இலங்கையில் அரசினாலும், அரச கட்டமைப்புகளினாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு குற்றவியல் நீதிப்பொறிமுறைகளின் ஊடாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியாது.
இவ்விடயத்தில் இலங்கையின் தந்திரத்துக்கு இசைந்துகொடுத்து சர்வதேச கட்டமைப்புக் கள் தம்மைப் பலவீனப்படுத்திக்கொள்ளக்கூடாது என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இம்முறை ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் விவகாரங்கள் மிகையான அவதானம் பெற்றிருந்த போதிலும், நாம் முக்கிய இராஜதந்திரிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்களின் கீழ் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான எமது நிலைப்பாட்டினைத் தெரியப்படுத்தினோம்.
சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறைக்குப் பதிலீடாக ஒரு உள்நாட்டு குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுவதற்கான இலங்கையின் தந்திரோபாய முயற்சி மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து நாம் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடன் எமது கரிசனைகளை முன்வைத்தோம்.
அதேபோன்று அரசினாலும், அரச கட்டமைப்புகளினாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்கள் மற்றும் மீறல்களுக்கு இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதிப்பொறிமுறைகளின் ஊடாக அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியாது எனச் சுட்டிக்காட்டியதுடன் இலங்கையின் தந்திரத்துக்கு இசைந்துகொடுத்து சர்வதேச கட்டமைப்புக் கள் தம்மைப் பலவீனப்படுத்திக்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் நம்பகமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான பாதையில் சில முக்கிய விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துகின்றோம்.
முதலாவதாக வலுவான சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறைகள் நிறுவப்படவேண்டும். இரண்டாவதாக உலகளாவிய அதிகார வரம்பெல்லையைப் பயன்படுத்தி அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைப்போன்று ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஏனைய நாடுகளும் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்கவேண்டும்.



