கிழக்கைப் புரியாத ”தமிழ் தேசிய கட்சிகள்”;பறிபோகும் பிரதிநிதித்துவம்-ம.பரந்தாமன்

501 Views

‘வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகப்பகுதி,இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும்’ இந்த கோரிக்கை இன்று, நேற்று ஏற்பட்ட கோரிக்கை அல்ல. உரிமை நிலை நிறுத்தலுக்கான இந்த போராட்டம் 70 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது.

இந்த போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டன. 30 வருடத்திற்கு மேலான அகிம்சை ரீதியான போராட்டம், 35வருடத்திற்கும் மேலாக ஆயுத ரீதியான போராட்டம், இன்று மீண்டும் இராஜதந்திர ரீதியான போராட்டம் என தமிழர்கள் தங்களது வாழ்வுரிமைக்காக பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட, நடத்தப்படும் பவ்வேறுபட்ட ஒடுக்குமுறைகளில் இருந்து சமூகத்தினை பாதுகாக்கவும், தமக்கான உரிமையினை வென்றெடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை, செயற்பாடுகளை சோரம் போகும் தமிழர்களை பயன்படுத்தியும், ஏகாதிபத்திய கூட்டாளிகளைக்  கொண்டும் சிங்கள தேசம் அடக்கியும் நலிவடையச் செய்தும் வருகிறது.karuna gotabaya கிழக்கைப் புரியாத ''தமிழ் தேசிய கட்சிகள்'';பறிபோகும் பிரதிநிதித்துவம்-ம.பரந்தாமன்

தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் இராஜதந்திர ரீதியான அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றினை இல்லாமல் செய்து தமிழர்களின் பலத்தினை சிதைப்பதற்கு சிறீலங்கா அரச தரப்பு மிகவும் திட்டமிட்ட செயற்பாடுகளை எமது சமூகத்தினைக் கொண்டே முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமிழர்கள் பலம் அடையும் போதேல்லாம் எமது கைவிரல்களைக் கொண்டே எமது கண்களை குத்தும் மேற்கொண்ட வரலாறு நாமறிந்ததே. இந்த நிலையின் ஒரு வெளிப்பாடே இன்று நாம் காணும் தமிழ் தேசிய அரசியலின் படுகுழி நோக்கிய பயணம்.

தமிழர்களின் அரசியல் ரீதியான போராட்டத்தினை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியல் பலத்தை இலகுவாக சிதைப்பதற்குரிய வழிவகைகளை சிங்கள அரசுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தமிழ் தேசிய கொள்கையினை சிதைக்கவென களமிறக்கப்பட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் செயற்பாடுகளே இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய பிளவுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பிளவானது இன்று குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முன்னர் என்றுமில்லாத மிகவும் பாதகமானதொரு சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையிலேயே 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இணைந்த வடகிழக்கே தமிழரின் தாயகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆயினும் இனப் பபரம்பல், புவியியல் அமைப்பு, அரசியல் நிலைமைகள் தொடர்பில் கிழக்கு தனித்துவமான, சிக்கலான விடயங்களைக் கொண்டுள்ளது.

இந்த நிலைமையினை தமிழ் தேசிய தலைமைகளை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. இதனால் சிங்கள பேரினவாதம் இலகுவாக தனது குறிக்கோள்களை இங்கு எட்ட வழியேற்படுகிறது.

பொதுவாக தமிழ் தேசிய அரசியற் கட்சிகள் வடக்கினை மையப்படுத்தியே தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்ற கருத்து இங்கு பரவலாக காணப்படுகிறது.unnamed 5 கிழக்கைப் புரியாத ''தமிழ் தேசிய கட்சிகள்'';பறிபோகும் பிரதிநிதித்துவம்-ம.பரந்தாமன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓரளவிற்கு பரந்துபட்டு செயற்படுகின்ற போதிலும், இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைக்க முடியாதவர்களாக, தீர்மானங்களை எடுக்க முடியாதவர்களாக இங்குள்ள கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர் என்பது வெளிப்படை.

