தலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: அவுஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம் 

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிய குடும்பம் ஒன்று, தங்கள் 17 வயது மகன் தலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ளதாகவும் தலிபான் படையினரால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளது. 

“அவன் காபூலில் தன்னந்தனியாக இருக்கிறான். காபூலை தலிபான் கைப்பற்றியதால் மிகுந்த கவலையுடனும் அச்சத்துடனும் இருக்கிறான். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறோம்,” என கார்டியன் ஊடகத்திடம் அவரது தந்தை கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானை விட்டு அவுஸ்திரேலிய படைகளும் கூட்டுப்படைகளும் வெளியேறி விட்டதால், அந்த 17வயது சிறுவன் வெளியேறுவதற்கு சில வாய்ப்புகளே உள்ளதாகக் கூறப்படுகின்றது.

தலிபானால் கடும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஹசாரா இனத்தைச் சேர்ந்த இக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினருடன் இணைந்து தங்களது சரக்கு வாகன நிறுவனம் செயல்படுவதாக தாலிபான் எண்ணியதால், 2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்ததாகக் கூறுகிறார் அச்சிறுவனின் தந்தை.

பின்னர் அவர் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 2017 ஆண்டிலேயே அச்சிறுவனின் தாய்க்கும் பிற 6 குழந்தைகளுக்கு அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 17 வயது சிறுவன் இக்குடும்பத்தினரின் வளர்ப்பு குழந்தை என்பதால் அவருக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.

மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக உடைய நாடாக ஆப்கானிஸ்தான் இருப்பதால், தாய் இறக்கும் பட்சத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளை தத்தெடுப்பது என்பது ஆப்கானிஸ்தானில் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், தாய் இறந்ததும் அவரது சகோதரியே அச்சிறுவனை (தற்போது ஆபத்தை எதிர் கொண்டுள்ள) தத்தெடுத்திருக்கிறார்.

அவுஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தின் கீழும் அவ்வாறு தத்தெடுக்கும் முறை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அச்சிறுவனுக்கான விசாவை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்திருப்பதும் அதைத் தொடர்ந்து அச்சிறுவன் தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியிருப்பதுமே தற்போதைய பிரச்சனை.

“முதலில் விசா நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் அச்சிறுவனுக்கு விசா பெறுவதற்கான தகுதிகள் உள்ளன. தவறாக எடுக்கப்பட்ட முடிவினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது,” என்கிறார் அக்குடும்பத்தின் வழக்கறிஞரான கிரிகோரி ரோஹன்.

“காபூல், பஷ்தூன் மக்கள் வாழும் பகுதியாகும். அங்கு உள்ள 99 சதவீதமான பேர் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் ஒரு ஹசாரா இனச்சிறுவனை அவர்கள் கண்டறிவது மிகவும் எளிது,” என்கிறார் அச்சிறுவனின் தந்தை.

அவுஸ்திரேலிய அரசு தனது மகனை மீட்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர், அவன் எப்படி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற போகிறான் எனத் தெரியவில்லை என்று அங்குள்ள நிலைமையை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தனிப்பட்டவர்களின் விசா நிலைக் குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது எனக் கூறியுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர், அவுஸ்திரேலிய மனிதாபிமான மற்றும் புலம்பெயர்வு திட்டங்களின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களுக்கும் அங்கிருந்து இடம்பெயர்ந்த ஆப்கானியர்களுக்கும் விசாக்கள் கிடைப்பதை அவுஸ்திரேலிய அரசு உறுதிச்செய்யும் எனத் தெரிவித்திருக்கிறார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021