மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும் | அருட்தந்தை மா.சத்திவேல்

முற்போக்கு சக்தி

அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்

“அடித்தட்டு மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதற்கான புதிய சமூக வாழ்வு, கலாச்சார கருத்தியல் உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

முற்போக்கு சக்திஉலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும் மனித  சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடு களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளான Zero discrimination day மார்ச் மாதம் 1ம் நாள் ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், “எல்லா வகையான ஒதுக்கல்களும் இன்று என்ன நிலையில் உள்ளது? இவற்றை மாற்றி அமைப்பதற்கு சமூக, சட்ட, பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக நிலைகளில் என்ன பணிகளை ஆற்ற வேண்டும்” என்ற கேள்விக்கு  பதில் அளித்த அருட்தந்தை மா.சத்திவேல் அவர்கள்,

“உலக வரலாற்றில் ஒதுக்குதல் பல்வேறு நாடுகளில் பல்வேறு பரிமாணங்களில் 21 ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன மற்றும் சமய ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், சாதிய அமைப்பு  முறைமையிலும் இதனை அவதானிக்கலாம். இதற்காக கொலைகள், யுத்தங்கள் கூட  ஒரு சில நாடுகளில் உச்சம்  தொடுவதை அவதானிக்கலாம். புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் குடியேறி உள்ள தமிழர்கள் தமிழர்களையே ஒதுக்கும் கலாச்சாரமும் தொடர்வதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்வதோடு இதன் மூலம் தமது அடையாளங்களை பாதுகாத்து சுயகௌரவத்தை அடைந்த தனிநபர்களும், சமூகங்களும், இனங்களும் உண்டு.

இலங்கையில் மலையக சமூகத்திற்கு எதிராக ஆட்சியாளர்களின் ஒதுக்குதல் என்பது 1948ஆம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது. அவர்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டதோடு, பிரஜா உரிமைச் சட்டத்தின் மூலம் இலட்சக் கணக்கானோர் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. இந்திய, இலங்கை அரசுகளுக்கு இடையே நடந்த ஒப்பந்தத்திற்கு அமைய, மலையக உழைக்கும் மக்களை ஆடு மாடுகள் போல இருநாடுகளும் பிரித்துக் கொண்டதோடு, நூற்றுக் கணக்கானோர் நாடற்றவர்கள் ஆன நிலைக்கும் உள்ளாகியதாக வரலாற்று பதிவுகள் உள்ளன.

நாட்டின் பிரதமர் ஆக்கப்பட்ட தற்போது நிலையிலும்கூட, இம்மக்கள் சமூகம் வாக்களிக்கும் இயந்திரங்களாக வைக்கப்பட்டிருக்கின்றனரே தவிர, பிரஜைகளுக்கு உரிமைகள் அரசியல் கௌரவம் கொடுக்காது, மைய அரசுக்கு தூரமாகவே வைக்கப்பட்டுள்ளனர். நிர்வாக கட்டமைப்பின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கும், திட்டமிட்டவகையில் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத்துறையில் வாழும் மக்களின் கல்வித்துறையைத் தவிர, சுகாதாரம் உட்பட ஏனைய அனைத்து விடயங்களும் பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு கீழே இன்றும் உள்ளது.

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் ரீதியான பண்டா – செல்வநாயகம் முதல் அனைத்து ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது. அரசியல் யாப்பு ரீதியிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு உயர் கல்வி வாய்ப்புகளினின்றும் ஒதுக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டைத் தொடர்ந்து கொலைகளுடனான இன அழிப்பு இன்றும் தொடர்கின்றது.

நிலங்களை கையகப்படுத்தும் பேரினவாத ஆட்சியாளர்களின் செயற்பாடு கிழக்கு கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் ஆரம்பித்து, 2009ஆம் ஆண்டு ஆயுதம் மௌனிக்கப் பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரச திணைக்களங்கள் மூலமாகவும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை கொண்ட பௌத்தபிக்குகளின் தலைமையிலான தொல்பொருளியல் செயலணி வாயிலாக வழிபாட்டுத் தலங்களை  கையகப்படுத்தும் செயற்பாடு முன்னெடுத்து, தமிழர்களை அந்நியமாக்கும் செயற்பாடு மூர்க்கத்தனமாக நடந்து கொண்டிருக்கின்றது.

