யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் நேற்றுக் காலமாகியுள்ளார்.
கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளதாக கூறப்படுகின்றது.
எம்.ஜி.ஆர் போன்று கறுத்த கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர்.
எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகனாக மட்டும் அவர் இருக்கவில்லை. சமூக தொண்டனாகவும் , வறியவர்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் , நினைவு நாட்களில் தன்னால் முடிந்தளவுக்கு தனது சொந்த நிதியில் ,வறியவர்களுக்கு உதவிகளை செய்து வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை பகுதியில் எம்.ஜி ஆருக்கு தனது சொந்த பணத்தில் சிலையும் வைத்துள்ளார்.
எம் ஜி.ஆர்.நற்பணி மன்றத்தினூடாக மக்கள் செயற்திட்டங்களை ஒழுங்கமைத்து செயற்பட்டு வந்த இவர், எளிமையான பண்புமிக்க மனிதர்.
இந்நிலையில், அவரது பணிகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன். வல்வெட்டித்துறை எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற தலைவர் ஊடகவியலாளர்கள் மற்றும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை அதிபர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தியதுடன் பலரும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.