பிள்ளை வருவான் – நம்பிக்கையில் தாய்
இலங்கை உள்நாட்டுப் போர் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் பிரச்சினை முடிவின்றி தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் காணாமல் போனவர்களின் உறவினர்களிடத்தில் நடத்தப்பட்டிரு க்கின்றது. ஆனால் இதுவரை அதற்கான தீர்வு சரியான முறையில் கிடைக்கவுமில்லை. அரசினால் இதுவரை வழங்கப் படவுமில்லை. இந்நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டங்களைப் பல்வேறு முறைகளில் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களைக் கண்டு கொள்ளத்தான் இங்கு யாருமில்லை.
போர்க்காலப் பகுதியில் குடும்பத் தலைவர்களை, பெற்றோரை, பிள்ளைகளை இழந்த பலர் இன்று அநாதையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தம் சொந்தங்களைத் தேடியலைந்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்படுவது மட்டுமல்ல, சில பெற்றோர் பிள்ளைகளுக்காகப் போராடி இறந்தவர்களும் இங்கு உண்டு. இவ்வாறு தன் கடைசிக் காலத்தில் தன் மகனுக்காகத் தனிமையில் போராடிக் கொண்டிருப்பவர்தான் செல்வராசா கமலாதேவி.
“எனது பெயர் செல்வராசா கமலாதேவி. நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையில் வசித்து வருகின்றேன். எனது கணவர் பெயர் பசுபதி செல்வராசா. எனது கணவர் தற்போது உயிரோடு இல்லை. என்ர மகன் செல்வராசா உஷானந்தன். இவர்தான் கடந்த யுத்த நேரத்தில் காணாமல் போனவர்.
எனக்கு ஒரே ஒரு மகன் தான் அவர். 2001.12.22 அன்று யாழ்ப்பாணம் கைதடிக்குப் போவதாகச் சொல்லிட்டு வெளியே போனவன், ஆனால் திரும்பி வரேல வருவார் வருவார் எண்டு எதிர்பார்த்திட்டு இருந்தனாங்கள். ஆனால் ஒரு தகவலும் கிடைக்கல. எங்க தேடுறது? யாரிட்ட கேட்கிறது? எண்டும் தெரியல. அப்போது யுத்தப் பிரச்சினை ஆரம்பிச்சிட்டு. வருவான் தானே, என்ன செய்றண்டு தெரியாம விட்டிட்டம்.
நீண்ட நாட்களாகியும் பிள்ளை வரேல. பின்னர் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிச்சிட்டு எல்லாரும் பாதுகாப்பு தேடி ஒட ஆரம்பிச்சிட்டினம். நாங்களும் பிள்ளைய எதிர்பார்த்திட்டு இருந்தம். அவன் வரேல. கடசியா போர் உக்கிரமடைஞ்ச நேரம் உயிர் பாதுகாப்பு தேடி நாங்கள் இரணைப்பாலையில் இருந்து மாத்தளன் போய் இருந்தனாங்கள். அந்த நேரம் 2009ஆம் ஆண்டு எறிகணை வீச்சில் என்ர கணவனும் இறந்திட்டார். என்ர கணவனை இழந்த சோகம் ஒரு பக்கம் ஆசையா பெற்றெடுத்த பிள்ளைய காணவில்லை எண்ட ஏக்கம் ஒருபக்கமா இருந்திச்சு. ஆறுதலுக்கும் யாருமில்லை.
இராணுவம் எங்கட இடத்த கைப்பற்றிய பிறகு மாத்தளன் சிறுகடல் ஊடாக மக்கள் நடந்து இராணுவத்திடம் போய் அகதியாக தஞ்சமடைந்தவர்கள். அவர்களோட நானும் சேர்ந்து போய் தஞ்சமடைஞ்சனான். பிறகு எங்களை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கொண்டு சென்று அங்கிருந்து வட்டுவாகலுக்கு கொண்டு போனவை. பின்னர் வட்டுவாகலில் வைத்து எங்களை இராணுவத்தினர் பேருந்தில் ஏற்றி வவுனியா செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் கொண்டு போய் விட்டார்கள். அங்க போயும் என்ர பிள்ளைய பற்றி எந்த தகவலும் இல்லை. என்ர கணவரும் இல்லை தனியாக தான் முகாமில இருந்தனான்.
