டார். அம்மா சிறிய நாடு ஒன்றிற்கு சென்று தான் எங்களை வளர்த்தவர். நான் ஆரம்பக்கல்வி தொடக்கம் கல்விப்பொது தராதர சாதாரண தரம் வரைக்கும் கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தான் கல்வி கற்றிருந்தேன். பின்னர் உயர்தர கல்வியினை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் கற்றிருந்தேன். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்ட பின்னரே நான் குத்துச்சண்டைப் பயிற்சியை ஆரம்பித்திருந்தேன்.

கேள்வி :
நீங்கள் தற்போது பெற்றுள்ள வெற்றிக்கான உந்து சக்தியாக இருந்தது என்ன?

 சாதிக்க முடியும்பதில் :
சிறிய வயதில் இருந்தே நான் தந்தை இல்லாமல் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலே வளர்ந்திருக்கின்றேன். எனக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள்ளே அப்போதே தோன்றியது. ஆனால் எந்த துறையில் எப்படி, எவ்வாறு சாதிக்க வேண்டும் என்று எனக்கு தெரியாமல் இருந்தது. நான் உயர்தரம் படித்துக்கொண்டு இருக்கும் போது பாடசாலையின் விளையாட்டுத்துறை ஆசிரியரே எனக்கு இதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்திருந்தார்.

கேள்வி :
இந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

பதில் :
ஆரம்பத்தில் இத் துறையில் தான் நான் முன்னுக்கு செல்வேன் என்ற ஒரு யோசனை இருக்கவில்லை. பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் தான் என்னை உன்னால் முடியும் என வழிப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் என்னுடைய இடைவிடா முயற்சியாலும் எனக்கும் ஒரு நம்பிக்கை வந்தது. என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் பெண்கள் அதிகம் இத் துறையைத் தெரிவு செய்வதில்லை. நான் இத் துறையை தெரிவு செய்தால் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற வகையில் தான் நான் இத் துறையைத் தெரிவு செய்திருந்தேன்.

கேள்வி :
உங்களுக்கான பயிற்சிகள் அதற்கான உதவிகள் சரியாக கிடைத்தனவா?

பதில் :
எனக்கு ஆரம்பத்தில் முல்லைத்தீவினைச் சேர்ந்த வள்ளுவன் ஆசிரியர் பயிற்சியினை வழங்கியிருந்தார். நான் என்னுடைய வீட்டில் இருந்து மூன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று பின்னர் பேருந்தில் முல்லைத்தீவு செல்ல வேண்டி இருந்தது. அங்கு சென்றாலும் பயிற்சியினை பெறுவதற்கான எல்லா உபகரணங்களும் இருந்தது என்று சொல்வதற்கு இல்லை. என்னால் முடிந்தளவு பயிற்சியினை மேற்கொண்டு தான் இன்று நான் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றேன். அத்தோடு உயர்தரத்தை கற்றதோடு இரண்டு வருடம் கண்டியிலுள்ள M.A.S கம்பனியில் வொக்சராக பணி புரிந்து கொண்டிருந்தேன். இப்போது ஒருவருட காலமாக தான் கிக் வொக்சிங் மேற்கொள்கின்றேன். அதுவும் எங்களுடைய ஆசிரியர் கொழும்பில் தான் இருக்கின்றார். நான் இப்பொழுது கிக்பொக்சிங்கிற்கு பயிற்சியை மேற்கொள்வதாக இருப்பின் கொழும்பு சென்றே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

கேள்வி :
நீங்கள் மேலும் சாதனைகளைப் புரிவதற்கு தமிழ் மக்களிடம் இருந்து என்ன ஆதரவுகள் அல்லது உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் :
நான் போட்டியில் வெற்றி பெற்று வந்ததன் பின்னர் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் நிறையவே ஆதரவு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதேபோல் எங்களுடைய இடத்தில் இருக்கின்ற தமிழ் மக்களும் நிறையவே ஆதரவுகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் எனக்கு இதற்கு மேல் முன்னேறிச் செல்வதற்கும் அவர்களுடைய ஆதரவு தேவை. அதேபோல் இது தொடர்பான பயிற்சி வகுப்பு கொடுப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் என்னை போல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் பிள்ளைகளை இந்த துறையில் வளர்த்து விட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அதற்கான பயிற்சி வகுப்பினை மேற்கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கான உதவிகளும், ஆதரவும் எனக்கு எம் மக்களிடம் இருந்து தேவை.

