வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தது இலங்கை- துரைசாமி நடராஜா

8552 வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தது இலங்கை- துரைசாமி நடராஜா

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கனுப்பும் நோக்கிலும், தமது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும் வலியுறுத்தியும் இன்று (28) வியாழக்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் வரலாற்றில் அதிகளவான மக்கள் பங்கு கொண்ட மிகவும் முக்கியமான போராட்டமாக இது கருதப்படுகின்ற நிலையில், இப்போராட்டத்தில் சகல துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டதுடன் வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் ஒரு வேளை உணவையேனும் திருப்தியாக உண்ண முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசிக்கும் மத்தியில் மக்கள் உரிய வருமானமின்றி பொருட்களை கொள்வனவு செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.

எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணெய், பால்மா உள்ளிட்ட பல பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வரிசை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.இதனிடையே 12.5 திலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை நேற்று 2500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 4900 ரூபாயாக உள்ளது. அத்துடன் தீப்பெட்டி ஒன்றின் விலை 40 ரூபாவாகவும், சவர்க்காரம் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

இதனிடையே கோதுமை மாவின் விலையும் அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை மா உணவுகளை அதிகமாக உண்ணும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் சிரமப்படுகின்றனர்.உற்பத்தி விலை அதிகரிப்பு அவர்களையும் ஆட்டிப் படைக்கின்றது.இதனால் பல வெதுப்பகங்களும், உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தினமும் வரிசைகளில் நிற்பதால் அவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானப் பற்றாக்குறைக்கு மத்தியில் இவர்களின் பொருளாதாரச் சுமை இரட்டிப்பாகியுள்ளது.

இதனிடையே காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் இளைஞர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு பிரதமரின் அலரி மாளிகையைச் சுற்றியும் இப்போராட்டம் அண்மையில் விஸ்தரிக்கப்பட்ட்டது.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்பாகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசிய போது ” தான் ஒரு போதும் பதவி விலகப் போவதில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.இதனால் போராட்டங்கள் உக்கிர நிலையை அடைந்துள்ளன.

இதனடிப்படையில் இன்று (28) வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தம் இடம்பெற்றது. சட்டத்தரணிகள், வைத்தியர்கள் தாதிமார், விவசாயிகள், கணக்காளர்கள்,இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், ,இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப்பலரும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி பல்துறை சார்ந்தவர்களின் இப்போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர்.பாடசாலைகளில் இன்று கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்படைந்திருந்தன.

அத்தோடு அதிபர்களும்,ஆசிரியர்களும் அவ்வப்பகுதிகளிள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.” பிள்ளைகளின் கல்வியை சீரழிக்காதே!”, “சம்பள அதிகரிப்பு வேண்டும்”, “GOTA GO HOME” , ” வேலை செய்ய முடியாவிட்டால் வீட்டுக்குப் போ!” ,” WAR HERO.NOW ZERO” போன்ற பல சுலோகங்களையும் ஏந்திய வண்ணம்  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் ஆசிரியர்கள்  அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஆவேசமாக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியதையும் காண முடிந்தது.இதேவேளை விவசாயிகள் தங்களது பாரம்பரிய உரிமைகளை அரசாங்கம் பறித்து விட்டதாக அங்கலாய்ந்துக் கொண்டனர்.

கொழும்பில் உள்ள வர்த்தக வலயங்களில் கடமையாற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக கோஷமிட்டனர். பொருளாதார அபிவிருத்தி நிலையங்கள், சந்தைகள் என்பனவும் மூடப்பட்டிருந்தன. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பல நகரப்பகுதிகளில் ஒன்றிணைந்து போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். பொருளாதார நெருக்கடி இவர்களின் போராட்டங்களில் அதிகமாக எதிரொலித்தது.

இன்று போக்குவரத்துப் பணிகளில் அரசாங்க பேருந்துகள் சில மட்டுமே ஈடுபட்டிருந்த நிலையில் தனியார் துறை  பேருந்துகளை  காண முடியவில்லை.தொடருந்துகளும் சிலவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தபால் மற்றும் வங்கி ஊழியர்களும் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.இதனால் தபால் மற்றும் வங்கி அலுவல்கள் பாதிப்பை எதிர்நோக்கி இருந்தன.

இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமையில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை ஒன்றும் இடம்பெறுகின்றது.கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஆரம்பமாகி ஐந்து நாட்கள் இடம்பெறும் இப்பாதயாத்திரையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் சமகால பதட்டநிலை என்பன தொடர்பில் ஜனாதிபதி இன்று மாலை ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கும் ஏற்பாடாகி இருந்தது. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள 11 கட்சிகளின் உறுப்பினர்களை  இன்று மாலை சந்தித்துப் பேசவிருந்தார்.

முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ, நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் அமைய வேண்டியதன் அவசியத்தையும், பொருளாதார அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி இன்று ஊடக சந்திப்பொன்றில் பேசியிருந்தார்.

இந்நிலையில், போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கனுப்பும் வரையில் போராட்டம் தொடருமென்று போராட்டக்காரர்கள் ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.

Tamil News