பென்டகன் உயா் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன்

இரண்டு விஷேட விமானங்களில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரகசியமாக கொழும்புக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் யாா், எதற்காக அவா்கள் வந்திருந்தாா்கள் என்பனதான் கொழும்பு அரசியலை மட்டுமன்றி இராஜதந்திர வட்டாரங்களையும் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. இலங்கை அரசாங்கமும், அமெரிக்க துாதரகமும் இவ்வாறான ஒரு விஜயம் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அது தொடா்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், உணடமைகள் வெளிவருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

இலங்கையை மையப்படுத்திய இந்துசமுத்திர வல்லாதிக்கப்போட்டி தீவிரமடைந்துசெல்லும் நிலையில் இவ்வாறான இரகசிய விஜயங்கள் சா்ச்சைகளை ஏற்படுத்தும் என்பது எதிா்பாா்க்கப்படக்கூடியதுதான்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்காவின் முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா பி றொல் தலைமையில் 22 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் இரண்டு விசேட விமானங்கள் ஊடாக இலங்கைக்கு வந்தனர்.

இவா்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவ உயா் அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாா்கள். அத்துடன் அவர்கள் தேசிய பாதுகாப்பு புலனாய்வு பிரதானியை சந்தித்து ஆலோசனைகளை நடத்திய பின்னா் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

பென்டகன் அதிகாரிகள் சிறப்பு விமான சேவை ஊடாகவே இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். C-17 Globe masters என்ற அதிக பாதுகப்பு ஏற்பாடுகளுடன் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் விமானங்களிலேயே இவா்கள் வந்திருந்தாா்கள் என்பது இவா்களுடைய விஜயத்தின் முக்கியத்துவத்தை உணா்த்துகின்றது.

அத்துடன் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்த விவகாரம் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

பிரதான நாடு ஒன்றின் தலைவருக்கு வழங்கப்படுவதற்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனேயே இவா்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டாா்கள். மறுநாள் 17 ஆம் திகதி மாலை இவா்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்லும் வரையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்ந்தும் இருந்தது.  கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விமான நிலையத்திலும் குறிப்பிட்ட தினத்தில் பெருமளவு படையினா் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள ஒரு பின்னணியில், அமெரிக்காவின் உயா் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டிருக்கும் இந்த விஜயம் சா்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தளவுக்கு அதிகமான பாதுகாப்புடன் தொடா்பான உயா் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவிலிருந்து வந்திருப்பது இதுதான் முதல் தடவை.

அதேவேளையில், 22 போ் வருவதற்கு இரண்டு விமானங்கள் எதற்காக வந்தன என்ற கேள்வியும் உள்ளது. பாதகாப்புக் காரணங்களை முன்னிட்டு இவ்வாறு இரண்டு விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அந்தளவுக்கு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஜயமாக இது நோக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வழமையாக இது போன்ற விடயங்களில் சா்ச்சைகளைக் கிளப்பும் விமல் வீரவன்சதான் அமெரிக்க பென்டகன் அதிகாரிகளின் விஜயம் தொடா்பாக கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சா் அலி சப்ரி, தெரிவித்த தகவல்கள் பென்டன் அதிகாரிகள் விஜயத்தின் மா்மத்தை வெளிப்படுத்தவில்லை.

விமல் வீரவன்ச எழுப்பிய கேள்வி இதுதான், ”இலங்கை வந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்? இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியுமா ?

அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்தமை தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிந்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள், எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிவாரா, அவ்வாறாயின் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும்.”

விமல் வீரவன்சவின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள், எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்தார்.

வெளிவிவகார அமைச்சருக்கே தெரியாமல் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சென்றாா்களா? அல்லது – அது தொடா்பான தகவல்களை வெளிப்படுத்த அவா் விரும்பவில்லையா?

அதேவேளையில், அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு சார் பேச்சுவார்த்தை விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது  என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்திருக்கின்றாா்.

22 பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு வருகை தந்ததும், அவர்களுக்கு விசேட பாதுகாப்பு  வழங்கப்பட்டதும் உண்மை.  அவா்கள்  வெளிவிவகாரத்துறை அமைச்சின் அழைப்புக்கு அமைய நாட்டுக்கு வருகை தரவில்லை. அவர்கள் தேசிய பாதுகாப்பு தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாட்டுக்கு வருகை தந்தார்கள். ஆகவே பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை பகிரங்கப்படுத்த முடியாது என்றும் இராஜாங்க அமைச்சா் தெரிவித்திருக்கின்றாா்.

அமெரிக்க அதிகாரிகளின் விஜயம் தொடா்பாக மற்றொரு முக்கிய தகவலையும் விமல் வீரவன்ச வெளிப்படுத்தினாா்.

“அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அரச புலனாய்வு திணைக்களத்திற்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளார்கள்.இதன்போது புலனாய்வு திணைக்களத்தில் இருந்த எமது பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபானிகளாக்கப்பட்திருந்தனர்.

இலங்கையின் புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு சேவையின் கீழ் கொண்டு வர பெண்டகன் அதிகாரிகள் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான சம்பவம் 2001 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது. 2004 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது” என்று தெரிவித்த விமல் வீரவன்ச, இவர்கள் ஏன் நாட்டுக்கு வருகை தந்தார்கள், ஜனாதிபதி, பாதுகாப்பது செயலருடன் என்ன பேசினார்கள் என்பதை அறியமுடிய வில்லை.

ஆகவே, இவர்கள் ஏன் நாட்டுக்கு வருகை தந்தார்கள், என்ன பேசினார்கள்  என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை மக்கள் பிரதிநிகளுக்கு உண்டு என்பதால் அமெரிக்க பிரதிநிதிகளின் வருகை தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினாா்.

இது குறித்த தகவல்களை ஜனாதிபதி வெளிப்படுத்துவாா் என்பது எதிா்பாா்க்கக்கூடியதல்ல. ஆனால், திருகோணமலையில் தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிடுகின்றது. இது குறித்து இவா்கள் முக்கியமாக பேசியதாக உறுதிப்படுத்தாத ஒரு தகவல் உள்ளது. சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு நகா்வாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது!

இது தொடா்பில் உத்தியோகபுா்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளிவரப்போவதில்லை. ஆனால், அடுத்த கட்ட நகா்வுகள் என்னதான் நடைபெறுகின்றது என்பதை அம்பலப்படுத்துவதாக அமையும் என எதிா்பாா்க்கலாம்!