இலங்கையில் மனித உரிமைகளை உறுதிசெய்ய பிரிட்டன் ஆதரவளிக்கும்! இன்று கொழும்பு வரும் அமைச்சர் அறிவிப்பு

மனித உரிமைகளை உறுதிசெய்ய பிரிட்டன் ஆதரவுமனித உரிமைகளை உறுதிசெய்ய பிரிட்டன் ஆதரவு: இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதி செய்வதை முன்னிறுத்தி செயல்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக அந்த நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இன்று வருகைத தரவுள்ள அவர் தனது, அறிவிப்பில், “கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றேன். உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரிட்டன் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் பொருளாதார ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக்கொண்ட வலையமைப்பைக் கட்டியெழுப்பிவரும் அதேவேளை, இவ்விடயத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எதிர்பார்த்துள்ளது. அத்துடன், இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயல்பட்டு வருபவர்களுக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.

பொதுநலவாய அமைப்பில் பிரிட்டனும் இலங்கையும் நீண்டகாலமாக அங்கம்வகிப்பதுடன் சர்வதேசத்தின் கரிசனைக்குரிய பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றி வந்திருக்கின்றன. அவற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முக்கியமானவை’ என்று தெரிவித்துள்ளார்.