முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனி

44 Views

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த நடைபவனியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், இன்று மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரப் பிரகடனம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

நாளை நடைபெறவுள்ள பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனிக்கு எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் பாதிரியார்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மீனவ சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்கங்கள்,ஊடகவியலாளர்கள், மாணவர்கள்,அனைத்து பொதுமக்களையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு நடைபவனியானது பொத்துவிலில் ஆரம்பித்து திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் வருகைதந்து அன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி கல்லடி பாலத்தில் விநியோகிக்கப்பட்டு நாளை மறுதினம் (16ஆம் திகதி)திங்கட்கிழமை திருகோணமலை நோக்கி பயணம் அமையும்.

17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு உயிர்நீர்த்த,படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

இதேபோன்று யாழ்ப்பாணத்திருந்தும் நடைபவனி ஆரம்பமாகி 18ஆம் திகதிமுள்ளிவாய்க்காலினை வந்தடையும். இன்று எங்களுக்காகவும் தமிழ் உறவுகளுக்காகவும் இளம் தமிழ் சமூகம் இந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply