பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 31 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது



