பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்!

இந்தியாவின் தமிழகத்தின் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று (23) இடம்பெற்றது.

தமிழகத்தில் மட்டுமன்றி இந்தத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையிலும் வலுத்துள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப் பரப்பில் தேர்தலுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஆகியவற்றை ஆதரிக்கும் வகையிலான செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனைத் தாண்டி, இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகளும் தேர்தல் குறித்த தமது ஆதரவுகளை முன்னிறுத்தியிருந்தனர். இதுதவிர புலம்பெயர் நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் தமிழக தேர்தலில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்படி இன்று (23) காலை 7 மணிஅளவில் ஆரம்பமான வாக்குப்பதிவுகள் மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் மொத்தமாக 82 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.