ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தவறால் இறைமை மீதான இருமுனைத்தாக்குதல்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 236

ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் மீது கொண்டிருக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையை ஒடுக்கி, ஒரே நாடு சிங்கள நாடு, ஒரே சட்டம் பௌத்த ஆகமச் சட்டம், என்பதை நடைமுறைப்படுத்த இருமுனைத்தாக்குதல்களை இன்றைய ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களின் இறைமை மேல் வேகப்படுத்தி வருகிறது.
ஈழத்தமிழர்களின் இறைமை மீதான முதலாவது தாக்குதல் ஈழத்தமிழரின் தாயகப்பகுதிகளில் பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்க்ல் வழி நிலத்தை ஆக்கிரமித்து மக்களுக்கு மண்ணின் மேலுள்ள பயன்பாட்டு அதிகாரத்தை ஆக்கிரமித்து, ஒடுக்குவது என்பதாக அமைகிறது. நிலப் பயன்பாட்டு அதிகாரமே ‘மக்கள் இறைமை’ என்பதால் நிலத்தை ஆக்கிரமித்து அவர்களது இறைமையை ஒடுக்கி அவர்களை அரசற்ற தேசஇனமாக்கி அடிமைப்படுத்துவது சிறிலங்காவின் இத்தாக்குதலின் இலக்கு. இதற்கான ஈழத்தமிழர்களின் விருப்பு என்பதை மூத்த ஈழத்தமிழ் அரசியல்வாதியான சம்பந்தன் அவர்கள் சிங்கக் கொடியைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து அனைத்துலகப் பொறிமுறையை ஏற்க மறுத்து உள்ளகப் பொறிமுறையைத் தோற்றுவித்ததின் மூலம் மூன்று தசாப்பதங்களின் பின்னர் சிறிலங்கா பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் நில அபகரிப்பு மூலம் ஈழத்தமிழர் இறைமையை அபகரிப்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் தையிட்டியில் 15 தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் புத்தவிகாரையமைத்து அதனைப் பாதிப்புற்ற மக்களுடன் இணைந்து சனநாயக வழிகளில் எதிர்த்து அமைதிப் போராட்டம் நடாத்திய ஈழத்தமிழர்களின் இறைமையாளரான பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
அவர்களைக் காரணமின்றிக் கைது செய்து அவருடன் 21 போராட்ட மக்களையும் காரணமின்றிக் கைது செய்த நிகழ்வு பாராளுமன்ற வாரத்திலேயே நடத்தப்பெற்று சிறிலங்கா எந்த அளவுக்குப் பாராளுமன்ற முறைமைக்கு மதிப்பளிக்கிறது என்பதை மீளவும் நிரூபித்துள்ளது.அதே வேளை மக்களின் சனநாயக எதிர்ப்பு எதனையும் பொருட்படுத்தாது, படைபலப் பயன்பாட்டின் பின்னணியில் தையிட்டிப் புத்த விகாரை வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டு பௌத்தர்களோ சிங்களவர்களோ இல்லாத அப்பகுதியில் பௌத்த மயமாக்கல் செயற்திட்டமொன்று சிறிலங்காவின் இன்றைய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறே அரசின் சிங்கள மயமாக்கலுக்கு இவ்வார உதாரணமாக மகாவலி கங்கையை வடக்கே திரும்பும் முயற்சி என்ற பெயரில் நெடுங்கேணிப் பகுதியில் சீனாவின் சீனித் தொழிற்சாலையை தைவான் முதலீட்டாளர்கள் மூலம் நிறுவி தென்னிந்தியப்பரப்பில் இந்தியாவின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் ரணில் அதே வேளையில் கரும்புச் செய்கைக்கு என ஆயிரம் ஏக்கர் தமிழர்களின் நிலத்தை மகாவலித் திட்டச்சபை ஆக்கிரமிக்க “இது எனது உத்தரவு” என்ற ஜனாதிபதியின் விசேட நிறைவேற்று அதிகார உத்தரவின் மூலம் முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தலின் 14 வது ஆண்டு அன்றே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்ட மெய்நிகர் கூட்டத்தின் வழி நடைமுறைப்படுத்தியது அமைகிறது. அத்துடன் இனிமேல் சிறிலங்காவில் செய்யப்படும் எந்த முதலீட்டையும் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் அல்லாது வேறு எந்த நடவடிக்கையாலும் நீதிமன்றத் தீர்ப்புக்கள் உட்பட மாற்ற இயலாது என்கிற சட்டத் திருத்தத்தைச் செய்வதன் மூலம் சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் வழி நீதி என்பன அரசியலில் மட்டுமல்ல பொருளியியலிலும் இல்லாத நாடாகச் சிறிலங்காவை ரணில் அரசு மாற்றியுள்ளது. இதனால் சீனித்தொழிற்சாலைத் திட்டமும் ஈழத்தமிழர்களின் நில அபகரிப்பும் சிங்களக் குடியேற்றமும் என்னும் மூவிதத் தன்மைகள் ஒருங்கிணைந்த இந்தத் திட்டத்தை