இன்னுமொரு பக்கம் முப்படைகளால் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதாக சர்வதேசத்தை கூறியபோதும் அவற்றை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்காத அவர்கள் தற்போது மக்களின் குடியிருப்பு காணிகளை, விவசாய காணிகளை தமதாக்க முயற்சிக்கின்றனர்.

தமிழர்களின் தாயக பூமியை சிங்களப் பிரதேசங்களோடு இணைத்தும் ,சிங்களப் பிரதேசங்களை தமிழர் பிரதேசங்களோடு இணைத்தும் புதிய குடியேற்றங்களை உருவாக்கியும் சொந்த மண்ணிலேயே  ஒதுக்கும் திட்டத்தினை நடைமுறைபடுத்தி  தாயகத்திலேயே  தமிழ் மக்களை அகதிகளாக்கி ஏதிலிகளாக வைத்திருக்கவும் முனைப்பு காட்டப்படுகின்றது.

தமிழர் தாயக அரசியல் விடயமாக சர்வதேசம் கொடுத்த வாக்குறுதிகளை  எல்லாம் சிதறடித்து விஷேடமாக 2009 இன அழிப்பின் பின்னர் 13+ என்றவர்கள் தற்போது நாட்டில் இன பிரச்சனை இல்லை. இருப்பதெல்லாம் அபிவிருத்தி மற்றும் பொருளாதார பிரச்சினையே என  தெரிவிப்பதோடு, தமிழர்களின் அரசியல் பிரச்சினையை பொருளாதார மற்றும் அபிவிருத்தி விடயத்திற்குள் முடக்கி வாழ்க்கையை அழிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நாட்டில் தொடரும் இன அழிப்பிற்கும், நடந்தேறிய யுத்தக் குற்றங்களுக்கும், பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதிகேட்டு, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து,  சர்வதேசத்தின் கண்கள் திறக்கப்படவில்லை. நடந்தது மனித உரிமை மீறல்களாவே உரையாடல்கள் அறிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது சாட்சியங்களை  கொலை செய்து நீதியை அகற்றும் செயலாகும்.

2009 ஆயுதம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமயங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களை மௌனிகளாக்கும் கைங்கரியம் நடந்து கொண்டிருக்கையிலேயே, 2019 உயிர்ப்பு தின குண்டுவெடிப்பு கொடூரம் நிகழ்ந்தது. இத் துயரச் சம்பவத்தை பின்னர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் 300-க்கு அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சிறைக்குள் வாடுகின்றனர்.

இவற்றுக்கு மத்தியில் இனவாத மதவாத பௌத்த அமைப்பான பொதுபல சேனாவைப் போன்று வடக்கிலும் சிவசேனை உருவாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்தியாவின் உருவாக்கம் என்றே சந்தேகம் தற்போது தோன்றுகின்றது. இவர்கள் இருவருக்கும் கூட்டு இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். மன்னார் பிரதேசத்தின் இந்து – கத்தோலிக்க சமயப் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் வடக்கில் காலூன்றி, இந்து கத்தோலிக்க பிரச்சினைகளை ஊதிப் பெருக்க மறைமுகத்திட்டம் வரையப்பட்டுள்ளதாகவே சிந்திக்கத் தோன்றுகின்றது. சமய அடிப்படைவாதம் நாடு முழுவதும் தொடர்வது என்பது அரசியலை மையப்படுத்தியே. பல்வேறு சமயத்தவர்கள் இனத்தவர்களை தூரமாக்கும் வன்முறையே இது.

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் எழுச்சியை அடக்கி ஒடுக்கி அழிக்கக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைசட்டம், கடந்த 42 வருடங்களாக ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதன் கொடூரத்தை தமிழ் மக்கள் நீண்டகாலம் அனுபவித்ததோடு, முஸ்லீம்கள் கடந்த மூன்று வருட காலமாக அனுபவித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, சிங்கள முற்போக்கு சக்திகளும் இந்தச் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் நாட்டின் பௌத்த சிங்கள அரசியல்வாதிகள், பிரிவினைவாத பயங்கரவாதத்தினை அடக்க இச்சட்டம் தேவை என கருத்துருவாக்கம் செய்துள்ளனர். இச் சட்டத்தின் துணையோடு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஒரே வர்க்கத்தினரே. அவர்கள் தமக்கு எதிராக எழும் மக்கள் எழுச்சியை அடக்க இச் சட்டத்தை தொடர்ந்திருக்கச் செய்துள்ளனர். இதுவும் ஒரு வகையான அடக்குதலும் ஒதுக்குதலும் எனலாம்.