கேள்வி :
உங்கள் அடுத்த முயற்சி என்னவாக இருக்கப்போகிறது?

பதில் :
என்னுடைய அடுத்த முயற்சி பல்கேரியாவில் ஒரு போட்டி நடைபெற இருக்கிறது. அதில் 27 நாடுகள் பங்குகொள்கிறார்கள். குறித்த போட்டி உலக சம்பியன் போட்டிக்கான ஒரு தெரிவுப் போட்டி. அந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும். வெற்றி பெற்றாலே அதன் பின்னர் இடம்பெற இருக்கும் உலக சம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். குறித்த போட்டியில் கலந்து கொள்வதோடு அப் போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் அடுத்த முயற்சியாக இருக்கிறது.

கேள்வி :
எமது இளைய தலைமுறைக்கு நீங்கள் என்ன கருத்தை சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் :
எம் இளம் சமுதாயம் நல்ல பாதையை விட்டு வழி தவறியே செல்கிறார்கள். அதிகமானவர்கள் தொலைபேசிப் பாவனையாலும், போதைப்பொருளுக்கும் அடிமையாகி தம் எதிர்காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் களத்திலே விளையாடுவது எங்களுடைய உடலுக்கும் நல்லது. ஆனால் இன்று எல்லோரும் தொலைபேசியிலே (பிறீபெயர், பப்ஜி) இவ்வாறு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கும் தீங்கு, எங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் அதிக பிரச்சினைகள் வருகின்றது. இதனை விடுத்து நாங்கள் ஏதோ ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நமக்குப் பிடித்த அந்த துறையில் போய்க்கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு இலட்சிய பாதைநோக்கி நாம் சென்றால், ஏனைய விடயங்களில் சுவாரஸ்யம் இருக்காது. எங்களுடைய மனதும் அதனை விட்டு வெளியே செல்லாது. எனவே எம் இளைய தலைமுறையினர் எமக்கு பாதகமான பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு எந்த துறையிலாவது முன்னுக்கு வரவேண்டும் என முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி :
இந்த போட்டியில் வெற்றியீட்டித் திரும்பிய பின்னர் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகம் பேசப்பட்டது. அதுபற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் :
உண்மை தான். என்னைப்பற்றி சமூக ஊடகங்களில் அதிக வீடியோக்கள், மீம்ஸ் அப்படி வந்திருந்தது. எனக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்குதோ அதேபோல் எதிர்ப்பும் இருக்க வேண்டும். எனக்கு கிடைத்த எதிர்ப்பில் தான் நான் முன்னுக்கு வந்திருக் கின்றேன் என கூறலாம். என்னைப்பற்றி யாராவது குறைகூறிய போது அந்த நேரத்தில் தான் நான் யோசித்திருக்கின்றேன். எந்த இடத்தில் எங்களை அவமானப் படுத்தினார்களோ அந்த இடத்தில் அவர்கள் திரும்ப எதுவுமே கதைக்க முடியாத அளவிற்கு நாங்கள் திரும்பி வந்து நிற்க வேண்டும். அதேபோல் இப்போது என்னை விமர்சிக்கிறவர்களுக்கு நான் கூறிக்கொள்கின்றேன். என்னுடைய அடுத்த போட்டியில் வெற்றி மூலமாக தான் நான் அவர்களுக்கு பதில் கூறுவேன்.

Tamil News

1 COMMENT

  1. […] என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இந்துகாதேவி கணேஷ்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply