ஜனாதிபதித் தேர்தல்: இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கப் போட்டி நிலவுகிறதா?

2024 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 40 வேல்பாளர்கள் களத்தில் உள்ளனர். எந்தப் பெண் வேட்பாளர்களும் போட்டியிட முன்வரவில்லை. இதனால் இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கப் போட்டி நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலின சமத்துவத்திற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதிலும், இலங்கை அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டும் வகையில், இந்த ஆண்டு எந்தவொரு பெண்களும் வேட்பாளர்களாக முன்வரவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

வரலாற்று ரீதியாக, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை மூன்று பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். மறைந்த காமினி திசாநாயக்கவின் மனைவி ஸ்ரீமா திஸாநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருவரும் 1994 இல் போட்டியிட்டனர், இறுதியில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியானார்.

மூன்றாவது பெண், கல்வியாளர் அஜந்தா பெரேரா, 2019 இல் களத்தில் நுழைந்தார், ஆனால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த மூவரில், சந்திரிக்கா குமாரதுங்க மட்டுமே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

1994 ஜனாதிபதித் தேர்தல், அதன் பெண் மேலாதிக்கத்திற்காக குறிப்பாக குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இலங்கையின் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களும் பெண்களாக இருந்த ஒரே தேர்தல் இதுவாகும். மேலும் 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கா போட்டியிட்டார். எனினும் அதன் பின் நடைபெற்ற தேர்தல்களில் பெண்கள் பிரதான வேட்பாளராக போட்டியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில்  இம் முறை ஜனாதிபதித்தேர்தலில் பெண்கள் இல்லாதது, இலங்கை அரசியலில் பாலின சமத்துவ நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும்’பெண் வேட்பாளர்கள் இல்லாததற்கு ஆண் ஆதிக்க அரசியல் கலாசாரமே காரணம்’ என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐ.நா.வின் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது, இது அரசியலில் பெண்களின் சம பங்களிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. இருப்பினும், நாட்டின் தற்போதைய அரசியல் யதார்த்தம் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படிகின்றது.

சட்டம், சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கினாலும், நடைமுறையில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே தொடர்ந்து நடத்தப்படுகிறார்கள். சர்வதேச மகளிர் தினம் போன்ற மேடைகளில் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்தாலும், இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க மனப்பான்மை பெரும்பாலும் பெண்களை ஓரங்கட்டுகிறது.

இலங்கை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5.8% ஆக உள்ளது, மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்றே கூறலாம். உள்ளூராட்சி அதிகாரங்களில் 1.9% மட்டுமே உள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத கட்சியைச் சேர்ந்த 1 வேட்பாளரும், வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட 17 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குகின்றனர்.