மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதத்தினை கையளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்காக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் காணிகள் மற்றும் இதர விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த இரு வலயங்களையும் உருவாக்கி விஸ்தரிக்க முயல்வதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பறிபோவதுடன் மக்கள் குடிப்பரம்பலில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல்களும் உள்ளன.
குறிப்பாக, ஜே வலயத்தினை முன்னெடுப்பதன் ஊடாக 37 கிராமங்களை இழக்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. அத்துடன், குறித்த வலயங்களுக்கு மகாவலி கங்கையின் நீர் கொண்டுவரப்படுவதும் கேள்விக்குறியான விடயமாகும்.
எனவே, மக்களின் நன்மை கருதி மேற்படி இரு வலயங்களுக்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்குமாறு தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.