மலேசியா: அகதிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் அவர்கள் பற்றியான தவறான தகவல் பரவுவதை தடுப்பதும் பொதுமக்களின் பொறுப்பு என ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை தரப்பு தெரிவித்துள்ளது.
தவறான தகவல் பரவல் என்பது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்ப டுத்தக்கூடியது எனக்கூறியுள்ள மலேசியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகமையின் பிரதிநிதி தாமஸ் அல்பிர்சட், ஆதாரம் சார்ந்த வாதங்களை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
அகதிகளுக்கு அதிக நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் வழங்குவதற்கான உறுதியை மக்கள் அவர்களது பங்காக செய்யலாம் என உலக அகதிகள் தினம் அனுசரிப்பு தொடர்பான விவாதத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.
அகதிகளுக்கான தங்களது உதவியை வலுப்படுத்த அரசுக்கும் பிற தரப்பினருக்கும் பல வாய்ப்புகள் உள்ளதாக தாமஸ் அல்பிர்சட் கூறியிருக்கிறார். மலேசியாவில் நிலவும் தொழிலாளர் நெருக்கடி பரவலாக அறியப்பட்டுள்ள நிலையில், அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் இருப்பு அந்தளவுக்கு அறியப்படவில்லை என மியான்மர் சமூக அமைப்பு கூறுகிறது.
அகதிகள் வேலை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. அகதிகளை வேலைக்கு அமர்த்துவதை கருத்தில் கொள்ள வேண்டிய நேரமிது என அவ்வமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.