அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக புலம்பெயரும் சட்டவிரோத முயற்சியில் தொடர்புடைய இலங்கை படைகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சட்டவிரோதமாக செல்ல மக்களிடமிருந்து 7 மில்லியன் இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் 18 இலட்சம் ரூபாய்) பணத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் இலங்கை கடற்படை சேர்ந்த ஒருவரும் பெற்றிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் திகதி திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு 25 பேருடன் படகு வழியாக செல்லும் முயற்சியினை இலங்கை படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கையின் ஆட்கடத்தல், கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணையில், ஆட்கடத்தலில் தொடர்புடைய சுமார் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை படைகளைச் சேர்ந்த இருவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில், விசாரணைக்காக ஆஜாராகும்படி இலங்கை படைகளைச் சேர்ந்த இருவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களை ஆட்கடத்தல் விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்பவர்களுக்கு படகு ஒன்றை வழங்கிய இலங்கை கடற்படை சேர்ந்த சிப்பாய், இப்படகை பயன்படுத்தினால் நீங்கள் கைது செய்யப்பட மாட்டீர்கள் என சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவை நோக்கிய படகு வழி புலம்பெயர் முயற்சிகளை தடுக்க கண்காணிப்பு கருவிகள், பல கோடி ரூபாய் பணம் என அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கி வரும் சூழலில், இலங்கை படைகளை சேர்ந்த இருவர் ஆட்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.