இதனோடு ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் முன்மொழிவுகளோடு புதிய யாப்பு தயாரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் இன மத ரீதியிலான  ஒதுக்குதலுக்கு திட்டமிடுவதாகவே உணரமுடிகின்றது. பௌத்த அடையாளங்களின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒரே நாடு என்ற வாசகத்தை இனத்துவ அடையாளங்களை தனித்துவத்தையும் ஒதுக்குவதற்கு திட்டமிட்டு வருவதாக அறிய முடிகின்றது. முழு நாட்டினதும் சிங்கள பௌத்தம் தவிர்ந்த ஏனைய இனங்களின்  அரசியல் எதிர்பார்ப்புகள் ஒதுக்கப்படுவது மட்டுமல்ல, அடித்தட்டு ஏழைகளின் வாழ்விற்கான அபிலாசைகளும் நசுக்கப்படுவதற்கே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

முதலாளித்துவ ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தினரிடையே இன, மத, சாதி, பிரதேச வாதங்களை முன்வைத்து பிரிவினைகளை உருவாக்கியுள்ளது. இது இன அழிவுக்கும் சமய ரீதியிலான அழிவுக்கும் காரணமாக அமைகின்றது. உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்ட சக்தி  பெறுவதற்கான தடைகளைக் கண்டறியும் செயற்பாடும் நாட்டில் தூரமாக்கப்பட்டுள்ளது.

நாடு இனத்துவ சமய அடையாளம் கொண்ட உழைக்கும் வர்க்கத்திற்கே சொந்தமாகும். அவர்களின் வியர்வையும், இரத்தமும் நிலத்தில் விதைக்கப் பட்டுள்ளன. அதற்கான கௌரவத்தை தமதாக்கிக்கொள்ள வேண்டுமெனில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் பாதுகாப்புடன், சுயகௌரவத்துடனும் உரிமையோடு வாழ வேண்டும் இதுவே அடிப்படைத் தேவையாகும்.

இதனை உறுதிப்படுத்த, தற்போதைய சூழ்நிலையில் இனங்களின் நிலம், மொழி, பொருளாதாரம், கலை, கலாச்சாரம் ஆகிய தனித்துவ அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டு, சுதந்திர வாழ்வை உறுதிப்படுத்த அடித்தட்டு மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதற்கான புதிய சமூக வாழ்வு கலாச்சார கருத்தியல் உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இச் சக்திகளால் புதிய யாப்பு வரையப்பட்டு, மக்கள் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்கான மக்கள் சக்தியுடனான அரசியல் எழுச்சியை அறிவியல் ரீதியில் முன்னெடுக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் உள்ளது. தேர்தல் அரசியலுக்கு வெளியே இச்சக்தி கட்டி எழுப்பப்பட வேண்டும்.

இனவாதம், மதவாதம் என்பன அடித்தட்டு உழைக்கும் மக்கள் விரும்பாத விடயமாகும். ஆதலால் மக்கள் சக்தியை உருவாக்கும் பாரிய பொறுப்பும் சமய ஆன்மீக சக்திகளுக்கு உண்டு. அதேபோன்று உழைப்பாளர் அமைப்புகளுக்கும், அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கும் உள்ளன.

சமய, அரசியல் எல்லைகளையும் சுயநலத் தேவைகளையும் கடந்து, முதலாளித் துவவாதிகளின், பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத நீதி மைய மக்கள் சக்தியை பலப்படுத்துவதற்கான காலம் உதயமாகியுள்ளது. இது பல்வேறு சவால்களையும், இழப்புகளையும் சந்தித்து நீண்ட தூரம் செல்லவேண்டிய  பயணமாகும். இதனை உணர்ந்த சிந்தனையாளர்களாலும் அவர்களால் உருவாக்கப் படும் தியாகமிகு மக்கள் சக்தியாலுமே சாத்தியப்படும்”. என்றார்.

நேர்கண்டவர் பாலநாதன் சதீஸ்

Tamil News