வடக்கு கிழக்கு மாகாணசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும்-பா.அரியநேத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும்

வடக்கு கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாகவும் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் வடக்கு கிழக்கு மாகாணசபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

3000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் என்னும் தலைப்பில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம்   இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் , “வரவு செலவுத்திட்டம் பூர்த்தியடைந்த பின்னரே மாகாணசபை தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பின் உண்மைத்தன்மையினை அறிந்துகொள்ளமுடியும்” என  தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“பனையானது தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். கொழும்பு காலிமுகத்திடலில் பெருமளவான பனைமரங்கள் நடப்பட்டிருந்தது.2012ஆம் ஆண்டு அந்த பனைமரங்கள் அகற்றப்பட்டு தென்னை மரங்கள் நடப்பட்டது.கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள்.இந்த பனைமரங்கள் அந்த வரலாற்றினை கூறும் என்ற காரணத்தினால் அந்த பனை மரங்கள் அகற்றப்பட்டன.தமிழர்களின் வாழ்வுடன் பிணைந்தது என்பதற்கு இதனைவிட வேறு உதாரணங்கள் இல்லை.

 பசில் ராஜபக்ஸ மாகாணசபை தேர்தலை நடாத்தப்போவதாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.13வது அரசியலமைப்பு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஊடாக வடக்கு கிழக்கு இணைப்பாக வந்தாலும் கூட ஜே.வி.பி வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக 2006ஆம்ஆண்டு அது பிரிக்கப்பட்டது.அதன் பின்னர் கிழக்கு மாகாணசபை தேர்தல் இரு தடவையும் வடமாகாணசபை தேர்தல் ஒரு தடவையும் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் எந்தவொரு மாகாணசபை தேர்தலும் நடைபெறவில்லை. தற்போது இந்தியா அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட அழுத்தங்கள் காரணமாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதாக கூறியிருக்கின்றார்கள்.

எனினும் பசில் ராஜபக்ஸவின் அறிவிப்பானது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.நவம்பர் மாதம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கு முன்னோடியாக இவ்வாறான அறிவிப்பினை வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் முடிவுற்றதன் பின்னர் அவர்களின் மனநிலையில் என்னமாற்றம் வருகின்றது என்பதை யாரும் சொல்லமுடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப்பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகவேயிருக்கின்றோம்.வடக்கு மாகாணசபையினையும் கிழக்கு மாகாணசபையினையும் நாங்கள் கைப்பற்றுவோம்.ஆனால்தேர்தல் நடக்குமா இல்லையா என்பதை வரவு செலவு திட்ட வாக்கெடுப்புக்கு பின்னர் முன்னெடுக்கப்படும்” என்றார்.


ilakku-weekly-epaper-150-october-03-2021