அரசியல் கைதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்-அருட்தந்தை மா.சத்திவேல்  கண்டனம்

அரசியல் கைதிகள்

“அரசியல் கைதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்” என தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (15) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகளின் இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கருதுவதோடு இத்தகைய அனாகரிகமான செயலை மிகவும் வன்மையாகவும் கண்டிக்கின்றது.

இலங்கை மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கின்ற நாடு எனில் குறிப்பிட்ட அமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி துரித விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்குவதோடு மனநல சிகிச்சையும் அளித்தல் வேண்டும். அதுவே இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு காட்டுகின்ற நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். இல்லையெனில் இது இலங்கை அரசும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கெதிராக செயல்படுகின்றது என்பதை சுட்டி நிற்கும்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும், இச்சட்டத்தால் நீண்ட காலம் சிறையில் வாடுவோரின் மனித உரிமை விடயமாகவும் ஆராய ஆட்சியாளர் குழு நியமித்து இருப்பதாக கூறுவது கேளிக்கூத்தாக அமையும். அது மட்டுமல்ல அரசின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான செயற்பாடு ஐ .நா மனித உரிமை பேரவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே அமையும்.

குறிப்பிட்ட அமைச்சரின் செயல்பாடு நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுவதோடு வாழ்க்கையில் விரக்தி நிலையும் ஏற்பட்டு அத்தோடு உளவியல் ரீதியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறைச்சாலை கைதிகளை பாதுகாக்க வேண்டிய அமைச்சரே இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுவதோடு அனைத்து அரசியல் கைதிகளையும் பாதுகாப்பு மிகுந்த தமிழர் பிரதேசங்களில் சிறைச்சாலைக்கு மாற்றி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக பாதுகாப்பான தமிழர் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றி பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

இனவாத ஆட்சியாளர்கள் ஆசியாவின் அறிவாலயம் எரிந்து சாம்பலாக்கி இனப்படுகொலையுடனான இன அழிப்போடு நின்றுவிடாது அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம்

நீதி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நாட்டின் இனவாத அரசியல் தமிழ் மக்கள் இனிவரும் காலங்களிலும் அடக்கி ஒடுக்கும் என்பதற்கு இன்னுமொரு சாட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரே சக்தியாக நின்றால் மட்டுமே எமது எதிர்காலம் காக்கப்படும்.

இச் சம்பவத்தை கருத்திற்கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையுடனான இன அழிப்பிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியேற்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லுமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021