இலங்கை போல அவுஸ்திரேலியாவும் வறுமையில் சிக்கலாம் – ஜினா ரைன்ஹேர்ட் எச்சரிக்கை

இலங்கை போல அவுஸ்திரேலியாவும் வறுமையில்

இலங்கை போல அவுஸ்திரேலியாவும் வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளது என அந்த நாட்டின் செல்வந்தப் பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் எச்சரித்துள்ளார்.

பெரும் செலவீனங்கள் அதிகளவு அரச கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ஜென்டீனா இலங்கை போல அவுஸ்திரேலியாவும் செழிப்பான நிலையிலிருந்து வறுமைக்குள் தள்ளப்படும் என 31 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை கொண்ட அவுஸ்திரேலியாவின் செல்வந்தப்பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் செல்வத்தை பாதுகாப்பதற்காக சோசலிசத்தின் அழிவுவேலைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அவுஸ்திரேலியா நாளை” என்ற நூலில் அவர் இதனை எழுதியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த நூலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட்டின் கட்டுரைகள் உட்பட வலதுசாரி தலைவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தலைமுறை தலைமுறையாக நாங்கள் சிறந்த நாட்டை எங்கள் குழந்தைகளிற்கு வழங்க விரும்பினோம் என அவர் எழுதியுள்ள கட்டுரையை டெய்லிமெயில் வெளியிட்டுள்ளது.

ஆனால் துயரமளிக்கும் விதத்தில் இந்த தலைமுறை ஆபத்தில் உள்ளது என எழுதியுள்ள அவர் இதனை எங்கள் மத்தியில் உள்ள இளையவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் நிதிவிடயத்தில் அதிக கட்டுப்பாட்டை பேணவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கவர்ச்சிகரமான அரசியல் வார்த்தைகளான இது இலவசம் அது இலவசம் போன்றவை முன்னர் தேயிலை தோட்டங்கள் பிறவிவசாயங்களால் செழிப்பாகயிருந்த இலங்கையை –சிலோனை தனக்கான உணவை தனது நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியாத நாடாக மாற்றியுள்ளது என அவர் எழுதியுள்ளார்.

மாறாக அதன் மக்கள் பசியை, சுதந்திரமாக பேசுவதற்கான உரிமை இழப்பை – இவற்றின் விளைவாக ஏற்பட்ட கலவரங்களை சொத்து அழிப்பை, மகிழச்சியின்மையை, காவல்துறை மற்றும் இராணுவத்தை எதிர்கொண்டனர் எனஜினா ரைன்ஹேர்ட் தெரிவித்துள்ளார்.

நன்றி- தினக்குரல்

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021