ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே இறைமைப்பிரச்சினையென்பதை அரசியல் பிரச்சினையாக்கி இனஅழிப்பை நியாயப்படுத்த உதவாதீர்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 239 | Weekly ePaper 239

ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தாயகத்திலும் புலத்திலும் ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சனை என்பது இறைமைப்பிரச்சினை என்ற அடிப்படை உண்மையை விடுத்து அதனை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் தீர்வு காண வேண்டுமெனச் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஈழத்தமிழின அழிப்பை அவர்கள் நியாயப்படுத்த உதவுகின்றார்கள். அத்துடன் ஒரு சனநாயக ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும் முறையியல்களையும் ஈழத்தின் புத்திஜீவிகள் ஒரு தப்பிப் பிழைக்கும் பொறிமுறையாக மக்கள் முன் எடுத்துரைத்து சிறிலங்காவுக்குள் தீர்வு காணலாம் என்ற மயக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையென்றால் என்ன என்பதில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் தெளிவுபெற வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணான இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தங்களது தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியைப்பயன்படுத்தி வாழ இயலாமையே இன்றைய அவர்களின் தேசியப் பிரச்சினையாக உள்ளது. இது இறைமைப்பிரச்சினையே தவிர சிறுபான்மையினப் பிரச்சினையோ அல்லது மொழி மத பிரச்சினையோ அல்ல.
அத்தகைய வடிவங்களைச் சிறிலங்காவே காலத்துக்குக் காலம் தூண்டிவிட்டு ஈழத்தமிழர் இறைமைப் பிரச்சினையை ஈழத்தமிழர்களே சிறிலங்காவுக்குள் தீர்வு காண வேண்டிய அரசியல் பிரச்சினையாக வெளிப்படுத்த வைக்கச் செய்கிறது. இந்தப் பின்னணியில்தான் சிறிலங்காவின் அரசத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா குருந்தூர்மலையில் பௌத்த கலங்கரை விளக்கம்தான் இருந்தது விகாரையல்ல. அவை தமிழ் பௌத்தத்தின் தொன்மை அடையாளங்கள் அப்படியிருக்க அங்கு ஏன் மகாவிகாரையை விட அதிக நிலப்பரப்பினை கையகப்படுத்தி வைத்துள்ளீர்கள் எனத் தனது தொல்லியல் பணிப்பாளரிடமே கேள்வி கேட்டதும் அவர் பதவி விலகியதுமான கடந்த வார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் அரசத்தலைவரின் செயலாளர் மகாநாயக்கர்களுக்கு குருந்தூர்மலையில் மேலதிகமாகக் கைப்பற்றப்பட்ட காணிகள் அரசகாணிகளாகவே இருக்கும் அவை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது என உறுதிப்படுத்திக் கடிதமும் வழங்கியுள்ளார். இம்மாதம் 21ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கைக்குச் சிறிலங்காவின் பிரதிநிதி பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளதால் நரித்தந்திர அரசியல்வாதியான ரணில் அதனை வெற்றிகரமாகக் கையாள்வதற்கான தனது வேலைகளைத் தொடங்கி விட்டமை தெளிவாகிறது.
அதே நேரத்தில் இந்திய அமெரிக்க கூட்டொருங்குத் தலைமைத்துவத்தின் வழி சிறிலங்காவின் பிரச்சினைகளுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்த தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென்ற கருத்து வெளிப்படையாகவே சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் நிகழ்வுகளாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்தியதும் அதனை அடுத்து சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான வட்டமேசை மாநாடு நடைபெற்றதும் இவ்விருநாடுகளுக்கும் இடையில் கூட்டொருங்குச் செயற்பாடுகள் மேலும் பலம் பெறுவதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்கோவல் இந்திய அமெரிக்க இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாக இது வெளிப்படும் எனக் கூறியுள்ளார். இந்தப் பின்னணியில் தான் பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை அவர்கள் இலண்டனில் உள்ள ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அமைப்புக்களைச் சார்ந்த சிலரைச் சந்தித்து தங்கள் மூலமாக சிறிலங்காவில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை நெறிப்படுத்த இலண்டனுக்கு இவ்வாரத்தில் செல்லவுள்ளார்.
ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை என்பது ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதுகாக்கும் போராட்டமே தவிர அது பிரிவினைவாதப் போராட்டமில்லை. இதனை மறந்து, அதனை அரசியல் போராட்டம் என உலகம் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இன்றைய ஈழத்தமிழர்களின் பதிவுசெய்யப்பட்ட 13 ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளும் பிரிவினை கோரவில்லையெனவும் அதில் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த 12 கட்சிகளும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிலங்காப் பிரதமரிடமோ இந்தியப் பிரதமரிடமோ கோரியுள்ளனர் எனவும் இவ்வாரத்தில் செவ்வியளித்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாணசபைத் தலைவரும் முன்னாள் நீதியரசருமான சட்டவறிஞர் சி. வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளமை சட்டம் படித்த தமிழர்களால் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை வெறும் சிறுபான்மையினப் பிரச்சினையாக திரிபுபடுத்தப்படுவதற்கு மற்றொரு உதாரணமாகிறது. இதே நிலைப்பாட்டினை அரசியலாக்கிய சம்பந்தர் அவர்கள் இன்று 14 ஆண்டுகளுக்குப் பின் ஓரிரு மாதங்களுக்குள் ரணில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையை வெளிப்படையாகப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கப்போவதாக வரக்கூடிய தேர்தலைத் தனது கட்சியினர் எதிர்கொள்வதற்கான வாய்ச்சவாடலையும் விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்தால் 1833 இல் உருவாக்கப்பட்ட கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் தொடங்கப்பட்டு இன்று வரை 190 ஆண்டுகளாகத் தொடரும் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத ஐக்கியநாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையாக உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தன்னாட்சியைப் பயன்படுத்தி வாழ இயலாத எல்லைகளில் வாழும் மக்களெனப் பிரகடனப்படுத்தி அவர்களுக்கான நிர்வாகத்தைச் சீரமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதியை நியமிக்குமாறு யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாண்டு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் வேண்டுகோள் விடுத்தார். இதற்காக அவர் சிறிலங்காப் புலனாய்வாளர்களால் சிவில் உடையில் கொலைமுயற்சிக்கு உள்ளானதும் அல்லாமல் அவர் பொலிசாரை கடமைசெய்ய விடாது தடுத்தார் என அவரது பாராளுமன்றச் சிறப்புரிமையையும் மீறி அவரைக் கைது செய்து பிணையில் விட்டு இவ்வாரத்தில் மீளவும் அவரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து அவருக்கு இனங்காணக்கூடிய அச்சத்தைப் பொலிசார் விளைவித்து வருகின்றனர். கூடவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் யாழ்மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் மகளிர்அணிச் செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகிய மூன்று ஈழத்தமிழர்களையும் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் பொலிசார் கைது செய்து “மக்களை இனங்காணக்கூடிய அச்சத்துக்கு உள்ளாக்கி அவர்களின் அரசியல் பணிவைப்பெறுகின்ற சிறிலங்காவின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயலையம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இலக்கு ‘ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே! ஈழத்தமிழர்களின் இறைமைப்பிரச்சினையென்பதை அரசியல் பிரச்சினையாக்கி சிறிலங்காவின் இனஅழிப்பை அது நியாயப்படுதத உதவாதீர்கள்; மண் மீட்புப் போர்தான் தமிழீழத்தேசிய விடுதலைப் போராட்டம். அதுதான் இன்று துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் சனநாயகத்தின் வழி மண்ணை மீட்பதற்கான மக்கள் போராட்டமாகத் தொடர்கிறது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள்” என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகிறது.

Tamil News