தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படாத கொடுமைகளாக, சில கட்டமைப்புக்களூடாக தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். து.ரவிகரன்

தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள்

தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படாத கொடுமைகளாக, சில கட்டமைப்புக்களூடாக தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இலக்கு  ஊமகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில்  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடி என்பதற்கு சில பதில்களை கூற வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பொருளாதார நெருக்கடியினை பல ஆண்டுகளாக அனுபவித்துவிட்டார்கள். இதனைவிட கொடூரமான செயல்களை இலங்கை அரசாங்கம் தமது நிர்வாகத்தின் மூலமும் , படையினர் மூலமும் தமிழ் மக்களை வதைத்து விட்டார்கள்.

பொருளாதார தடை அதனை விட ஆகாயத்திலிருந்து வானூர்திகளின் மூலம் குண்டுவீசி தாக்குதல், குடும்பம் குடும்பமாக பலரை அழித்தமை, கடலில் மீனவர்கள், படகுகள் உபகரணங்கள் அழிக்கப்பட்டமை,2009ம் ஆண்டு நடைபெற்ற தமிழர்கள் மீதான உச்சகட்டப் போரின் போது கஞ்சிக்காக(உணவு) காத்திருந்த குழந்தைகள் மேல் அரசாங்கம் வானூர்திகளின் மூலம் குண்டுகளைப் போட்டு கொன்றது இப்படி பல கொடுமைகள். இதன் தொடர்ச்சியாக இப்போதும் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படாத கொடுமைகளாக சில கட்டமைப்புக்களூடாக தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். குறிப்பாக மகாவலி எல், தொல்லியல், வன இலாகா, வனஜீவராசிகள் , இல்மனைற் திணைக்களம், படையினர் என ஏராளமான தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

தொல்லியல் திணைக்களத்தினரின் ஊடாக புத்த மத திணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர்களின் இடங்களில் சிங்களவர்களை குடியேற்றி தமிழ் மொழி செழித்திருந்த இடங்களில் எல்லாம் இப்போது சிங்கள மொழி ஆதிக்கம் செய்கின்றது.

எங்களுடைய பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் செய்வது குறைக்கப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் மக்கள் இப்போதும் போராடி கொண்டு தான் இருக்கின்றார்கள். இன்றைய தென்னிலங்கை மக்களின் போராட்டத்தை வரவேற்கின்றோம். எமது மக்கள் ராஜபக்ச குடும்பத்தை கொடூரமானவர்கள் என்று எப்போதே நிராகரித்து விட்டார்கள். தென்னிலங்கை மக்களுக்கு இவர்களை இப்போது தான் தெரிந்துள்ளது.

தென்னிலங்கை மக்களுக்கு இப்போதைய நெருக்கடி என்பது எரிபொருள், எரிவாயு, மின்சாரம், பசளை, விலைவாசி உயர்வு ஆகியன, எமக்கோ இவற்றுடன் சேர்ந்து எமது இனமானது ஆட்சியாளர்களால் சிறுக சிறுக அழிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்கள் சிறந்த ஆட்சியாளர்களாக இல்லை. நாட்டின் பொருளாதாரமானது கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து கொண்டே வந்திருக்கிறது. நாட்டிற்காக உழைக்க கூடியவர்களாக வளர்ச்சி பாதையில் நாட்டை கொண்டு செல்ல கூடிய நோக்கம் கடந்த காலங்களில் இருந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களிடமும் இருக்கவில்லை. அதற்குரிய அறிவோ, ஆற்றலோ அவர்களிடம் இல்லை. மாறாக தமிழர்களை ஒடுக்கவும் , அழிக்கவும், நிலங்களை பறிக்கவும் என தமிழர்கள் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியே ஆட்சியாளர்களிடம் இருந்தது.

இலங்கையின் ஆட்சியாளர்களால் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியவில்லை. தென்னிலங்கை மக்கள் தம் மீது அழுத்தப்படும் பொருண்மிய சுமையால் சீற்றம் கொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இயலாமை தற்போது வெளிப்படையாக தெரிகின்றது. இவர்களின் திறனின்மையால் விளைந்த பொருண்மிய நெருக்கடியானது தற்போது தமிழர்களையும் கடுமையாக பாதிக்கின்றது.

எமக்குரிய சுய நிர்ணய உரிமையை தன்னாட்சியை உலகம் அங்கீகரிக்க வேண்டிய காலம் இது. சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்து போவதனை ஏற்க முடியாது. புலம்பெயர் உறவுகளோடும், எமக்கு ஆதரவான பன்னாட்டு ஆற்றல்களோடும் சேர்ந்து தமிழர்கள் எம்மால் திறன் வாய்ந்த சக்தியாக நிறுவ முடியும் என்பதனை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என மேலும் தெரிவித்தார்.

Tamil News