இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் கூற்று – வன்மையாகக் கண்டிக்கின்றோம்

135 Views

இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் கூற்று

சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே “இராணுவத்தினரை வைத்து விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து சேதனப்பசளையைப் பயப்படுத்தி விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும்” என்று தெரிவித்திருப்பதை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளதுடன் இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசிய இனத்திற்கான தீர்வினைப் பெற்றுத்தரும் ஜனநாயகப் பாதையில் இருந்து சிங்களப் பேரினவாதம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதையும் எடுத்துக்காட்டுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இ.சிறீஞானேஸ்வரன் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில்,

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிறீலங்காவின் ஜனாதிபதி மேற்கூறப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் தான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்தே மக்கள் தனக்கு வாக்களித்தாகவும், ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களைக் கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் தான் அப்படி இல்லை என்றும் தெரிவித்திருந்ததாக நவம்பர் 8 ஆம் திகதி வெளியான தமிழ்மிரர் பத்திரிகை தன் தலைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இவ்வகையான மனநிலை ஒருபோதும் தமிழ்த் தேசத்தின் மக்களுக்குத் தீர்வைக்கொண்டு வரப்போவதில்லை என்பதுடன் சிங்கள தேசத்து மக்களையும் இராணுவக் காட்டாட்சிக்குள் கொண்டுவரும் மனநிலையையே பிரதிபலிப்பதாக உணர முடிகின்றது.

பொருளாதார பிரச்சனைகளைக் கடுமையாக எதிர்கொண்டுள்ள மக்கள் தற்போதைய அரசின் மீது நெருக்கடியை ஏற்படுத்தத் துணிவர் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராசபக்சே முன்னெச்சரிக்கையாக இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அதனை நியாயப்படுத்துவதற்காக தான் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரக் கூடியவர் என்று தெரிந்தே மக்கள் தனக்கு வாக்களித்தனர் என்பதைச் சொல்வதன் ஊடாக மக்கள இராணுவ ஆட்சிக்குத் தயாராக இருப்பதான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றார். இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் கூற்று கண்டிக்கப்பட வேண்டியதே.

இவ்வாறான மனநிலை தமிழ் மக்களின் வாழ்வியலைக் கடுமையாக குழப்பப்போவதுடன் அவர்களை அச்சப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் கூற்று – வன்மையாகக் கண்டிக்கின்றோம்

Leave a Reply