நீதியும் மக்கள் இறைமையும் மறுக்கப்படும் உலகில் தேசிய ஒருமைப்பாடே ஒரே பலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 402

இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக அமெரிக்க அணுவாயுதப் பலத்தை முன்னிறுத்தி உலகின் மூலவளங்களையும் மனித வலுவையும் மூலதனங்களையும் அமெரிக்கா பயன்படுத்துவது அமெரிக்காவின் உரிமையாகும் என்பதாகவுள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் ஆட்சி மாற்றத்துக்கு அல்லது சுதந்திரமாகச் செயற்படாதவாறு தடுக்கப்படுவதற்கு உள்ளாவதை எந்த அனைத்துலக சட்டங்களாலேயோ அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தாலேயோ தடுக்க இயலாது அவற்றை வல்லாண்மை நிலை கொண்டு ஒடுக்குவது.  கூடவே அமெரிக்கக் கண்டத்து அயல்நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் மேலாண்மைக்குரிய நிலப்பரப்புக்களே என்ற நிலைப்பாட்டுடன் கிறீன்லாந்து முதல் கனடா வரை அணுகுவது. இத்தகைய நீதியும் மக்கள் இறைமையும் மறுக்கப்படும் உலகில் தேசிய ஒருமைப்பாடே மக்கள் இறைமையைப் பேணுவதற்கான பலமாக உள்ளதென்பதை இலக்கு, கிறீன்லாந்து, கியூபா, வெனிசுலா, மெக்சிக்கோ, கியூபா வாழ் மக்களின் தேசிய ஒருமைப்பாடு ட்ரம்பின் திட்டங்களைத் தடுப்பதற்கான ஒரே பலமாக உள்ளதை எடுத்துரைக்க விரும்புகிறது.
இன்று ட்ரம்பிசத்தையே அநுரகுமாரிசமும் சிறிலங்காவின் அரசியலில் முன்னெடுக்கிறது என்பது இலக்கின் இவ்வாரக் கவனப்படுத்தலாக உள்ளது. ஆயினும் ஒரு வேறுபாடு அணுவாயுதப் பலம் இல்லாவிட்டாலும் வல்லாண்மைகளுடனும் கூட்டாண்மைகளுடனும் இலங்கைத் தீவின் நில கடல் வானைப் பகிர்ந்து இணைந்து அந்தப்பலத்தில் அரசஅதிபர் சர்வாதிகாரத்தை முன்னெடுப்பது என்பதாக உள்ளது.
இந்தக் கூட்டாண்மை பங்காண்மைகள் தரும் துணிவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் பிரித்தானிய காலனித்துவ காலம் வரை ஈழத்தமிழரின் யாழ்ப்பாண – வன்னி அரசுக்களாக உலகின் நவீன அரசியலில் தெளிவாக இனங்காணப்பட்ட ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்புக்களை சிங்கள பௌத்தர்களின் பௌத்த மதப்புனிததலங்கள் சிங்கள தொல்லியல் மானிடவியல் வனவியல்  எச்சங்கள் காணப்படும் நிலப்பகுதிகள் எனப் பலவகையான நியாயப்படுத்தலூடாக அநுர அரசு ஆக்கிரமிக்கிறது என்பதனை இன்று உலகம் தெளிவாகக் காண்கிறது என்பதனைப் பல அனைத்துலக சமுக ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஈழத்தமிழர் தாயக நில ஆக்கிரமிப்பை, 1983 ஆடி ஈழத்தமிழின அழிப்பின் மூலகர்த்தாவான ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கால அமைச்சர் சிறில் மத்தியூ  1970களில் திட்டமிட்ட முறையில் வரைந்த இலங்கை வரைபடமொன்றின் அடிப்படையில் தனது அமைச்சுக்கள் வழி அநுர அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் வழி ஐக்கிய தேசியக்கட்சியின் ஈழத்தமிழின அழிப்பின் அங்கமாக தேசிய மக்கள் சக்தி தன்னையும் இணைத்துக்கொள்கிறது.
அவ்வாறே 1999 செம்மணியில் 35 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது குறித்த விசாரணையைக் கிடப்பில் போட்ட சந்திரிகா பண்டாரநாயக்காவின் அரசியலின் அங்கமாகத் தேசிய மக்கள் சக்தி திகழ்வதால் கடந்த 27 ஆண்டுகள் ஈழத்தமிழரைச் சிறிலங்கா இராணுவம் கொத்துக் கொத்தாகக் கொரூரமான முறையில் செம்மணியில் இனஅழிப்பு நோக்கில் கொன்று குவித்த இனப்படுகொலைகளுக்கு ஈழத்தமிழர் அனைத்துலக நீதியைக் கோரி வருநிலையில், அதனை இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள் இனவழிப்புக்கான சான்றுகள் ஐநூறைத் தாண்டி சான்றாதாரப்படுத்தும் நிலையில், உலகில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை நீதிக்காகக் குரல் கொடுக்க வைக்கிறது. இந்நிலையை அநுர அரசு உள்ளக விசாரணை மூலமே நீதிப்படுத்த வேண்டுமென வாதிட்டு சிறிலங்காவின் இறைமையுள் யாருமே தலையிட முடியாதென தடுத்து வருகிறது. ஆயினும் நீதியான உள்ளக விசாரணைக்குரிய செயற்பாடுகள் எதனையும் இதுவரை அநுர அரசு செய்யவில்லை.
