அவசரமாக கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல்கள்!

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தமது அலுவல்பூர்வ மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதையடுத்து அவரது இல்லத்துக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்  நுழைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏற்கெனவே பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடரணி கடற்படை தளத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளும் அங்கு தயார்நிலையில் இருந்த கப்பலில் ஜனாதிபதி வாகனத்தொடரணியில் இருந்து உடைமைகள் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் சமூக ஊடகங்களில்  பகிரப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையில் தீவிரம் ஆகியுள்ள நெருக்கடி குறித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை பிற்பகலில் அழைப்பு விடுத்தார்.

ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கோட்டாபய ராஜபக்ஷவும், மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும் என இருவருமே பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றபடியால், தற்போது சட்டவிரோதமாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தமது ட்விட்டர் பதிவில், “சட்டவிரோத ஆட்சியாளர்களின் ஆளுகையை பாதுகாக்க அவர்களுடன் காவல்துறைத் தலைவர் இணைந்து நடத்திய சதியே சட்டவிரோத ஊரடங்கு என்றும் இந்த புற்றுநோய் சர்வாதிகாரத்துவத்தை வீழ்த்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.