கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே தங்கியிருக்கிறது – மொழியாக்கம்: ஜெயந்திரன்

329 Views

கொப் 26 மாநாட்டின் வெற்றி

கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே தங்கியிருக்கிறது

மொழியாக்கம்: ஜெயந்திரன்

உண்மை நிலையைப் பூசி மெழுகுவதா அன்றேல் காலநிலை தொடர்பாக நிலவுகின்ற அவசரத் தன்மையை உண்மையாகவும், நேர்மையாகவும் எடுத்துக்கூறி, அந்த யதார்த்த நிலையை எதிர்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வலியுறுத்துவதா என்பதே கோப் 26 உச்சி மாநாட்டுக்காக ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ (Glascow) நகரில் ஒன்றுகூடிய உலகத் தலைவர்களுக்கு இருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெரிவாகும். ஒரு பேரழிவு நிகழாமல் தடுக்க வேண்டுமென்றால், உண்மையையும் நேர்மையையும் தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கணிதமே இவை எல்லாவற்றின் நடுவிலும் இருக்கின்ற உண்மையான விடயமாகும். இந்த உச்சி மாநாட்டில் வாரி இறைக்கப்படும் வார்த்தைகளை நோக்கும் போது, அதன் முக்கிய பணி என்ன என்பது இன்னுமே வரையறை செய்யப்படவில்லை. பூகோளம் வெப்பமடைதலை 1.5 பாகைகளுக்குக் குறைக்க வேண்டிய அவசரம் இருப்பதாக எல்லாத் தலைவர்களுமே தெரிவிக்கிறார்கள். ஆனால் அப்படிச் சொல்வதன் பொருள் உண்மையில் என்னவென்று மிகச்சிலரே தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

கொப் 26 மாநாட்டின் வெற்றி2015ம் ஆண்டில் பாரிஸ் நகரில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் படி 2030ம் ஆண்டில் 53 பில்லியன் தொன்கள் வெளியீடு இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டது. பூகோளம் வெப்பமாதலை 1.5 பாகை செல்சியஸ் என்ற எல்லைக்குள் வைத்திருப்பதற்கு அதற்குள் 25 பில்லியன் தொன்கள் வெளியீட்டைக் குறைத்தாக வேண்டும். மிக முக்கியம் வாய்ந்த இந்த பத்து ஆண்டில் 28 பில்லியன் தொன்கள் வெளியீடு குறைக்கப்பட வேண்டும். எமது கோளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொள்பவர்கள் அனைவரும் இந்தக் கணக்கை மனதில் வைத்திருக்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் பூகோளம் வெப்பமடைதல் தொடர்பாக உலகம் முக்கிய நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இதிலுள்ள துர்ப்பாக்கிய நிலை என்னவென்றால், கொப் 26க்கு முதல் கார்பன் வெளியீடுகளைக் குறைப்பது தொடர்பாக ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் இதுவரை 4பில்லியன் தொன் வெளியீடே குறைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் தற்போதுள்ள வெளியீட்டுக்கும் குறைக்கப்பட வேண்டிய வெளியீட்டுக்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கிறது. இதன் காரணமாக வெப்பமாதல் 2.7 செல்சியஸ் ஆக இருக்கப் போகிறது. இதனால் பெரும் காலநிலைப் பேரழிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. எல்லா விடயங்களையும் விட இந்தக் கணிப்பு முக்கியமானது. இந்தக் கணிப்பின் அடிப்படையிலேயே கிளாஸ்கோவில் கூடியுள்ள நாடுகள் அனைத்தும் தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். காலநிலைச் செயற்பாடுகளைப் பின்தொடரும் அமைப்பின் கருத்துப்படி, ஜி20ஐச் சேர்ந்த எந்த ஒரு நாடும் காலநிலைச் செயற்பாடு தொடர்பாக உருப்படியான எந்தச் செயற்பாட்டையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

