இருளில் மூழ்கியுள்ள இலங்கை! காப்பாற்ற முன்வருமா இந்தியா? | அகிலன்

446 Views

இருளில் மூழ்கியுள்ள இலங்கை

இருளில் மூழ்கியுள்ள இலங்கை

போர்க் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. உக்ரைனில் வெடித்துள்ள போர் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

குறிப்பாக எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடையலாம். அவற்றின் விலை எந்த வேளையிலும் அதிகரிக்கலாம். எரிபொருட்களின் விலை அதிகரித்தால் – அதன் எதிரொலியாக அனைத்து பொருட்கள் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கும். ஏற்கனவே பாரிய பொருளாதார – வாழ்வாதார பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு இது புதிய நெருக்கடி ஒன்றைக் கொடுக்கப் போகின்றது.

இருளில் மூழ்கியுள்ள இலங்கைகியூவில் காத்திருந்தால் கூட அத்தியவசியப் பொருட்கள் கிடைக்குமா என்பது இலங்கையில் இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது. மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் பீதியை போக்கக் கூடிய வகையில் அரசின் செயற்பாடுகள் எதுவும் அமையவில்லை. இதனால், இந்த நிலை நீடிக்கலாம் என்ற அச்சம் மக்களுக்கு உருவாகியுள்ளது.

தினசரி ஐந்து மணி நேரத்துக்குக் குறையாத மின்வெட்டு, சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல், மண்ணெய்க்கு, மால்மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு. எந்த வேளையிலும் அவற்றின் விலைகள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் அவற்றை வாங்குவதற்காக ஓடித்திரியும் மக்கள். எரிபொருள் பிரச்சினையால் நிறுத்தப்படும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள். மட்டுப்படுத்தப்படும் தனியார் பஸ் சேவைகள்.

இந்த நிலை குறித்து பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குரல் கொடுத்திருக்கின்றார்.

இருளில் மூழ்கியுள்ள இலங்கைரஷ்யா – உக்ரைன் மோதல் நிலைமையில் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பொருளாதார இராஜதந்திர பாதிப்புகளை தடுப்பதற்காக ஏதேனும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ள்ளனவா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி யெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்;

ஏற்கனவே சமையல் எரிவாயுக்காக வரிசையில் நின்ற மக்கள் இப்போது எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தொழிற்சாலைகள் பலவற்றில் ஊழியர்களுக்கு பயணிக்க வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளையும் விநியோகிக்க முடியாத நிதி நெருக்கடிக்குள் நாடு உள்ளது. மின்சார தடையால் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. சரியான தீர்வு இன்றி ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது உக்ரேன் – ரஷ்யா மோதல் நிலைமையில் எமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய நிலைமையில், எமது நாட்டுக்கு ஏற்படக் கூடிய பொருளாதார அரசியல் சமூக மற்றும் இராஜதந்திர பாதிப்புகளை தடுக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என்று அரசாங்கத்தை கேட்கின்றேன்’ என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார். அரச தரப்பில் இதற்கு ஆக்கபூர்வமான பதில் இருக்கவில்லை.

போர்க் காலத்தில் பொருளாதாரம் எவ்வாறிருக்குமோ அதனைவிட மோசமான ஒரு நிலையில்தான் இலங்கையின் பொருளாதாரம் இன்றுள்ளது. ‘டொலர் பிரச்சினை’ எனச் சொல்லப்படும் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பில் இல்லாத நிலை – கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்களிலிருக்கும் எரிபொருட்களைக் கூட இறக்க முடியாத இக்கட்டான நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்திருக்கின்றது.

நாட்டில் உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க மூன்று கப்பல்களில் எரிபொருள் கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு கப்பலிலிருந்து எரிபொருட்களை இறக்குவதற்கு மட்டுமே அரசிடம் டொலர் இருந்துள்ளது. அதனால் ஏனைய இரண்டு கப்பல்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது பாரிய எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மின் உற்பத்தி நிலையங்களில் அவற்றைச் செயற்படுத்துவதற்குத் தேவையான எரிபொருள் இல்லாமையால், தினசரி ஐந்து மணி நேர மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. இது வெறுமனே மின்துண்டிப்பு என கடந்து சென்றுவிட முடியாது. பல தொழிற்சாலைகள் இதனால் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உல்லாசப் பயணத்துறையும் இதனால் பாதிக்கப்படும். ஆக, மின் துண்டிப்பு நாட்டின் வருமானத்தையும் பெருமளவு பாதிக்கப்போகின்றது.