ஏனைய தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன கிழக்கின் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் எந்தவிதமான புரிதல்களும் அற்றவையாக இருக்கின்றன. இது அவர்களின் வேட்பாளர் தெரிவுகளில் இருந்து நன்கு வெளிப்படுகிறது. திரு.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் பரப்புரை தவிர்ந்த எந்த செயற்பாடுகளையும் இதுவரை இங்கு மேற்கொண்டதாக தெரியவில்லை.

தமிழ் தேசிய கட்சிகள் தமக்குள்ள எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கிழக்கு தொடர்பாக ஒரு குறைந்தபட்ச ஒருமைப்பாட்டுக்காவது வந்திருக்க வேண்டும். இந்த மாபெரும் தவறின் விளைவு மிக பாதகமாகவே அமையும்.

இம்முறை கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலும், அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தினை இழக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழர்களின் பிரதிநித்துவத்தினை குறைப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஸவின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் பல வழிகளிலும் தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கருணா களமிறக்கப்பட்டு தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டு கட்சியில் வியாழேந்திரனும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் அருண் தம்பிமுத்து மற்றும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இருந்து‚ ‘கல்விமான்களும்’ களமிறக்கப்பட்டுள்ளனர்.VIYALENTHIRAN கிழக்கைப் புரியாத ''தமிழ் தேசிய கட்சிகள்'';பறிபோகும் பிரதிநிதித்துவம்-ம.பரந்தாமன்

தாங்கள் நிச்சயமாக தோற்போம் என்று தெரிந்தும் இவர்கள் களமிறங்கியுள்ளனர் /களமிறக்கப்பட்டுள்ளனர் என்றால், அதன் நோக்கத்தினை நாங்கள் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

இதே போன்று பிள்ளையானின் கட்சியை தனித்து போட்டியிடச் செய்யப்பட்டுள்ளது. வியாழேந்திரன், அருண் தம்பிமுத்து, பிள்ளையான் இவர்கள் அனைவரும் மகிந்தவின் கைப்பொம்மைகள் என்று அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், தனித்தனியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மகிந்தவுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதி வரவேண்டும் என்பதற்கு அப்பால், தமிழர்களின் பலம் சிதைக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவுள்ளமை புலப்படுகின்றது.

அதேபோன்று கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அணி வேண்டும் என்று கருதுபவர்களும், தமிழ் தேசியத்திற்காக போராடுபவர்களும் பல்வேறு வழிகளிலும் கிழக்கில் பிரிந்து நிற்பதும் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து செல்வதற்கான ஒரு வழியாகவே இருக்கின்றது.

வடக்கில் தேர்தல் தொடர்பான கொள்கைகள் எவ்வாறு இருந்தாலும் கிழக்கில் அனைவரும் இணைந்து போட்டியிடுவதன் மூலமே தமிழ் பிரதிநித்துவத்தினை காப்பாற்ற முடியும்.

சிங்கள சமூகமும், முஸ்லிம் சமூகமும் இன்று கிழக்கில் மிகவும் திட்டமிட்ட வகையில் காய் நகர்த்தல்களை முன்னெடுத்துள்ள நிலையில், தமிழர் தரப்பு அவை தொடர்பில் எந்த விழிப்புணர்வும் இன்றியிருப்பது தமிழ் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமையப் போகின்றது.ARUN THAMPIMUTHTHU கிழக்கைப் புரியாத ''தமிழ் தேசிய கட்சிகள்'';பறிபோகும் பிரதிநிதித்துவம்-ம.பரந்தாமன்

எனவே தமிழ் அரசியல் தலைமைகள் கிழக்கில் தமிழர் இருப்புக்கு இருக்கின்ற பேராபத்தை உணர்ந்தவர்களாக தெளிந்த மனதோடு ஒன்றுபட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதே காலத்தின் கட்டாயமாகும்.

 

‘இணைத்த வடகிழக்கு தமிழர் தாயகம்’ என மேடைகளில் மட்டுமே பேசாது செயலிலும் கட்டுவதற்கு தமிழ் தேசியத் தலைமைகள் இனியாவது முன்வர வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

Leave a Reply