உண்மை நிலையைப் புறந்தள்ளிவிட்டு, காலநிலை தொடர்பாகக் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கொப் 26 மாநாட்டுக்காகக் கிளாஸ்கோவில் கூடியுள்ள தலைவர்களும், அமைச்சர்களும் சொல்லக்கூடும். இந்த விஞ்ஞானக் கணிப்பீடு மாற்றப்பட முடியாதது என்பதனால், கிளாஸ்கோவுக்கு தற்போது வருகை தந்திருக்கின்ற தலைவர்கள் உண்மை நிலையை ஏற்றுக்கொண்டு, தமக்குள்ளே கலந்துரையாடி ஏற்கனவே தாம் மேற்கொண்ட தீர்மானங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க தம்மை மீள அர்ப்பணிப்பதற்கான அழுத்தத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அறிவிப்புகளை மேற்கொள்ளும் இரண்டு வாரக் களியாட்டமாக இந்த மாநாடு அமையக் கூடாது. காலநிலை மாற்றம் தொடர்பாகத் தற்போதைய நிலைமையின் பாரதூரத் தன்மை சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டு, காத்திரமான வகையில் முன்னேற்றத்தை நோக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காலநிலை மோசமடைவதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பைச் சுமக்காது, இம்மாற்றங்களினால் மிக அதிகமான பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கின்ற வறிய நாடுகளில் வாழும் மக்களுக்கு உரிய நீதியை வழங்குவது இதில் ஒரு முக்கிய பகுதியாகும்.

கொப் 26 மாநாட்டின் வெற்றி

ஏற்கனவே வழங்கப்பட்டுத் தேக்க நிலையில் இருக்கும் உறுதிமொழிகள், தற்போது செயற் படுத்தப்பட வேண்டும். அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் என 2009ம் ஆண்டில் வாக்களிக்கப்பட்ட 100 பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்குவதும் அதே வேளையில் கடந்த ஜூன் மாதம் ஜி7 சந்திப்பில் கோவிட்டுக்கு எதிராக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதாக பிரதம மந்திரிகள் வழங்கிய உறுதி மொழியை நடைமுறைப்படுத்துவதும் முக்கிய விடயங்களாகும்.

காலநிலைக் குழப்பத்தால் பல வறிய நாடுகளும், அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளும் சந்தித்து வருகின்ற இழப்புகளையும், சேதங்களையும் நாம் நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். உலகிலே காபனை மிக அதிகமாக வெளியிடுகின்ற சீனா போன்ற நாடுகளின் மேல் மிக அதிக அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்குடன் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய வறிய நாடுகளுக்கும், அபிவிருத்தியடைந்துவிட்ட செல்வந்த நாடுகளுக்கும் இடையே பாரிஸ் சந்திப்பில் ஏற்பட்ட கூட்டமைவைப் புதுப்பிப்பதற்கு இது சிறந்த வழியாகும்.

‘கிளாஸ்கோவில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டுமானால், அங்கிருக்கும் விஞ்ஞான ரீதியிலான இலக்குகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் முயற்சியும் கைவிடப்பட வேண்டும். இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலநிலை மாற்றத்தில் பூச்சியம் என்ற இலக்கை அடைய வேண்டும் என உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 80 வீதத்தைக் கொண்டிருக்கும் நாடுகள் தீர்மானித்திருப்பது இங்கு ஒரு சாதகமான விடயமாகும். இந்த இலக்கை அடைவதற்கு இன்னும் முப்பது ஆண்டுகள் இருக்கின்ற போதிலும், உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலக்குகள் நீண்ட காலத்துக்கு உரியவையாக இருப்பதன் காரணத்தால் குறுங்காலத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இருக்க எந்தவொரு நாட்டுக்கும் அனுமதி வழங்கப்படக்கூடாது. அவுஸ்திரேலியாவை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், 2050ம் ஆண்டில் பூச்சிய இலக்கை அடையவேண்டும் என கடந்த வாரம் அது அறிவித்திருக்கிறது. ஆனால் அதன் 2030 ஆண்டுக்கான இலக்கைப் பார்க்கும் போது, 4பாகை செல்சியஸை எட்டும் ஆபத்து இருப்பதை அவதானிக்கலாம். அதே வேளையில் பூச்சிய இலக்கை 2060 இல் அடைய வேண்டும் என்ற இலக்கை சவூதி அரேபியா கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்தப் பத்து ஆண்டில் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் நாடாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எவரதும் நாடாக இருந்தாலும் சரி, தமது திட்டங்களை வெளியே பார்ப்பதற்கு பசுமையானதாகக் காட்ட முயல்கின்ற செயற்பாட்டை நாம் முற்றிலும் அனுமதிக்க முடியாது.

