டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் இலங்கையின் பிரதிநிதிகள் பேச்சு

டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது,  அந்நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர் ஈடுபட்டனர்.

இங்கு நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் பின்வருமாறு:

1. உலகின் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் ‘MAERSK’ நிறுவனத்துடனான சந்திப்பு:

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான MAERSK இன் தலைமையகத்தில், அந்நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு அதிகாரி (Chief Product Officer – Ocean) ஜோஹான் சிக்ஸ்கார்ட் (Johan Sigsgaard) அவர்களை அமைச்சர் சந்தித்து விசேட பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, இலங்கையின் கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கடல்சார் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் MAERSK நிறுவனத்தின் சர்வதேச கப்பல்களில் தொழில் வாய்ப்புகளை (Seafarers) பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் உள்ள கடல்சார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து செய்முறைப் பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அதன் ஊடாக இலங்கையர்களுக்கு விசேட வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான முன்மொழிவொன்றை (Proposal) சமர்ப்பிப்பதற்கு இங்கு அடிப்படை இணக்கம் காணப்பட்டது.