தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக, நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகள் தங்களின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, மண்டைதீவு மற்றும் புங்குடுதீவு கடற்றொழிலாளர்களின் வலைகளை அறுத்து நாசமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பல இலட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளனர்.
அவர்கள் மீண்டும் அந்த வலைகளை கொள்வனவு செய்து தொழிலில் ஈடுபடுவதற்கு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர் என்றும் நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.
“வலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கக் கூட எவரும் இல்லை. யாரை குறை சொல்வது, யாரிடம் சென்று முறையிடுவது எனத் தெரியாத நிலையில், அநாதரவாக தொழிலாளிகள் நிற்கின்றனர்” என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
எனவே இந்த விடயத்தில் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அரசாங்கமும் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வை எட்ட வேண்டும் என்றும் நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.



