ஈழத்தமிழர் இறைமையையும் தன்னாட்சியையும் மீள்விக்க இன்று என்ன செய்ய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 237

ஈழத்தமிழர் இறைமையையும் தன்னாட்சியையும் மீள்விக்க இன்று என்ன செய்ய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 237

இன்று ஈழத்தமிழர்கள் மேல் பௌத்த மதவெறியையும் சிங்கள இனவெறியையும் தூண்டி அவர்களை மற்றொரு பாரிய இனஅழிப்புக்கு உட்படுத்த ரணில் விக்கிரமசிங்காவின் இன்றைய அரசு வேகமாகச் செயற்பட்டு வருகிறது. இதனை ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா “நாட்டில் ஒவ்வொரு முறையும் திவாலாகிப் போகும் அரசாங்கங்கள் தாம் அரசியலில் தொங்குவதற்கான கடைசித் துருப்புச் சீட்டாக இனவாதம் மதவாதத்தைக் கையில் எடுப்பது வழமை. இப்பொழுதும் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராசபக்ச, கோட்டபாய ராசபக்ச குழுவினரும் ரணில் விக்கிரமசிங்காவும் அதனை மீளவும் கையில் எடுக்கின்றனர்” எனச் செய்தியாளர் சந்திப்பில் 31.05.2023 இல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் அரசு மீளவும் ஈழத்தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொன்றழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத இனப்படுகொலைத் திட்டத்தை தொடங்கியுள்ளதோ எனச் சந்தேகப்படத் தக்க வகையில் 02.06. 2023இல் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அவர்களை மருதங்கேணியில் மக்கள் சந்திப்பில் இருந்த பொழுது சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பிஸ்டல் துப்பாக்கியால் கொல்ல முயற்சித்துள்ளனர். பாதுகாப்புக்குப் பொலிசாரை அழைத்த பொழுது அவர்கள் வந்து பாராளுமன்ற உறுப்பினரைத் தாக்கி அவமதிப்பாகப் பேசியதும் அல்லாமல் கொலைசெய்ய முயன்றவர்களுடன் சமரசமாகி புகார் செய்யாது விடும்படியும் வற்புறுத்தி குற்றம் செய்ய முயன்றர்வர்களைப் பாதுகாக்கவும் செய்துள்ளனர். இது ஈழத்தமிழர்களுக்குச் சிறிலங்காவின் சட்டத்தின் ஆட்சி என்பது அவர்களை இனப்படுகொலை செய்பவர்களைக் காக்கும் கரமாக உள்ளதென்ற உண்மையை உலகுக்கு மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோ அல்லது குடியொப்ப முயற்சிகளோ எதுவுமே ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கான தீர்வைத் தராது. முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாண நூலக எரிப்பின் 42வது நினைவேந்தலில் குடியொப்பம் நடத்தப்படுவதற்கான பாதுகாப்பான சூழலேயில்லாத நேரத்தில் குடியொப்பத்தை கோரியுள்ளமை அரசியல்வாதிகள் நடைமுறை அரசியலைக் கவனத்தில் எடுக்காது பேசி மேலும் சிக்கல்களை உருவாக்குவதற்கு உதாரணமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இனஅழிப்பு சட்டப்பாதுகாப்பு இன்மை என்பனவற்றுக்கு உள்ளாவதற்கு ஒரேகாரணம் ஈழத்தமிழர்களின் உள்ளக வெளியக தன்னாட்சி உரிமைகளைக் கொழும்பு அதிகாரிகள் மறுப்பதே என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் தெளிந்த முடிபாக உள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர் முன்னுள்ள ஈழத்தமிழர் இறைமையையும் தன்னாட்சியையும் மீள்விக்க ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரே பதில் அவர்களின் உள்ளக வெளியக தன்னாட்சிகளை உலகு ஏற்க வைப்பது என்பதாகவே உள்ளது.
இதற்கு முதலில் செய்யப்பட வேண்டியது இன்று ஈழத்தமிழர்களைத் தங்கள் குடிகளென படைபல ஆக்கிரமிப்பு மூலமான அரசியல் பணிவால் உலகுக்கு வெளிப்படுத்தி அவர்களது தாயகத்தை ஆக்கிரமித்து அவர்களைப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை மூலம் தொடர்ந்து இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு செய்வதைத் தனது அரசியல் கொள்கையாகவும் அரசியல் கோட்பாடாகவும் கொண்ட சிறிலங்காவின் ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் எந்த முறையாலும் ஈழத்தமிழர்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்கும் ஒரு வெளிப்படையான மனித உரிமைகளைப் பேணும் நல்லாட்சியை என்றுமே தரவியலாது என்பதை ஈழத்தமிழர்கள் தேசமாக ஒருங்கிணைந்து எழுந்து உலகிற்கு சான்றாதரங்களுடன் வெளிப்படுத்த வேண்டும்.
