1980களின் இறுதிப் பகுதியில், இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், படுகொலை செய்யப்பட்ட அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் மனித உரிமைத் தரவு ஆய்வுக்குழு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, “இந்த வன்முறையானது டிஜிட்டல் காலத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஒருபோதும் முறையாகக் கணக்கிடப்படவோ, அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவோ இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
“அவர்கள் வரலாற்றிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். அவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்ட அடையாளங்களை மனித கண்ணியத்துடன் மீட்டெடுப்பதே எமது தற்போதைய பணியாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “முப்பது வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், ‘என்ன நடந்தது?’ என்பது இப்போது கேள்வியல்ல என்றும் மாறாக ‘எதற்காக யாரும் இதுவரை பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படவில்லை?’, ‘இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தண்டனையிலிருந்து தப்பும் நிலை நீடிக்கப் போகிறது?’ என்பதே முக்கியக் கேள்வி” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்காக இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது.
இப்படை 1990 மார்ச் வரை இலங்கையில் தங்கியிருந்தது.
இக்காலப்பகுதியில், இந்தியப் படையினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுக்களும் இணைந்து பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பகரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அவர்கள் கூட்டுப் படுகொலைகள், தனிநபர் கொலைகள், சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல், பரவலான மற்றும் திட்டமிடப்பட்ட துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் மனித உரிமைத் தரவு ஆய்வுக்குழு ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