இவை சிங்கள அரசுக்களின் ஈழத்தமிழின  நில அபகரிப்பை மட்டுமல்ல ஈழத்தம்pழின அழிப் பையும் தன்னை இடதுசாரித் தோழராகவும் அமெரிக்க நண்பராகவும் சீனாவின் துணையாளராகவும் இந்தியாவின் கூட்டாண்மை பங்காண்மையாளராகவும் நான்கு வகை முகத்துடன் அரசியல் பிரம்மாவாகத் திகழும் அநுரகுமார உளமார ஏற்றுச் செயற்படுவதற்கு உதாரணமாகிறது.
இந்த உள் போக்கை அறியாத ஈழத்தமிழின இளைய சமுதாயத்தை “பிரதேச அபிவிருத்தி” வழி அவர்களுக்கான வளமான வாழ்வை அநுர உருவாக்குவார் என்ற நம்பிக்கை திட்டமிட்ட முறையில் தேசிய மக்கள் சக்தியினரால் வளர்க்கப்பட்டு அவர்களது வாக்குப்பலத்தை மட்டுமல்ல செயற்பாட்டுத் திறன்கனையும் தேசிய மக்கள் சக்தி தனதாக்கிடப் பகிரதப்பிரயத்தனம் செய்வதை ஈழத்தமிழர் தாயகச் செய்திகள் நாளாந்தம் வெளிப்படுத்துகின்றன.
இதன் உச்சமாக  சிறிலங்காவின் பொதுநிர்வாகம் மகாணசபைகள் உள்ராட்சி சபைகளுக்கு 2026 இல் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு எவ்வாறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற முற்திறனாய்வும் 2027 வரவுசெலவுத் திட்டத்தில் எவ்வாறு நிதி ஒதுக்குவது என்ற முற்திட்டமிடலும்  ஒருங்கே கொழும்பில் இடம்பெற்ற 31.07.2026 கூட்டத்தில் சிறிலங்காவின் அரசத் தலைவர் அநுரகுமார திசநாயக்கா “பிரதேச நிர்வாக அலகுகளை பிரதேச அபிவிருத்தி அலகுகளாக” மாற்றுவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.
அதாவது அநுரகுமாரிசத்தின் மாற்றம் அல்லது தீர்வு என்பது சிங்கள நாட்டின் சிங்களச் சட்டத்தில் இடம்பெறும் பிரதேச நிர்வாகங்கள் போதிய அபிவிருத்தியை அளிக்காத காரணத்தால்  அவற்றை பிரதேச அபிவிருத்தி அலகுகளாகவே மாற்றி விடுவது என்பதாகவுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளோ ஆறுகட்சி இணைப்பு ஆதரித்த இணைப்பு என்று எல்லாம் கூட்டணி அமைக்கின்றனரே தவிர  ஈழத்தமிழர்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்  ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதியை வளர்ச்சியை அவர்களிடமிருந்து வரி அறவிடும் சிறிலங்கா செய்தேயாகவேண்டும் எனப் பேசும் துணிவில்லையென்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் தெளிவாக்குகின்றன.
இந்நிலையில் இதுவரை அதிகாரப்பரவலாக்கல் குறித்த கூட்டாட்சி பேசப்பட்டதாலேயே உரிய தீர்வை ஈழத்தமிழர்களால் பெற முடியவில்லை இனி சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி என்ற கோரிக்கையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் யாழ்ப்பாணப் பாராளமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிவருகின்றார். இது இடைக்காலத் தீர்வாகக் கட்டமைந்தாலே இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தமது நாளாந்த வாழ்வினை முன்னெடுக்கும்போது தங்கள் வரியினைப் பெறும் சிறிலங்காவுக்கு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அந்த வரியினை மீள் பகிர்வு செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளதென்பதை உறுதிப்படுத்தும். இதனைச் சிறிலங்கா செய்யாது விட்டால் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைத்துக் கொள்வது இலகுவாக அமையும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
அதே வேளை  ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினை அவர்களின் இறைமையை சிறிலங்கா ஏற்று இறைமைப்பகிர்வுகளுடன் கூடிய இலங்கைத் தீவாக இலங்கைத்தீவின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல் என்பதாக அமைகின்ற காலம் வரும்வரை இலங்கைத் தீவின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலை என்பது நடைமுறைச் சாத்தியமாகாது என்பது இலக்கின்  இவ்வார எண்ணமாக உள்ளது.  இதற்கு தேசிய ஒருமைப்பாடு ஈழத்தமிழரிடை வலுவடைய வேண்டும் என்பதனை வலியுறுத்தவே போரைச் சந்திக்கின்ற நேரத்திலும் உக்ரேன் மக்கள், பலஸ்தீன, ஈரானிய மற்றும் லெபனிய மக்கள் எவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டுடன் உறுதியின் உறைவிடமாக  உள்ளனர் என்பதை ஈழத்தமிழர்கள் மனதிருத்த வேண்டிய நேரமிது என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஆசிரியர்

Tamil News