இதனால் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தித் தங்களைத் தாங்களே ஆள இயலாத நாட்டெல்லையில் ஈழத்தமிழர்கள் 1948 முதல் இன்று வரை 75 ஆண்டுகள் வாழ்ந்து இனஅழிப்புக்குள்ளாகி வருகின்றார்கள் என்பதை உலகத் தமிழர்களாக உள்ள ஈழத்தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும், தாங்கள் வாழும் நாடுகளின் அரசுக்களுக்கும் ஈழத்தமிழர் மக்கள் சபைகள் மூலம் திட்டமிட்ட முறையில் சான்றுகளை வகுத்துத் தொகுத்து ஒழுங்குபடுத்தி ஒரணியாக எடுத்துரைக்க வேண்டும்.
கூடவே ஈழத்தமிழர்களின் சமகால அரசியல் வரலாறு குறித்து விளக்கமாகத் தெளிவுபடுத்துவதின் வழி அவர்களது இறைமையை ஒடுக்கவே ஈழத்தமிழர்களை சிறிலங்கா இனஅழிப்பு செய்கிற தென்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாயகத்திலும் சரி உலகநாடுகளிலும் சரி ஈழத்தமிழ் இளையவர்களுக்கு அவர்கள் வரலாற்றுத் தெளிவுடன் உரையாடுவதற்கான அறிவூட்டல் இவ்விடத்தில் அவசியமாகிறது. அவ்வாறே உலகத் தமிழர்கள் தங்களின் நாளாந்த வாழ்வின் பிரச்சினையாகத் தாயக மக்களின் பிரச்சினையைக் கருதவும் அதனை மாற்றச் செயற்படவும் பழக்கப்படுத்த வேண்டும். வெட்டிப் பேச்சால் எதுவும் செய்ய முடியாது. உலக நடப்புகளுக்கு ஏற்ப தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கான பயிற்றுவிப்புக்கள் அவசியம். உதாரணமாக அமெரிக்காவுடன் தொடர்பு கொள்வதானால் அமெரிக்காவின் இன்றைய நிலை குறித்து நமக்கு நாமே அறிவூட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு இவ்வாண்டு சனவரி மாதத்திலேயே தனது கடன்படுவதற்கான உச்ச வரம்பான 31.38 டிரில்லியனை அடைந்து விட்ட நிலையில் கடன் உச்சவரம்பை நீக்கி நாடு வங்குரோத்துக்குள் செல்லாது தடுப்பதற்கு அமெரிக்க அரசு அதிபர் ஜோ பைடன் அமெரிக்கப் பாராளுமன்றத்திலும் செனட்சபையிலும் எடுத்த முயற்சிகள் இருசபைகளிலும் 317 ஆதரவு 117 எதிர், 63ஆதரவு 36 எதிர் என்ற நிலையில் சில நிபந்தனைகளுடன் 2025 வரை கடன் எல்லையை நீக்குவதற்குரிய அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால் அமெரிக்காவின் படுகடன் அளவு மேலும் அதிகரிக்கும் பொழுது அதன் உற்பத்தியினையும் அனைத்துலக வர்த்தகத்தையும் தனக்குச் சாதகமான முறையில் முன்னெடுப்பது நடைமுறையாக மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனால் இந்துமாக்கடல் மீதான ஆட்களதும் பொருட்களதும் சுதந்திரமான நகர்வுகளை உறுதிப்படுத்தும் தேவையில் அமெரிக்கா அதிக அக்கறை செலுத்த வேண்டி வருகையில் இலங்கைத் தீவின் இந்துமாக்கடல் பகுதியில் மூன்றில் இரண்டு பகுதியைத் தனதாகக் கொண்டுள்ள ஈழத்தமிழர்களின் இறைமையை அமெரிக்கா மீள் உறுதி செய்வதன் மூலம் வேகமாக உருவாகி வரும் இன்றைய உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையில் அமெரிக்காவால் இந்துமாக்கடலின் மேலான ஆட்களதும் பொருட்களதும் சுதந்திரமான நகர்வை பலப்படுத்தலாம் என்பதை உலகத் தமிழராக உள்ள ஈழத்தமிழர்கள் அமெரிக்காவுக்கு எடுத்துச் சொல்லும் உரையாடல்களை விரைவில் தொடங்க வேண்டும்.
இவ்வாறே அனைத்துலக நாடுகளின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக பரிணாமங்களை விளங்கி, உரிய நேரத்தில் உரிய முறையில் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தின் இருப்பின் முக்கியத் துவத்தை அறிவார்ந்த முறையில் முன்வைத்தால்தான் உலக மக்கள் என்ற நிலையில் ஈழத்தமிழர்களின் இறைமையையும் தன்னாட்சி உரிமையையும் மீள் உறுதிப்படுத்தலும் நடைமுறைச் சாத்தியமாகும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.

Tamil News