பின்னர் எல்லோரையும் அவரவர் சொந்த இடத்திற்கு மீள்குடியமர்த்தினவை. 2010 ஆம் ஆண்டு 11 மாதம். 10 ஆம்திகதி இரணைப் பாலைக்கு கொண்டுவந்து விட்டவை. தற்காலிக வீடு தந்தவை. அதில தான் இருந்தன். பிறகு அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம் தந்தவையள். அது எனக்கு உதவி இல்லாத நிலையிலும் நிதி பற்றாக்குறையாலும் இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் இந்தது. பிறகு காணி விற்றுதான் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.
என்ர பிள்ளை காணாமல் போகேக்க 24 வயது சின்ன பிள்ளை. எதுவுமே அறியாத வயது. என்ன நடந்ததோ தெரியல அவனுக்கு. இப்ப என்ர பிள்ளைக்கு 45 வயது. என்ர பிள்ளை இப்போ எங்க இருக்கிறானோ என்ன செய்றானோ தெரியல. என்ர பிள்ளைய காணவில்லை எண்டு சொல்லி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தனான். அவை நீங்க போங்கம்மா நாங்கள் தேடி பார்த்திட்டு தகவல் சொல்றம் என்றவை. இவ்வளவு காலமாகியும் எந்தப் பதிலுமே சொல்லேல, பிறகு முல்லைத்தீவு காணாமல் போன அலுவலகத்தில் போய் என்ர மகனை காணால எண்டு சொல்லி பதிவு செய்தனான். ஆனால் என்ர மகனை பற்றி எந்த தகவலும் தெரியல.
காணாமல் போன உறவுகளுக்காக எவ்வளவோ போராட்டம் நடந்தது. ஆரம்பத்தில போனான். இப்போ போறதில்ல. எனக்கு வயதும் போயிட்டுது. துணைக்கு யாரும் இல்ல, போக போக்குவரத்து வசதியும் எங்கட இடத்தில இல்லை. என்ர பிள்ளை வருவான் எண்டு தான் எதிர்பார்த்திட்டு இருக்கிறன். எனக்கு என்ர கடைசி நேரத்திலையாவது என்ர மகனை பார்த்து அவனோட கொஞ்ச காலமாவது இருக்கோணும்.
என்ர பிள்ளை என்னட்ட வரவேணும். நான் இந்த வீட்டை என்ர காணில அரைவாசிய விற்று கட்டி கொண்டிருக்கிறன். என்ர பிள்ளைக்காக தான். அவனிட்ட இந்தவீட்டை முழுமைப்படுத்தி கொடுக்கோணும். என்ர பிள்ளை அம்மாவ தேடி வருவான் எண்ட நம்பிக்கைல தான் இருக்கிறன்.”
இப்படி கூறும் போது அந்த அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும், வேதனையும் நிறைந்ததாகத்தான் இருந்தது. தன்னந்தனியாக நின்று பெற்ற மகனை தேடியலையும் இந்த அம்மாவின் கதறலுக்கும், கண்ணீருக்கும் யார் பொறுப்பு?
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இனப் பிரச்சினை தான். பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையைத் தொலைத்துவிட்டு கரம் நீட்ட துணையின்றி நடுவீதியில் தவிக்கும் அந்த அம்மாவின் நிலை வேடிக்கை பார்க்கும் இந்த உலகிற்கு புரியப்போவதில்லை.
பிள்ளையை தொலைத்த வலி என்னவென்று ,பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு மட்டும் தான் தெரியும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரசிற்குத் தெரியப் போதில்லை.
தமிழ்பேசும் அரசியல் தலமைகளே! தம் உறவுகளைப் பல வருடங்களாகத் தொலைத்து விட்டு இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என எத்தனையோ தமிழ் பேசும் எம் உறவுகள் வீதிகளிலே உண்ணாமல், உறங்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் நிலைப்பாடு பற்றி அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியதும், நீதியினை பெற்றுக் கொடுப்பதும் உங்களின் கடமையே! புரிந்து செயற்படுங்கள்.
- உக்ரேனியர்களுக்கு ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? | வேல் தர்மா
- ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். | பேராசிரியர் குழந்தை
- இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்