சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டது இலங்கை குழு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கை குழு இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் பன்னாட்டு கடன் சிக்கல் என்பவற்றினால் பெரும் நெருக்குவாரத்தை சந்தித்துள்ள இலங்கை, அதில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் உள்ளிடங்கிய குழுவினர் இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வொஷிங்டனில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நெருக்கடியைத் தணிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

3 முதல் 4 பில்லியன் டொலர் உடனடி உதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்த்துள்ள நிலையில் அனைத்தும் சரியாக நடந்தால் முதல்கட்ட நிதி விரைவில் கிடைக்கும் என நிதியமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News