இலங்கை நெருக்கடி: “பல கட்சி ஆட்சிக்கே இணங்குவோம்”ரணிலுக்கு சஜித் பதில்

பல கட்சி ஆட்சிக்கே இணங்குவோம்

இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பல கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆட்சிக்கே இணங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தேசத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக வடிவமைக்கப்பட்ட எந்தவொரு செயலிலும் ராஜபக்ஷக்கள் ஈடுபடக்கூடாது என்பதே அடிப்படை யதார்த்தம். நாங்கள் இந்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின் நகல்களை இணைத்துள்ளேன்,” சஜித் கூறியுள்ளார்.

மக்கள் போராட்டம் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மே 9ஆம் தேதி பதவி விலகியபின், ரணில் விக்ரமசிங்க மே 12ஆம் இலங்கை பிரதமராகப் பதவியேற்றார்.

அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில்,தினேஷ் குணவர்தன – அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, பேராசியரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிநாட்டமைச்சு,பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி, வீடமைப்பு, கஞ்சன விஜேசேகர– மின்சக்தி மற்றும் எரிசக்தி என நால்வர் இன்று இணைந்தனர்.

இந்தப் பதவி பிரமாண நிகழ்வு கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (14) முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

இவர்கள் நால்வருமே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ சார்ந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களாவர். மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையிலும் இவர்கள் வெவ்வேறு அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

இதேவேளை, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவதும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரமாக அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆட்சிக்கே இணங்குவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் சஜித் பிரேமதாச.

Tamil News