இப்படிப்பட்ட உண்மைகளை வெளிப்படையாகச் சொல்லும் போது, அதனால் ஆபத்துகளும் இருக்கின்றன. கிளாஸ்கோவில் நடைபெறும் இம்மாநாடு எதிர்பார்த்த இலக்கைத் தரவில்லை என்று கூறும் போது உலகமும் தனிப்பட்ட முதலீட்டாளர்களும் காலநிலை மாற்றம் தொடர்பாக தாம் ஏற்கனவே வைத்திருக்கின்ற திட்டங்களை கைவிட முயற்சிக்கலாம். கொப் 26 மாநாட்டின் வெற்றிடென்மார்க்கின் தலைநகரமான கொப்பன்ஹேகனில் 2009 இல் நடைபெற்ற கொப் மாநாட்டைக் கருத்தில் எடுக்கும் போது, ஒரு முழுமையான உடன்படிக்கையை எட்டாமல் அந்த மாநாடு இடையிலே முடிந்தது. அது காலநிலை மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கிளாஸ்கோ மாநாட்டின் முடிவு எதுவாக அமைந்தாலும், அப்படிப்பட்ட பின்விளைவு ஏற்பட நாம் அனுமதிக்க முடியாது. உலகம் இதுவரை கண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பார்க்கும் போது, அப்படியான ஒரு விடயம் நடைபெறும் சாத்தியம் தற்போது இல்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுவிட்டதாக நாம் பாசாங்கு செய்ய முடியாது. ஏனென்றால் உண்மை நிலை அப்படியில்லை.

இதில் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், ஏனைய விடயங்களைப் போல காலநிலை நெருக்கடியிலும்  மெதுவாக அடையப்படும் வெற்றி, உண்மையான வெற்றியாக இருக்க முடியாது. காலத்தோடு நாம் முன்னெடுக்கும் இருப்பியல் போராட்டத்தில் நாம் மெதுவாகவே வெற்றி பெறுகிறோம் என்றால், அதன் பொருள் உண்மையில் பில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் அதீத வெப்ப அலைகளுக்கு முகங்கொடுப்பார்கள், கணக்கிட முடியாத மில்லியன் கணக்கிலான மக்கள் இடப்பெயர்வைச் சந்திப்பார்கள், பவளப் பாறைகள் போன்ற எமது இயற்கை அதிசயங்கள் அனைத்தும் அழிவுக்கு உள்ளாகும். பல மில்லியன் எண்ணிக்கையிலான நல்ல, பசுமையான தொழில் வாய்ப்புகளை வழங்கி, வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பது போன்ற காலநிலைச் செயற்பாடுகளினால் நாம் அடையக்கூடிய நன்மைகளை நாம் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.

கொப் 26 மாநாட்டின் வெற்றிஉண்மையை எதிர்கொள்வது கொப் 26 மாநாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகளை மட்டுமல்லாது அதன் பின்னர் நடைபெறக் கூடிய விடயங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 2025ம் ஆண்டில் அடுத்த கொப் மாநாடு நடைபெறும் வரையும் நாட்டுக்கு நாடு உறுதிமொழி வழங்குகின்ற நிகழ்வு நிகழப் போவதில்லை. இவ்வாறான ஒரு பாதையில் நாம் செல்வோமானால், 1.5 செல்சியஸ் என்ற இலக்கை நாம் இழந்துவிடுவோம். 1.5க்கு ஏற்ற ஒரு இலக்கை கிளாஸ்கோவுக்குப் பின்னர் நாம் அடைய வேண்டுமாயின், தற்போது ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப விரைவான ஒரு சந்திப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு வெற்றியைக் காண நாங்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறோம். மிக முக்கியமான இந்த உச்சி மாநாட்டை நாம் நெருங்கும் போது, அரச பதவிகளில் உள்ளவர்களுக்கு இல்லாத ஒரு ஆற்றலும், வல்லமையும் எம்மைப் போன்ற அரசில் பதவிகளை வகிக்காதவர்களுக்கு இருக்கிறது. மிகவும் தீர்க்கமான இந்தப் பத்து ஆண்டில் நாம் காணும் முன்னேற்றம் தொடர்பான உண்மையை, அது எவ்வளவு தான் கசப்பாக இருந்தாலும் அதனை அப்படியே எடுத்துக் கூறுவது தான் அந்த சக்தி ஆகும்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த இரண்டு வாரங்களில் எமக்கு இருக்கும் இந்தச் சக்தியை எந்தவித தயக்கமும் இன்றிப் பிரயோகிப்பதே, சரியான விளைவைக் காண எமது பங்கை நாம் ஆற்றுகிறோம் என்று சொல்வதன் உண்மையான பொருளாகும்.

நன்றி: தகாடியன்.கொம்

  ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad கொப் 26 மாநாட்டின் வெற்றி தலைவர்கள் உண்மையை உரைப்பதிலேயே தங்கியிருக்கிறது - மொழியாக்கம்: ஜெயந்திரன்

Leave a Reply