இதனால் எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இந்தியாவாலும் தடுக்க முடியாத ஒன்றாகவே தொடரும். இதுகுறித்து இத்துறையில் அறிவும் அனுபமும் ஆற்றலுமுள்ள முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் இந்த கரும்புச் செய்கை முயற்சி மக்களது குடித்தொகை வாழ்வியல் நிலைகளை மட்டுமல்ல மண்ணின் வளத்தையும் கரும்பு அதிகளவில் நீரை உறிஞ்சி வளரும் பயிர் என்ற வகையில் அழிக்கும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். கூடவே சிறிலங்காவின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த ‘ஜே‘ இலக்க மகாவலி நீர்ப்பயன்பாட்டு திட்டம் என்பது நீர்வளத்தையும் தராது மனிதவளத்தையும் மண்ணின் வளத்தையும் இல்லாதொழித்துச் சிங்களப் படையினர்க்கான நிரந்தரக் குடியேற்றமாக மாறும் என்ற எச்சரிப்புகக்ளை விடுத்துள்ளனர். ஆயினும் சிறிலங்கா பௌத்த மகாசங்கத்தினரையே நாட்டின் தீர்மானமெடுக்கும் இறைமையின் மீயுயர் மையமாக அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை மூலம் கட்டமைத்து பிக்குகள் எண்ணமே சட்டம் என்ற பௌத்தமதசார்பு நாடாக இலங்கைத் தீவை மாற்றியுள்ளனர்.
இதனை அனைத்துலகத் தலையீட்டாலேயே மாற்ற முடியும். இதற்கு ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல காலனித்துவத்தால் உருவாக்கப் பட்டுத் தீர்க்கப்படாத அனைத்துலக மன்றத்தால் தீர்க்க்பபட வேண்டிய இறைமைப் பிரச்சினை என்பதைத் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால் இதில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் இறைமை என்பதைத் தங்களின் தன்னலம் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிலைப்படுத்தாமை சிறிலங்கா 1977ம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மான ஏற்பு என்ற குடியொப்ப மக்களாணையை வலுவிழக்க வைக்க இன்னொரு குடியொப்பத்தை நடாத்த முயற்சிக்கும் ஈழத்தமிழர் இறைமை மீதான இரண்டாவது தாக்குதலுக்கு வழி செய்துள்ளது.
2021இல் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் தருமலிங்கம், சிறீகாந்தா தங்கள் கட்சிகள் சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்க்கு குடியொப்பம் மூலம் மனித உரிமைகள் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் எனத் ஈழத்தமிழர்கள் சார்பாக அனுப்பிய கடிதமே இன்று குடியொப்பத்திற்கான உலக அழைப்பாகப் பரிணாமம் அடைகிறது. 1977 குடியொப்பம் மக்களாணை அதனை நடைமுறைப்படுத்துவதிலேயே 1978 முதல் 2009 வரையான ஈழத்தமிழர்களின் நடைமுறையரசு செயற்பட்டது. அதனை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழின அழிப்பாக 170000 ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து இன்று வரை ஈழத்தமிழர் தாயகத்தை படைபல ஆக்கிரமிப்புச் செய்யும் அந்நிய அரசாகச் சிறிலங்கா உள்ளது. இதுவே இதில் ஈடுபட்ட அதன் அரசத்தலைவர்களும் படையினரும் அனைத்துலக நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குவதற்கான அனைத்துலகச் சட்டத்தன்மையைத் தோற்றுவிக்கிறது. எனவே இன்னொரு குடியொப்பம் என்பது இனஅழிப்பாளர்கள் தங்களுக்கான அனைத்துலகச் சட்டத்தின் பிடியிலிருந்து தம்மைக்காப்பாற்றும் முயற்சியாகவே முன்னெடுக்கப்படும். இந்நிலையில் ஒரு குடியொப்பம் நடைபெறுவதற்கான சனநாயக அரசியல் பண்பாடோ பாதுகாப்பான சூழலோ அங்கில்லை. சரி அரைவாசியான ஈழத்தமிழ் மக்கள் உலகநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விருப்பு அறியப்படாத எந்தக் குடியொப்பமும் 1977 குடியொப்ப முடிவை மாற்ற முடியாது. எனவே குடியொப்பமல்ல ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை உலகு ஏற்பது மட்டுமே ஏற்புடைய தீர்வை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தர முடியும் என்பதே இலக்கின் உறுதியான பதில். ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஒரு பொதுவெளியில் ஒருங்கிணைந்து செயற்படாது தாம் நினைத்தது எல்லாவற்றையும் மக்கள் விருப்பாக வெளியிடும் முறைமையின் அபாயத்திற்கு இது நல்ல உதாரணம் என்பதையும் இவ்விடத்தில் இலக்கு வலியுறுத்தி கூற விரும்புகிறது.

Tamil News