தமிழ் நாடு: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கடலுக்குள் அமைக்கப் படப்போகும் பேனா நினைவுச் சின்னம்

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது.

81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ II, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது.

இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. IV (A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் கட்ட முடியாது.

ஆனால், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த விதிமுறையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட அந்தத் திருத்தத்தின்படி, CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான், தற்போது பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவரான ஆண்டன் கோம்சும் இது தொடர்பாக துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார். “சமீபத்தில் தேதிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் தமிழக கடற்கரையில் 422 கி.மீ. அளவுக்கு கடல் அரிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியாவில் கடல் அரிப்பு அதிகமுள்ள நான்காவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1990 முதல் 2018வரை 1802 ஹெக்டேர் நிலம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்கள் நூற்றுக்கணக்கில் செய்தும் பலனில்லை.

ஆகவே நினைவுச் சின்னத்தின் நிலைப்புத் தன்மை, கடலரிப்பு, CRZ அறிவிப்பாணை, மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்” என்கிறார் ஆண்டன் கோம்ஸ்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. “இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. திட்ட அமைவிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறவில்லை என சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் சென்னையைச் சேர்ந்த 14 கிராமங்கள், வட சென்னையைச் சேர்ந்த 20 கிராமங்கள் என 34 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பங்குனி ஆமைகள் (Olive Ridley Turtle) திட்ட அமைவிடத்தில் தென்படுவதாக சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் 175வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழிந்து வரும் உயிரினமாக IUCN அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்குனி ஆமைகளின் வாழிடமாகவும் முட்டையிடும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளதால். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது.

திட்ட அமைவிடத்தில் இருந்து 130மீ தூரத்தில் கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. பொதுவாக இந்த முகத்துவாரப் பகுதியில தான் மீன்கள் அதிகம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதனால், கடலின் உயிர் பன்மையம் செழிப்பாக வைத்திருக்க உதவும் இப்பகுதியின் ஆரோக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரத்தின் அருகில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அப்குதியின் உயிர் பன்மையம் கடுமையாக பாதிக்கப்படும்.

ஏற்கெனவே துறைமுகம் கட்டியதன் விளைவாக ஆண்டிற்கு 20 மீட்டர் அளவிற்கான கடல் அரிப்பை வட சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் மெரினா கடற்கரை உட்பட அருகாமையில் உள்ள பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும்” என அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கான ஆய்வே முறைப்படி செய்யப்படவில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்.

நன்றி பிபிசி தமிழ்