ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் கையறுநிலையால் ஈழத்தமிழர்களின் இறைமையறு நிலை தோற்றம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 238

ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான அனைத்துலக சூழ்நிலைகள் தோற்றம் பெறுகின்ற காலங்களில் எல்லாம் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தை வேகப்படுத்தி அதற்கு எதிர்வினையாற்றித் தங்களின் உயிரையும் உடமைகளையும் வாழ்வாதாரங்களையும் ஈழத்தமிழர்கள் பாதுகாக்க முற்படுகையில் அதனை பயங்கரவாத நடவடிக்கையெனத் திரிபுபடுத்திச் சிறிலங்காவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் மேல் இனஅழிப்பை மேற்கொள்ளவது என்பது சிறிலங்காவின் தந்திரோபாயமாக என்றும் தொடர்கிறது. இதனை சிறிலங்காவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் பேணுகின்றோமென உரைத்து இந்தியா தனக்கு ஆதரவு நாடுகளையும் இணைத்து சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்புக்கு அனைத்துலகச் சட்டங்கள் அதனைச் செய்யும் சிறிலங்காத் தலைமைகள் மேல் பாயாது தடுப்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையாகத் தொடர்கிறது.
அத்துடன் ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினை என்பது இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொடர்ந்து வரும் தங்களின் இறைமையின் அடிப்படையில் தங்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தித் தங்களுக்கான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுடனான தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிப் பாதுகாப்பான அமைதி வாழ்வில் வளர்ச்சிகள் கொண்ட தேசஇனமாக இலங்கையில் உள்ள சிங்களத் தேசஇனத்துடனும் மற்றைய தேசியங்களுடனும் உலகுடனும் வாழுதல் என்னும் தங்களின் அடிப்படை மனித உரிமையை உறுதி செய்வதாகும். ஆனால் சிறிலங்காவும் இந்தியாவும் ஈழத்தமிழரின் பிரச்சினை என்பது சிறுபான்மை இனப்பிரச்சினை என்ற திரிபு படுத்தலை மேற்கொண்டு சிறிலங்காவின் இறைமையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக நாடுகளோ அனைத்துலக அமைப்புக்களோ அதீத மனிதாயப் பிரச்சினைகளில் கூட அனைத்துலகச் சட்டங்களின் கீழ் உதவ அனுமதிக்க மறுத்து வருகின்றன.
ஈழத்தமிழர் தாயகத்தின் மீதான இந்த அந்நியத் தலையீட்டாலேயே, சிறிலங்காவின் இறைமையை மீறி உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் 148000 ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனப்படுகொலை வரலாற்றை 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் சிறிலங்கா உருவாக்கிய நிலையிலும் இன்றுவரை 14 ஆண்டுகள் ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியையோ இனவழிப்பு செய்தவர்களுக்கான தண்டனை நீதியையோ வழங்கவோ, அல்லது தொடர்ந்து இன்று வரை சிறிலங்கா தொடரும் ஈழத்தமிழர் பண்பாட்டு இனஅழிப்புடன் கூடிய, சட்டத்தின் முன் சிங்களவர்களே உயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இனஅழிப்புச் செய்த படையினரையே நிர்வாகிகளாகக் கொண்ட பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சியையோ தடுத்து நிறுத்த இயலாத நிலையில் உள்ளனர்.