மோசமான பொருளாதார நிர்வாகம், திட்டமிடலில் உள்ள குறைபாடுகள் போன்றனதான் இந்த நிலைமைக்கு காரணமாக இருந்துள்ள போதிலும், இரண்டு வருடமாகத் தொடரும் பெருந்தொற்று இந்த நிலைமையை மோசமாக்கியுள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த பெருந்தொற்றையே அனைத்துக்கும் காரணமாகக்கூறித் தப்பித்துக் கொள்வதற்கு முயல்கின்றது.

அதேவேளையில், சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்ற ராஜபக்சக்களின் இறுமாப்பும் இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு தடையாகவுள்ள மற்றொரு காரணியாகும்.

டொலர் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு அரசுக்கு இருக்கக்கூடிய பிரதான வழிகள் இரண்டு.

ஒன்று – சர்வதேச நாயண நிதியத்திடம் உதவி பெறுவது. அவர்களுடன் பேசுவதற்கு – ஆலோசனை பெறுவதற்குத் தயார் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும், உதவியைப் பெறுவதற்கு அரசு தயாராகவில்லை. நாணய நிதியம் முன்வைக்கக்கூடிய நிபந்தனைகள்தான் இதற்குக் காரணம். நீண்டகால அடிப்படையில் அவர்கள் கடன்களைக் கொடுப்பார்கள். வட்டியும் குறைவானதாகவே இருக்கும். இருந்த போதிலும், மானியங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல நிபந்தனைகளை அவர்கள் விதிக்கலாம். இது உள்நாட்டில் அரசின் தேர்தல் அரசியலைப் பாதிக்கும். அதனால்தான் நாணய நிதியத்திடம் பணம் பெற அரசு தயங்குகின்றது.

இரண்டு – ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகையைப் பெறுவதன் மூலம் அந்தியச் செலாவணியை கணிசமாகப் பெறமுடியும். இதன்மூலமாக டொலர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வைக்காண முடியும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற அவர்களுடைய நிபந்தனைதான் இலங்கை அரசுக்குத் தலையிடியாகவுள்ளது. அதனை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை என்பது தெரிகின்றது.

இந்த நிலையில் இலங்கைக்கு இரண்டு மாற்று வழிகள்தான் உள்ளன. முதலாவது சீனாவிடம் கையேந்துவது. அல்லது இந்தியாவிடம் உதவி பெறுவது.

சீனாவிடம் பெறக்கூடியளவுக்கு கடன் பெற்றாயிற்று. சீனாவிடம் கடன் பெறுவதாயின், கொடுப்பதற்கு காணி நிலம் வேண்டும். வெறுமனே உதவிக்கு சீனா வரப்போவதில்லை. அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுக நகர் என பல சீனாவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இதற்கு மேலும் சீனாவிடம் கடன் பெறக்கூடிய நிலை இல்லை.

இந்த நிலையில் இலங்கைக்கு இன்றுள்ள ஒரே நம்பிக்கை இந்தியாதான். தேவையான அவசர நிதி உதவியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுதான் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெள்ளிக்கிழமை அவசரமாகப் புதுடில்லிக்குப் பறந்தார். நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகலையும் இம்முறை பஸிலுடன் இந்தியா சென்றிருந்தார். அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி உதவியைப் பெறுவதுதான் அவரது பயணத்தின் நோக்கம். அதாவது, டொலர் பிரச்சினைக்கான தீர்வை நாடித்தான் இந்தப் பயணமும் இடம்பெற்றது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சீனாவின் பக்கம் இலங்கை மேலும் செல்வதைத் தடுப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முற்படும் எனத் தெரிகின்றது. தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான அழுத்தத்தை இதனைப் பயன்படுத்தி இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழ்த் தரப்புக்கள் வலியுறுத்துகின்றன. இந்தியா அதனைச் செய்யுமா? அல்லது சீனாவிடமிருந்து இலங்கையை மீட்டால் போதும் என செயற்படுமா?

Tamil News

2 COMMENTS

  1. […] இருளில் மூழ்கியுள்ள இலங்கை போர்க் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. உக்ரைனில் வெடித்துள்ள போர் இந்த நிலைமையைமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-171-february-27/ https://www.ilakku.org/  […]

Leave a Reply