ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர்கல்வி கற்க தாலிபன் தடை- ஐ.நா. கவலை

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது என்று தடை விதித்து  உடனடியாக அமுவுக்கு வரும் வகையில்  அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாலிபன்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தபின், மாணவர்கள் மற்றும் மாணவிகள் இடையே வகுப்பறையில் ஒன்றாகக் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே மேல்நிலைப் பள்ளிகள் மாணவிகளை சேர்த்துக்கொள்ள மறுக்கும் நிலையில், பெண்கள் முறைப்படுத்தப்பட்ட கல்வியைப் பெறுவதை இந்தப் புதிய உத்தரவு தடை செய்கிறது.

 மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்லாயிரம் மாணவிகளும் பெண்களும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதினர். ஆனால், அதன் பின்னர் பொருளாதாரம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், இதழியல் உள்ளிட்ட பாடங்களை உயர்கல்வியில் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தாலிபன்களை ஆப்கானிஸ்தானின் அதிகாரப்பூர்வமான அரசாக மேற்கத்திய நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. தாலிபன் அமைப்பின் ஆப்கானிஸ்தான் அரசை தாங்கள் முறைப்படி அங்கீகரிக்க வேண்டுமானால் தாலிபன்கள் அந்நாட்டு பெண்கள் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அகுந்சாதா மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தினர் நவீன கல்விக்கு எதிராக இருக்கின்றனர்.

குறிப்பாக அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்வி கற்பதை எதிர்க்கின்றனர். தாலிபன் அரசின் சமீபத்திய உத்தரவு ஆழ்ந்த வருத்தத்துக்குரியது என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.