இதனால் படுஉற்சாகம் அடைந்து வரும் சிறிலங்கா கடந்த வாரத்தில் ஈழத்தமிழர்களின் இறைமை யாளர்களில் ஒருவராகிய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைத் தனது புலனாய்வாளர்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை செய்ய முயற்சித்து அது தோல்வி அடைந்ததும் சட்டத்துக்கு எதிரான முறைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைப் பொலிசாரைக் கொண்டே கைதுசெய்து அவர் தமிழராக இருப்பதால் நாடாளுமன்றச் சிறப்புரிமை அவருக்கு இல்லை என்ற தோரணையில் நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்ற அனுமதிக்காது கிளிநொச்சிக்குக் கொண்டுவந்து 5 இலட்சம் ரூபா பிணையில் வெளிவர விட்டுள்ளனர். அதே நேரத்தில் சிறிலங்காப் புலனாய்வாளர்களின் கிரிமினல் குற்றச் செயலான கொலை முயற்சியைப் படமெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அருள்மதி உதயக்குமார் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரு செயற்பாட்டாளர்களையும் கைதாக்கி பிணையனுமதிக்காது விளக்க மறியலில் வைத்து ஈழத்தமிழர்களுக்குச் சிறிலங்காவின் படையினரின் கிரிமினல் குற்றச் செயல்களை வெளிப்படுத்த முயன்றால் உங்களுக்கும் இந்நிலையென்று இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் அரசத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கூட்டுப்படைத் தளபதிக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கி, துணைக் கூட்டுப்படைத் தளபதியொருவரைப் புதிதாக உருவாக்கி அவரைப் பாதுகாப்புச் செயலாளருடன் இணைத்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டை இராணுவத்தினரைப் பலப்படுத்த வழங்கி எதிரிகளுடைய செயல்களை இனங்கண்டு அதற்கு எதிர்வினையாற்றும் படி பணித்துள்ளார். அவரின் அரசியல் குருவும் உறவினருமான ஜே. ஆர். ஜயவர்த்தனா 1979 இல் படையினர்க்கு கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் எரிக்கவும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்கி அதன் பின்னர் அவரின் மருமகனான பிரிகேடியர் கொப்பே கடுவாவினை அரசியல் விழிப்புணர்வுள்ளவர்களை அந்த ஆண்டு முடிவதற்குள் சுட்டுத்தள்ளுமாறு காலஎல்லை நிர்ணயித்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய பாணியில் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளார். இதற்கான முதலடி வைப்பே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேலான கொலை முயற்சி. இதனால் அரசபயங்கரவாதம் மீண்டும் தொடங்கியுள்ளமை
வெளிப்படை. வெள்ளை வான் கடத்தல்களும் வேகம் பெற்றுள்ளன. வெளிநாட்டுப் பிரிவினைவாதிகள் என்ற பெயர் புலம்பெயர் தமிழர்களுக்கு முஸ்லீம் அமைச்சர் மூலம் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அமைச்சர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையை நாய்குலைப்பு எனவும் பாராளுமன்ற ஏட்டில் பதிவாக்கியுள்ளார் ஒலி ஒளி பரப்புகளுக்கான ஊடக அதிகாரசபை சமுகவலைத்தளங்களை முடக்க உருவாக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் அரசபயங்கரவாதம் உச்சக்கட்டமாக ஈழத்தமிழர்கள் மேலான போராக மாற்றப்பட்டு வருவதற்கு அறிகுறிகளாக உள்ளன.
இதற்கிடை தமிழன் என்னும் பத்திரிகை தனது 08.03.2023ம் திகதிய ஆசிரிய தலையங்கத்தில் “2008ம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாயா மீதான தற்கொலைக் குண்டு வெடிப்புத் தாக்குதலானது திட்டமிட்டுச் செய்யப்பட்ட உள்வேலை. இதனை மையப்படுத்தியே நோர்வேயின் சமாதான முயற்சிகளுடன் கூடிய போர்நிறுத்தத்தில் இருந்து பின்வாங்கி சிறிலங்கா மீண்டும் யுத்தத்தைத் தொடங்கியது” என கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் சிறிலங்கா அரசாங்கமே உருவாக்கிய இந்த அரசபயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு அந்த வழக்கில் சிறையில் இருந்தவர்களுக்கும் சிறையில் இருப்பவர்களுக்கும் நீதி மீள்வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. இது சிறீலங்கா தானே அரசபயங்கரவாதத்தைச் செய்து அதன் பின்னர் ஈழத்தமிழர் மேல் இனஅழிப்புச் செய்யும் உத்திக்கு மேலுமோர் உதாரணமாகிறது. இதற்கிடை சம்பந்தர் தலைமையிலான ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் கையறுநிலையால் ஈழத்தமிழர்களின் இறைமையறு செயலாக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கான “இடைக்கால நிர்வாகக் கோரிக்கை” ரணிலால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் சம்பந்தன் அவர்கள் “உள்ளக தன்னாட்சி அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு ஒரிரு மாதங்களுக்குள் வழங்கப்படா விட்டால் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தீர்வைப் பெறும் முயற்சிகளில் நாங்கள் வெளிப்படையாகவே இறங்குவோம்” எனச் சாத்தான் வேதம் ஓதிய கதையாகச் சிறிலங்காவின் அரசத்தலைவருக்கு முன்பாக முழங்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்த வாரத்து நகைச்சுவைப்பேச்சா என்பது தான் இலக்கின் கேள்வி. இனியாவது இந்த ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் திருந்துவார்களா? கண்கெட்ட பின்னர் சூரிய வணக்கம் தான் இவர்கள் கதை.

Tamil News