வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான, சிலை திறப்பு விழாவின் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையானார்.
அவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தமது சேவை பெறுநருக்கு பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸிற்கு பிணை வழங்கியது
மேலும் இந்த வழக்கினை நாளைய தினம் (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



