இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து வருகின்றது. பல இடங்களில் முஸ்லிம் சமூகத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயங்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்களால் பேச முடியாது என்பது நாமறிந்த உண்மையாகும்.
முஸ்லிம்களின் உரிமையைப் பெற்றுத் தருவோம் என்று ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள் உரிமைக் கோசத்தை முன்வைத்து வாக்குகளைப் பெற்று இன்று வெறும் அட்ப சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்து விட்டன. சலுகைகளை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொண்ட அவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேச முடியாது என்பதையும் நாம் கண்டுள்ளோம்.
இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாகாணம் கிழக்கு மாகாணம். முஸ்லிம்களின் அடையாளத்தைச் சொல்லும் பிரதான மாகாணம் இது. வேறு கட்சிகளில் போட்டியிட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
கடந்த எமது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்தப் பாலர் பாடசாலை பணியகத்திற்கு தவிசாளர்களாக முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையில் எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என்ற ஆதங்கத்தை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் எம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடந்த 4 மாதங்களாக திட்டமிடல் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக உள்ளது. இதனை நிரப்ப தகுதியான உத்தியோகத்தர்களாக முஸ்லிம் உத்தியோகத்தர்களே இருக்கின்றனர். இந்த ஒரே காரணத்திற்காக இந்தப் பதவி இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது.
திருகோணமலை மாவட்டத்ததைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றார். ஆனால் அவரால் இந்த வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஏனெனில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட சலுகைகளுக்குள் இது போன்ற உரிமை சார்ந்த விடயங்கள் இல்லை. அவர்கள் கேட்டதையெல்லாம் இந்த அரசு கொடுத்து விட்டது. இனி எதுவும் கேட்க முடியாது. அதனால் தான் இவர்களால் இது போன்ற விடயங்களைப் பற்றி கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. பேச முடியாமல் உள்ளது.
இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களாகச் செயற்படும் இவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தர முடியாது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
இப்போது முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களை ஐக்கிய சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள தான் பேசி வருகின்றார்கள். முஸ்லிம் கட்சிகள் செய்ய வேண்டிய இந்தப் பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்கின்றது.
எனவே, இனியும் இந்த முஸ்லிம் கட்சிகளை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்து விடக்கூடாது. நமது சமூகம் ஏனைய சமூகத்தவரைப் போன்று இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ அனைத்து முஸ்லிம்களும் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அவலநிலை – மட்டு.நகரான்
- மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன? – பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்
- “என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்