யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “நினைவாயுதம்” ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்று (16) ஆரம்பமாகிறது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தனர்
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் மே 16ஆம் திகதி முதல் மே 18ஆம் திகதி வரை “நினைவாயுதம்“ ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறுகிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே “கந்தகபூமி உயிர் வலியின் மொழி” கவிதைப் போட்டியை நடத்தியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
“முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஆதாரபூர்வமான தரவுகள், ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை இளையோர் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவாக நாங்கள் கண்காட்சியை நடத்தவுள்ளோம்” யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.



